பக்கம் எண் :


204திருத்தொண்டர் புராணம்

 

மன்றிப் பண்பாலும் அழகியர் என்பது குறிப்பு.-(2) வீணையேந்தி - "மிக நல்ல வீணை தடவி" (பிள்ளையார் - கோளறு பதிகம் 1). "கங்காளராய் வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (பொது - விருத்) என்றபடி சங்காரத்தின்பின் புனருற்பவம் நிகழ்த்துதற்கு நாத தத்துவத்தை யுழக்குவது வீணை வாசித்தல் எனப்படுமென்ப. இடங்கை வீணையேந்தி (6) எனப் பின்னரும் இப்பதிகத்துக் கூறுதல் காண்க. கந்தாரம் தாம் முரல - வீணை ஒலித்தலை முரலுதல் என்பது மரபு. பேச்சுப்போன்ற தென்பது. காந்தார மென்பது எதுகை நோக்கிக் கந்தார மென நின்றது. காந்தாரம் ஒருபண் - "வேதத்தொலிகொண்டு வீணை கேட்பர்" (வெண்காடு - தாண் -). வீணை ஒலி உள்ளங்கவர்ந்து இன்பஞ் செய்தற்குறிப்பு. நொந்தார் போல் - விளக்கமாக உள்ள வெம்மை ஊரறியாது கேட்கின்றாய் என்று வருந்தினார் போன்று, "என்னை ஒருவரு மறியீ ராகில்" (211) என்று திருவெண்ணெய் நல்லூர்ச் சபையில் அந்தணரைக் கிழவேதியராய் வந்த இறைவர் கேட்ட குறிப்பு. தாமரைமேல் வண்டுயாழ் செய் - நாம் வீணை வாசிப்பதன்றி நம்முரில் வண்டுகளும் யாழ்மரலும் என்பது குறிப்பு. -(3) கட்டங்கம் - மழு. இட்டங்கள் - விரும்பும் சொல். விருப்பமுண்டாக்கும் மொழிகள். ஆகுபெயர். பட்டிமை - வஞ்சனை, "இகமும் பரமு மில்லை யென்று, பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி" (திருவிடை. மும் - கோ 7). பார்ப்பாரைப் பரிசு அழித்தல். தம்மை அகத்து வைப்பாரது பசுத்தன்மை கெடுத்தல் என்பது குறிப்பு. பார்த்தால் பெண்மையழியும் என்பது. "பற்றி நோக்கிப் பாலைப் பரிசழியப் பேசுகின்றார்." (வெண்காடு - தாண். 7) விள்ளர் - பலி கொள்ளாமைக்குக் காரணம் சொல்லார். வேறொன்றாயினும் சொல்லார். -(4) பசைந்த - அன்புகொண்ட. பிசைந்த - வடித்தெடுத்த, பிசைவிக்கும் எனப்பிறவினையாக்கி அன்பர் மனத்தை அழகினாற் கொள்ளை கொண்டு கனிவிக்கும் என்றலுமாம். "கல்லைப் பிசைந்து கனியாக்கி." இப்பொருட்கு அன்பர் மனத்தை எனச் செயப்படுபொருள் வருவிக்க. -(5) உருள் - சக்கரம். உருளும் தன்மை என்றலுமாம். "சென்றுருளுங் கதிரிரண்டும்" (தாண்டகம்) குறைவில்லை ஆயினும் ஊர்தி வெள்ளேறு பின்னர்8-வது திருப்பாட்டும் காண்க. "கடகரியும் பரிமாவும்" என்ற திருவாசகக் கருத்துக் கருதுக. பொருளுடையரல்லர் இலருமல்லர் - பொருள் - உடைமை. பிச்சைக்கு வருதலால் பொருளிலரென்றும், உலகம் எல்லாமுடையாராதலால் இலருமல்ல என்றும் உரைக்க நின்றார். அவர் பலிக்கு வந்தது ஒரு பொருட்படுதியதுமன்று; பொருளற்றதுமன்று என்றலுமாம்.-(7) கபாலம் - பலிப்பாத்திரம்.-(8) கண்காட்டி - "நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்ப தென்னே" (திருவிருத்தம்) என்றபடி அருட்பார்வை செய்து. நிறை - பெண்மை நலம். பசுத்துவம். என்றும்...இடர் செய்கின்றீர் - இவ்வாறு செய்தல் உமது நித்தமாகிய தொழில்.-(9) கல்லலகு - இயங்களுள் ஒருவகை. எதிரெழுந்தேன் எங்கும் காணேன் - கனவிழந்த நிலை. -(10) மழுங்கலா நீறு - என்றும் அழியாத திருநீறு. நீறு மழுங்கலா மார்பர் என்று கூட்டி நீறு நீங்காத மார்புடைவர் என்றலுமாம். அழுங்கினார் - துன்பப்பட்டுத் தம்மை யடைந்தவர்.

திருக்கோவலூர் - வீரட்டங்களுள் ஒன்று. 467-ன் கீழ் உரைத்தவையும், மெய்பொருணாயனார் புராணத்திறுதியில் தலவிசேடம் (பக்கம் 606) உரைத்தவையும் பார்க்க. மலையமானாட்டிற் பெண்ணையாற்றின் கரையில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் திருமுடிக்காரி என்ற அரசன் அரசாண்டனன் என்பதும், அவனே கபிலராற் பாடப்பட்டானும் கடையெழு வள்ளல்களி லொருவனும் ஆவான் என்பதும் பத்துப்பாட்டுப் பழைய வரலாற்றினாலறியப்படும்.