பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்197

 

திருவடையாளங்கள் ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி இவ்வடையாளங்களை உடையார் ஒருவராகில் அவர் திருவதிகை வீரட்டானேசுவரரேயாம் என்று கூறுவது இப்பதிகப் பாட்டுத்தோறும் காணும் கருத்து. -(1) கந்தருவம் - கானம். -(3) முண்டம் - திரிபுண்டரம் - மூன்று கீற்றாக அணிந்த நீறு. பிண்டத்தின் ..... பெற்றியார் - பிண்டம் - உலகத்தின் சிருட்டி - உலகத்தோற்றம். அதன் அமைப்பாகிய விதியினுக்குக் காரணர். -(4) கண்டம்....ஆடாவனே - கழுத்தைச் சுற்றிப் பாம்பை யணிந்தவர். -(6) சடைமேல் இழித்திடும்மே - சடைமிசை வைத்து அங்கு நின்றும் சிறு பனிபோலாக உலகில் வரும்படி இறங்கச் செய்யும். -(7) குழல் - கொக்கரை - தாளம் - மொந்தை - இவை பூதகணங்கள் முழக்கும் இயங்கள். கரணம் - கூத்து வகைகளுள் ஒன்று. "கரணமிட்டுத் தன்மைபேசி" (தேவா). கனவின்கண் - தலைவி தலைவனைக் கனாவிற் கண்ட கூற்று. -(8) கோலாலம் - மிக்க ஓசை - கூக்குரல். "கோலாலமாகிக் குரை கடல்வா யன்றெழுந்த, வாலாலம்" (திருவா). - (9) தெய்வநாறும் வம்பு - இயற்கையாகவே தெய்வமணம் வீசும். அண்டகோசம் - அண்டங்கள் எல்லாம் சேர்ந்த கூட்டம். -(10) காமக்கோட்டி - காமக்கோட்டத்தினுள் விளங்குகின்ற அம்மை. காமாட்சியம்மையார். கோட்டம் - கோயில்.

XI திருச்சிற்றம்பலம்

போற்றித் திருத்தாண்டகம்

எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி; யெரிசுடராய் நின்ற விறைவா போற்றி;
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி; கொல்லுங்கூற்றொன்றையுதைத்தாய் போற்றி;
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி; கற்றாரிடும்மை களைவாய் போற்றி;
வில்லால் வியனரண மெய்தாய் போற்றி; வீரட்டங் காதல் விமலா போற்றி.

1

திருச்சிற்றம்பலம்

போற்றி - இகர வியங்கோள் விகுதிபெற்றுக் "காப்பாற்றுக" என்ற பொருளில் வந்ததென்பர் நச்சினார்க்கினியர். வணக்கம் என்றலுமாம். போற்றி, போற்றி என்று துதிகள் பலவும் சொல்லுதலால் இப்பெயர் பெற்றது. -(1) எல்லாஞ் சிவன் என்ன நின்றாய் - சிவனது எங்கும் நிறைந்த தன்மை (சர்வ வியாபகத்துவம்) துதிக்கப்பட்டது. நின்ற திருத்தாண்டகத் திருப்பதிகமும், திருவுருத்திரமும் பார்க்க. கொல்லார் - கொல்லும் தன்மை பொருந்திய. கொல் - முதனிலைத் தொழிற் பெயர். -(4) தவநெறிகள் சாதித்து நிற்றலாவது தவ நெறியைக் காட்டுவித்தும், அந்நெறி நின்றோர்க்குத் தம்மையடையு நிலைகொடுத்தும் விளங்குதல். கூம்பி - மனம் ஒடுங்கி. குறிக்கொண்டிருக்கும் - பார்த்து அருளும். -(6) பழையாற்றுப் பட்டீச்சுரத்தாய் - பழையாறு - பட்டீச்சுரமென்பன ஒன்றற்கொன்று தொடர்ந்தாற்போல் அணிமையிற் உள்ள தலங்கள். திருஆன்பட்டி என்னும் திருப்பேரூர்ப் பட்டீச்சுரத்தினின்றும் வேறு பிரித்துணர வைத்ததுமாம். வீடுவார் வீடருள - விடுவார் என்றது எதுகை நோக்கி வீடுவார் என நின்றது. பிற பற்றுக்களைவிடுவார்க்கு. நான்காம் வேற்றுமையுருபு விரிக்க. -(8) தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி - திருவாசகம் (போற்றி - 131) பார்க்க. தொழுதகையினையுடையாரது என்றும், தொழும் தகைமையினாலே என்றும் உரைக்க நின்றது. -(10) தக்கணா - தக்கணம் - தென்றிசை. தெற்கு நோக்கி ஆடுபவன். தெற்கு நோக்கி வீற்றிருப்பவன். "தென்மு கத்தின்முக மாயி ருந்தகொலு" (தாயுமானார்). எக்கண்ணும் கண்ணிலேன் - எவ்வகையானும் வேறு பற்றுக்கோடு இல்லேன். கண் - களைகண். இப்பதிகத்துள் 82 போற்றி என்ற துதிகள் உள்ளன. திருக்கயிலைப் போற்றித் திருத்தாண்டகப் பதிகங்கள் மூன்றும் பார்க்க.