வந்த ஆசாரியராதலின் அணைந்தோர் தன்மையைத் தமது வாழ்க்கையில் நடந்து காட்டினர் என்க. "ஆலயந் தானும் அரனெனத் தொழுமே" என்பது சூத்திரம். நாயனார் பல தலங்களையும் சென்று வணங்கியதும் பதிகம் பாடியதும் பணி செய்ததும் பிறவும் இக்கருத்தே பற்றியன. 1413.(வி-ரை.) திருவெண்ணெய்நல்லூர் - தலவிசேடம். 221-ம் பாட்டின் கீழ்(பக்கம் - 253) உரைக்கப்பட்டது பார்க்க. நாயனார் பாடியருளிய பதிகம் சிதலரிக்கப்பட்டு மறைந்தது போலும்! அருளு திரு ஆமாத்தூர் - தலவிசேடம்:- பசுக்களுக்குத் தாயாக இறைவன் அருளும் தலம் என்பது. பசுக்கள் - உயிர்வருக்கங்கள். கோமாதுருபுரம் என்பது வடமொழிப் பெயர். தசரத இராமன் பூசித்த செய்தி, நாயனாரருளிய திருக்குறுந்தொகையுள் "இராமனும் வழிபாடுசெ யீசன்" என்று பேசப்பட்டது. பிருங்கி முனிவர் பூசித்ததுச் சாபம் நீங்கின தலம் என்பது வரலாறு. பிருங்கி முனிவர் சத்தியைப் பூசிப்பதில்லை என்ற நியதி பூண்டார். "சத்தி யருடரிற் சத்த னருண்டாம்" (திருமூலர்) என்றபடி சத்தியும் சிவமும் வேறல்லர்; குணமும் குணியுமாகிப் பொருள் ஒன்றேயாதலின். அம்மையார் ஒரு பாகம் பெற்றபோதும் வண்டு உருவெடுத்துத் துளைத்துச் சிவனையே பிருங்கி வழிபட்டனர்; அதனால் சத்தியருளின்றிச் சத்தி கெட்டனராதலின்நடக்கும் வலிமையின்றி நின்றபோது சிவத்தினருளால் மூன்றாவது கால் பெற்றனர்; சத்தி சாபத்தால் இத்தலத்தில் வன்னிமர உருவெடுத்தனர்; பின்னர் அம்மையாரை வழிபட்டு அவரருளாற் சாப நீங்கப்பெற்றனர்; அதற்குச் சான்றாக இங்கு அம்மையாரது கோயிலில் நிருதி. மூலையில்வன்னிமரம் தலமரமாக உள்ளது; என்பன தல வரலாறு. சுவாமி கோயில் கிழக்குப் பார்த்தும், எதிரில் அம்மையார் கோயில் மேற்குப் பார்த்தும், வெவ்வேறாக உள்ளதொரு தலச் சிறப்பாகும். சுவாமி - அழகியநாதர்; அம்மையார் - அழகியநாயகி. சுவாமி பெயரை "அழகன்" என்று திருக்குறுந்தொகையிலும், "அழகியரே" என்று திருத்தாண்டகத்திலும் நாயனார் அருமைபெறப் போற்றுதல் காண்க. தீர்த்தம் - பம்பையாறு. மரம் - வன்னி. பதிகம் 5. இத்தலம் விழுப்புரம் என்ற புகைவண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே மட்சாலைவழி மூன்று நாழிகையளவில் அடையத்தக்கது. இத்தலத்திற்கு நாயனார் அருளியன இரண்டு பதிகங்கள் கிடைத்துள்ளன. I திருச்சிற்றம்பலம் | குறுந்தொகை |
| மாமாத் தாகிய மாலயன் மால்கொடு, தாமாத் தேடியுங் காண்கிலர் தாண்முடி; ‘யாமாத்தூரரனேயருளா'யென்றென், றேமாப் பெய்திக்கண்டாரிறையானையே. |
திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- அஞ்ஞானத்தால் தாமாகத்தேடி யறியப்படாத சிவனை "அருளாய்" என்று வணங்கி யயன்மாலுங் கண்டனர். அவனைச் சிந்தியாதவர் தீவினையாளரேயாம்!. நான் உள்ளே நினைந்தேன். நினைதலும் வஞ்ச வாறுகள் வற்றின; பத்தி வெள்ளம் பரந்தது; அவன் எமையாளுடை யீசன்; கண்ணிற்பாவையன்னான்; ஆனஞ்சாடுபவன். அவனிருக்குமிடம் ஆமாத்தூர். அவனுக்கு என் உள்ளம் இடமாகக்கொண்டு இன்புற்றிருப்பேன். அரனே என்றழைத்தலும் தேமாங்கனி போலத் தித்திக்கும். நீவிரும் நாளும் நினைமின்கள் என்று உலகரை வழிப்படுத்தியது. பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) மாமரத்து; மா - பெரிய; மாத்து - அறியாமை மாத்து - மகத் - பெரியது என்று கொண்டு பெருமை கொண்டவர்களாகிய என்ற |