சிறப்புப் பற்றிக் கூறுவதுடன் அக்கெடிலத்தின் தொடர்பு பற்றியே வீரட்டத்தைக் கூறுவது காண்க. -(5) திரிபுராந்தகம் - ஒருதலம். -(7) திருவேட்டி - திருவேட்டீசுரன்பேட்டை (சென்னை) என்பர். -(10) அயோகந்தி - அயவந்தி; திருச்சாத்தமங்கையின் திருக் கோயிலின் பெயர். ஆன்பட்டி - திருப்பேரூர் (கொங்கு நாடு); இப்பெயர் பழங் காலத்துக் கல்வெட்டுக்களிற் கண்டது. இப்பதிகம் பன்னிரண்டு திருப்பாட்டுக்கள் கொண்டது. 1410. (வி-ரை.) புல்லறிவிற் சமணர். "புன்மையேபுரி" (1344). "புல்லறிவோர்" (1360). அறிவின் புன்மையாவது "நல்ல நினைப்பொழிய நாள்களிலாருயிரைக், கொல்ல நினைப்பதுவும் குற்ற" மற்றும் எண்ணுவதுமாம். புல்லறிவிற் பல்லவனும் என்று கூட்டியுரைப்பதுமொன்று. பல்லவனும் - உம்மை முன்னர்ப் பொல்லாங்கு புரிந்தோனாகிய அவனும் என இழிவு சிறப்புப் பற்றியது. சோழர்களுட் பல்லவர் மரபினர் அந்நாளில் சோழநாட்டை ஆண்டனர். "உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்" (குறிஞ்சி - கோயில் - 4) என்பது நம்பிகள் திருவாக்கு. இவர்கள் காடவர் எனவும் பெறுவர். மேல்வரும் பாட்டில் "காடவனும்" என்பதும் காண்க. பழவினைப் பாசம் பறிய - சமணர் சொற்கேட்டு அரசன் அவஞ்செய்தமை அவனது பழவினைப் பாசத்தாலாகியது; இப்போது அது நீங்கும் காலம் வந்து நீங்கவே. அல்லல் ஒழிந்து - அல்லல் - சமண் சார்பாலாகிய துன்பநிலை. பாசம் பறிந்து ஒழிந்ததாதலின்உண்மையுணர்ந்து துன்பத் தொடக்கினின்றும் நீங்கினான் என்க. அங்கு - (பாடலிபுத்திர நகரிலிருந்து) திருவதிகையில். ஆண்ட அரசினைப் பணிந்து - அமணர் மொழிகேட்டு அறியாமையால் அவரிடத்து அபசாரம் செய்தமையாலே அக் குற்றத் தீர்வின் பொருட்டு அவரை வணங்கி மன்னிப்புக் கேட்டு. வல் அமணர்தமை நீத்து - கடக்கக்கூடாத வலிய அமணரின் தொடக்கினையும் விட்டு - சமண சமயத்தையும் விட்டு. மழவிடையோன் தாள் அடைதலாவது - சைவ சமயம் புகுந்து சிவனுக்காளாதல். சிவநெறி யடைவதற்குக் குரு வழி காட்டவேண்டியிருத்தலின் ஆண்ட வரசினைப் பணிந்து அவர் வழிப்படுத்துதலால் விடையோன் றாள் அடைந்தார் என்பதாம். 145 1411. | வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின்கட் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்திலமண் பள்ளியொடு பாழிகளுங் கூடவிடித் துக்கொணர்ந்து குணபரவீச் சரமெடுத்தான். |
146 (இ-ள்.) வெளிப்படை. முத்திநெறியினை அறியாத சமணர்களுடைய மொழிகள் பொய் என்று கண்டு மெய்யினை உணர்ந்த காடவ அரசனும், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணர் பள்ளிகளையும் பாழிகளையும் ஒருங்கே இடித்துக் கொண்டு வந்து, திருவதிகை நகரில், நுதற்கண்ணுடைய சிவபெருமானுக்குக், குணபரவீச் சரம் என்ற திருக்கோயிலைக் கட்டினான். (வி-ரை.) வீடறியா - முத்தி நெறியினை அறியாத. பொருளல்லாவற்றைப் பொருளென்றுணரும் மருளினையுடைய. வீடு - வீடு அடையும் நெறியைக் குறித்தது. வீடு அறியாமையின் பிறந்துழல்பவர் என்பதாம். வீடு - தமது சமயக் கொள்கைகள் வீடுகின்ற - அழிகின்ற - தன்மையை அறியாத என்ற குறிப்புமாம். வீடு - |