1412. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறாகிய நாளிலே, திருப்பணிகள் செய்கின்ற, இனிய தமிழினுக்கு அரசராகிய வாகீசத் திருமுனிவரும் பிறையைச் சூடிய சடையின்மேல் பாம்பினை அணிந்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்கள் பலவற்றையும் போய் வணங்கி, அவரது நாமஞ் சொல்லித் துதிக்கும் திருப்பதிகங்களைப் பாடித், தொண்டு செய்யும் பொருட்டுத் தொடர்ந்து எழுவாராகி, 147 1413.(இ-ள்.) வெளிப்படை. திருவதிகைப் பதியின் பக்கத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூரும், அருள் தருகின்ற திருவாமாத்தூரும், திருக்கோவலூரும் முதலாகப் பொருந்திய திருத்தலங்கள் பிறவற்றையும் வணங்கி, வளப்பமுடைய தமிழ்ப் பதிகங்களைப் பாடி, இடபத்தையுடைய சிவபெருமான் மகிழும் திருப்பெண்ணாகடத்தைப் பெருகும் விருப்பத்துடன், அணைந்தனர். 148 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. 1412. (வி-ரை.) இந்நாளில் - இவ்வாறு குணபரன் வந்து சிவபெருமானை அடைந்து குணபரவீச்சர மெடுத்த செய்தி நிகழ்ந்த இக்காலத்தில். திருப்பணிகள் .... முனியும் - திருப்பணிகள் - மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் செய்தனர். இவை குறிக்கப் பன்மையாற் கூறினார். இன் தமிழ்க்கு மன் - இனிய தமிழுக்கு அரசு. இனிமையாவது ஒப்பற்ற - துன்பம் சிறிதும் கலவாத - வீட்டின்பம் பெற வழிகாட்டுவது. வாகீசத் திருமுனி - முனி என்றது அவரது முழுத் துறவுநிலை பற்றியது. வாகீசர் என்ற வடமொழி வழக்கினை இன் தமிழ்க்குமன் எனத் தமிழ் மொழியால் விளக்கினாராதலின் கூறியது கூறலன்மையுணர்க. "அது தான் ஞான திரோதகமாய் மறைத்துக்கொடு நிற்றலான்" என்ற (சிவஞான போதம் - 4 சூத். 2. அதி) விடத்து மலத்தின் திலக்கணம் வடமொழி வழக்குப் பற்றிக் கூறுவார் "ஞான திரோதகமா யெனவும், அதனைத் தமிழ் மொழியான் விளக்குவார் மறைத்துக்கொடு நிற்றலானெனவும் கூறினாராகலான் அது கூறியது கூறலன்மை யுணர்க" என்று எமது மாதவச் சிவஞான முனிவர் உரைத்தது காண்க. மதிச்சடைமேல் பன்னாகம் அணிந்தவர் - "பாம்போடு திங்கள் பகைதீர்த்தாண்டாய்" (திருப்புகலூர் - தாண்டகம்) முதலிய திருவாக்குகள் காண்க. பன்னாகம் - பன்னகம் என்பது பன்னாகம் என வந்தது. பாதங்களால் நடக்காத உயிர் என்பது பொருள். பல் - நாகம் என்று பிரித்துப் பல பாம்புகளை என்றலுமாம். பதிபலவும் சென்று இவற்றை மேல்வரும் பாட்டிற் கூறுவார். நாமம் சொல் தமிழ் - என்க. சிவன் பெயர்களையே சிந்தித்துப் பலதிறத்தரலும் போற்றும் தமிழ்ப் பதிகங்கள். நாமம் - புகழ் - பெருமை என்றலுமாம். தொண்டு - இங்குக் கைத்தொண்டாகிய உழவாரப் பணியும் தியானமுமாம். தொடர்ந்து - தொண்டு செய்யாத தீய நாட்கள் இடையிட்டுக் கழியாமல் ஒன்றன்பின் ஒன்றாக நன்னாட்களே தொடரும்படி. "துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே" (நனிபள்ளி - நேரிசை) என்பது நாயனாரது கருத்து. "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" "சாராதே சாலநாட் போக்கினேனே" என்ற கருத்துக்களையும் கருதுக. எழுவார் - எழுவாராகி; முற்றெச்சம். எழுவார் - அணைந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. பதிபலவும் சென்று இறைஞ்சித் .... தொடர்ந்து எழுதல் சிவஞானபோதம் பன்னிரண்டாஞ் சூத்திரத்துள் விளக்கப்பட்டது. நாயனார் ஞானச்சரியையை விளக்க. |