பக்கம் எண் :


24திருத்தொண்டர் புராணம்

 

நிகழுமலர்ச் செங்கமல நிரையிதழி னகவயினிற்
றிகழவருந் திருவனைய யார்பிறந்தார்.

17

(இ-ள்.) வெளிப்படை. புகழனாருக்கு உரிமையாகிய ஒப்பற்ற குலமும் குடியும் கூடிய மரபிலே மகிழ்ச்சி தரத்தக்க திருமணம் புணர்ந்த மாதினியார் என்னும் அம்மையாரின் மணிவயிற்றினிடமாக, நிகழும் மலராகிய செந்தாமரையின் ஒழுங்குபட்ட இதழ்களினிடையே உள்ள பொகுட்டில் விளங்கவரும் திருமகளைப் போன்ற திலகவதியார் பிறந்தருளினார்.

(வி-ரை.) உரிமைப் பொருவில் குலக்குடி - குடி - குலத்தின் உட்பிரிவு. உரிமை - மணஞ் செய்தற்குரிய உறவின்முறை. மணஞ்செய்வதற்கண் உளங்கொள்ள வேண்டிய இன்றியமையாத பொருள்கள் குலம் - குடி - உரிமை என்ற இம்மூன்றுமாம் என்பது முந்தையோர் பழக்கு. 1289-ல் உரைத்தனவும் பார்க்க.

மகிழவரும் மணம் புணர்ந்த - மணம் புணர்ந்த - மணம் செய்த - மணத்தினாற் கூடிய. மரபு வழக்கு. மகிழ்ச்சியில்லாத பலன்களையும் விளைக்கும் மணங்களும் உளவாகக் காண்கின்றோமாதலின் அவ்வாறன்றி, இது, எல்லா வகையாலும் மகிழ்ச்சியையே தரநின்றது என்பது.

மாதினியார் - புகழனார் என்றதனோடு ஒப்ப, இயற்பெயராகிய இதுவும் காரணக் குறியீடாயும் பொருள் தரும் வண்ணம் நிற்பது காண்க. மணி வயிறு - என்ற கருத்தும் இது. மணி - அழகிய. தாமரையினகம் போன்றது என்பது குறிப்பு. மங்கையர்க்கரசியார் என்பதுபோல மாதர்களுள் இனிமையாற் சிறந்தவர் என்ற பொருள்தருவது காண்க. மாது இனி யாவர் என்ற குறிப்புப்பட நிற்றலும் காண்க.

நிகழுமலர்ச் செங்கமல நிரை இதழின் அகவயினில் - நிகழும் மலர் - பலராலும் தேற்றமாக எடுத்துச் சொல்லப்படும் மலர்களுட் சிறந்த தாமரை. நிரை இதழ் புறவிதழ் - உள்ளிதழ் - அகவிதழ் என்பனவாக வரிசையின் நிறைத் இதழ்கள். நிரை - வரிசை. அகவயின் - அகவிதழ்களி னிடையேயுள்ள பொகுட்டில்.

திகழவரும் திரு - திகழ - அழகிற் சிறந்த தென்று பலராறும் போற்றப்படுவதாயினும் தான் அதனால் விளக்கம்பெறாது, தன்சார்பினால் அது விளங்கும்படி வருகின்ற திரு என்பதாம்.

திருஅனைய - உருவம்பற்றிய உவமம். "செம்மலர்மேற் றிருவனைய" (1296) என்று பின்னரும் இக்கருத்துப்பற்றியே உரைத்தல் காண்க.

செங்கமல நிரையிதழி னகம் - மணிவயிற்றுக்குத் தொழிலும் மெய்யும் பற்றி வந்த உவமத்தை - உள்ளுறுத்த குறிப்புருவகம்.

திலகவதியார் - புகழனார் - மாதினியார் - என்றவற்றிப்போல ஈண்டும் இயற்பெயர் காரணக்குறிப்புடன் நின்றது.

மேல்வரும் பாட்டில் மருணீக்கியார் - என்ற பெயரும் இவ்வாறே வருவது காண்க. அதனை ஆண்டு ஆசிரியர் விரித்துக் கூறுவதும் குறிக்கொள்க. திலகம் - நெற்றிப்பொட்டு - நெற்றிக்குச் சிறப்புத்தருவது. குலத்துக்கும், சைவத்துககும் திலகம் என்றலுமாம்.

திருவயிற்றில் - திலகவதியார் - என்பனவும் பாடங்கள்.

17

1283.

திலகவதி யார்பிறந்து சிலமுறையாண் டகன்றதற்பின்,
அலகில்கலைத் துறைதழைப்ப, வருந்தவத்தோர் நெறிவாழ,
உலகில்வரு மிருணீக்கி யொளிவிளங்கு கதிற்போற்பின்
மலருமரு ணீக்கியார் வந்தவதா ரஞ்செய்தார்.

18