பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்205

 

இங்கு நாயனார் பாடியருளிய "வளத்தமிழ்"களுள் ஒரு பதிகமே நமக்குக் கிடைத்துள்ளது,.

திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனே னழுக்குப் பாயும்
பொத்தையே போற்றி நாளும் புகலிட மறிய மாட்டே
னெத்தைநான் பற்றி நிற்கே? னிருளற நோக்க மாட்டாக்
கொத்தையேன் செய்வ தென்னே? கோவல் வீரட்ட னீரே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு :- இப்பிறவியின் தீமையை உணராது மயங்கியும், புலன்களுக்கேவல் செய்தும், உலக இன்பங்களுள் அழுந்தியும், மக்கள் மனைவி சுற்றம் என்னும் கூட்டத்திடை யாட்டப்பட்டும் துன்பமுறும் மனிதர்கள் அவற்றிற் செலுத்தும் சிந்தையை மாற்றி இரப்பவர்க்கீந்தும், இறைவனைப் பேணிப் போற்றி நினைந்துமிருந்தால் நன்மையும் இன்பமும் அடைகுவர். வினை தீர்க்கும் தலமாதலின் பதிகம் இக்குறிப்புக்கொண்டது.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) செத்தை - பயனற்ற குப்பை. சிதம்பன் - குணமிலி. செடியன் - பாவமுடையவன். பொத்தை - பொந்து - துளையுடையது. அழுக்குப்பாயும் பொத்தை - உடம்பு. கொத்தை குருட்டுத் தன்மை - அங்கம் குறைவுடைய தன்மை. "குற்றமொன்றும் செய்ததில்லை கொத்தையாக்கினீர்" (நம்பிகள் - திருவாரூர் - செந்துருத்தி 2). -(2) தரணிக்கே பொறையதாகி - பூமிக்கு ஓர் பாரமாகி - பயனற்று. ஐவர் வேண்டும் விலை கொடுத்து - ஐம்பொறிகள் விரும்பிய வழியே சென்று. வேண்டிற்றே வேண்டி - அவை வேண்டியவற்றையே நானும் விரும்பி. அனுபவித்த பொருளையே மீளவும் விரும்பி என்றலுமாம். எய்த்தல் - இளைப்படைதல். -(3) வழி - நல்வழி. தலைப்படுதல். நிற்றல் - செல்லுதல் - கூடுதல். -(4) குடிமை - ஏவல் கொள்ளுந்தன்மை - காற்றுவர் - காற்றுப்போல நொய்தாக்குவர். எளியனாகச் செய்வர். கனலப் பேசுதல் - ஆர்வமிகச் செய்தல் குறித்தது. ஐவர் - ஐம்புலன். கூற்றுவர் - இயமன்தூதுவர். -(5) தத்துவத் துயர்வு நீர்மைப் படுத்திலேன் - தத்துவப்படிமுறையின் உயர்வைக் குறிக்கொண்டிலேன். ஆர்வலித்து - ஆசைகொண்டு. -(6) மாச்செய்த குரம்பை - விலங்கின்றன்மை கொண்ட உடல். மா - மரணம் என்று கொண்டு மரணத்தை உடன்வைத்து ஆக்கப்பட்ட என்றலுமாம். மயக்கம் எய்தும் நாச்செய்து - மயங்கும் வழிசெய்து. நா - அனுபவிக்கும் வாய்தல் - கருவி - குறித்தது. நாலுமைந்து - உடம்பின் ஒன்பது வாசல். காச்செய்த - காவல்செய்த. காப்புடன் அமைத்த. கா - பூ முதலியவற்றை இடும்பெட்டி போல என்றலுமாம். கோச் செய்து - அதிகாரம் செய்து. குமைத்தல் - வருத்துதல் அழித்தல் "கூற்றங் குமைத்த". -(7) இடை - காலம். கொடையிலேன் கொள்வதே - கொடையில்லாதவனாகிய நான் பிறர்பால் கொள்வது என்ன நியாயம்? ஏகாரம் வினா. -(8) பிச்சிலேன் - இழித்துச் சிதைத்திலேன். பிய்ச்சிலேன் என்பது பிச்சிலேன் எனநின்றது. பிணக்கமென்னும் துச்சு - நன்னெறியினின்றும் மாறுபடும் கீழ்மை. அச்சன் மேம்பட்டவன் - அதிபன். அச்சமுடையவன் என்றலு மொன்று. கொச்சை - கீழ்மைத்தன்மை.

திருக்கோவலூர் முதலா மருவு திருப்பதி பிறவும் - திருவிடையாறு. திருநெல் வெண்ணெய் முதலியன என்று கருதப்படும். இவற்றைப் பற்றிய நாயனாரது பதிகங்கள் சிதலரித் தொழிந்தனபோலும். திருஆமாத்தூரிலிருந்து திருக்கோவலூருக்கு வரும் வழியிடையே திருவறையணிநல்லூரும் வணங்கி வந்தனர்.