பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்25

 

(இ-ள்.) வெளிப்படை. திலகவதியார் பிறந்தபின் முறையாகச் சில ஆண்டுகள் சென்ற பின்னர், அளவில்லாத கலைகளின் துறைகள் தழைக்கவும், அருந்தவத்தோருடைய நெறிவாழவும், உகத்திற் புறவிருளைநீக்கி வருகீன்ற ஒளி விளங்கும் கதிர்போலப், பின்மலரும் அகவிருளை நீக்கும் அவர் வந்து அவதரித்தருளினார்.

(வி-ரை.) முறை சில ஆண்டு - என்க. சில - பல அன்றி என்ற குறிப்புப் பெறக் கூறப்பட்டது. "நல்லறம் பல; சில, இல்லறந் துறவற மெனச்சிறந் தனவே" என்றது போல. முறை - ஒன்றன்பின் ஒன்றாய் முறைமையில் வைத்து எண்ணத்தக்கதாக. "வரையா நாளின் மகப்பேறு குறித்துப், பெருநலந் துய்க்கும் பெற்றித் தன்றே" என்று இல்லறத்தின் நல்லியல்பினைக் குமரகுருபர சுவாமிகள், எடுத்துக் கூறியபடி, மகப்பெற்றார், பெரும்பான்மை பின்னும் ஒரு மகவு பெறுதற்குப் போதிய கால இடையீட இரண்டு ஆண்டுகளுக்குக் குறையா தென்ப.

கலைத்துறை - தவத்தோர் நெறி - இவை கல்வியும் ஞானமும் எனவும், அபரஞானம் - பரஞானம் எனவும், கூறப்படும். "உவமையிலாக் கலைஞான முணர்வரிய மெய்ஞ்ஞானம்" (திருஞான - புரா - 70) என்ற கருத்துமிது.

கலைத்துறை தழைத்தல் - நாயனாரின் திருவாக்குக்களாகிய தேவாரங்களைப் பெறுதலானும், தவததோர் நெறிவாழ்தல் - அவர் நின்று காட்டிய ஞானச் சரியை நிலை, துறவுநிலைகளைப் பெறுதலானும் ஆவன. சொல்லிக் காட்டியும், நடந்து காட்டியும் உலகை உய்விக்க வருவது ஆசாரியரியல்பாதலின், தழைப்ப - வாழ - வந்து - என்றார். 1217-ம், ஆளுடைய பிள்ளையார் புராணம் 22 - 26 திருப்பாட்டுக்களும் பார்க்க.

உலகில் இருள் நீக்கி வரும் கதிர் என்க. இருள் - புறவிருளையும், கதிர் - அவ்விருளை நீக்கும் ஞாயிற்றையும் குறித்தன. "புறவிருள் போக்குகின்ற செங்கதிரவன்" (10) என்றது காண்க. சந்திரனும் இருளை நீக்குமாயினும் அதன் ஒளி சூரிய னொளியே யாதலால் கதிர் என ஒன்றே கூறினார்.

நீக்கி - விளங்கு - கதிர் - இருளை நீக்குதற்கென்று ஞாயிறுவருதல் இல்லை; ஆயினும் அவன் வருமைல் இருள் நீக்கப்படுகின்றது; ஆதலின் நீக்க - விளங்கும் என்னாது நீக்கி விளங்கும் என்றார். ஆனால் மருணீக்கியார் அவவ்வாறன்றித் - தழைப்பவும் - வாழவும் - வந்து - என்ற குறிப்பும் கண்டு கொள்க.

விளங்கு கதிர் - பிறர் முயற்சியானன்றித் தானே விளங்கும். "ஞாயிறு கடற்கண்டா" (திருமுருகு) என்றது காண்க.

மலரும் - மலரும் - மருள் எனவும், மலரும் நீக்கியார் எனவும் கூட்டி உரைக்க நின்றது. நீக்கியார் என்பதனுடன் கூட்டும் போது மலரும் மலர்விக்கும் எனப் பிறவினைப் பொருள் கொள்க. "இதய தாமரைகள் எல்லாம் செம்மையாய் மலரும் ஞானத்தினகரர் உதயஞ் செய்தார்" என்ற திருவாதவூரர் புராணம் காண்க. மருணீக்கியார் - மருளைநீக்குபவர் என்ற பொருளில் வந்தது. வந்து - முன்னை முனியாகிய பிறவியிலிருந்து 1266-ல் உரை பார்க்க. மருள் - மயக்கம். பொருளல்லவற்றைப் பொருளென் றுணர்தற் கேதுவாகிய விபரீத ஞானம். அது பிறவிக்கும் வித்தாதலின் அதனை நீக்குதல் திருவடி ஞானம் பெற்றுய்தற்கு ஏதுவாகும். "பொருளல் லவற்றை" என்ற குறள் காண்க.

அவதாரம் செய்தார் - அவதரித்தல் - இறங்குதல் என்னும் பொருளில் வருவதோர் மரபு வழக்கு. 148, 149 பாட்டுக்களில் உரைத்தவையும் "சிவம் பெருக்கும் பிள்ளையார் திருவவதாரம் செய்தார்" (திருஞான - புரா - 26) என்பதும் பார்க்க.

கதிர்போல - தொழில்பற்றி வந்த உவமம். மலத்தை இருள் என்பதற் கேற்பக் கதிர் என்றார்.