பக்கம் எண் :


250திருத்தொண்டர் புராணம்

 

1440. (வி-ரை.) "அரியானை" - இது திருத்தாண்டகப் பதிகத்தின் தொடக்கம்.

அரியானை என்றுஎடுத்தே - எடுத்தல் - தொடங்குதல். அரியான் - உணர்தற்கும் காண்டற்கும் ஒதுதற்கும் அரியவன். "அரிய காட்சியராய் ... ஆரறிவாரவர் பெற்றியே" (திருப்பாசுரம் - கௌசிகம்), "உலகெலா முணர்ந்தோதற் கரியவன்" முதலியவை காண்க. எடுத்தே என்ற ஏகாரம் அவ்வாறு அரியவர் என்று தொடங்கியும் தம்முடைய பாட்டுக்கு எளியவராக்கிக் கொண்டனர் என்ற கருத்துப்பட நின்றது. இக்கருத்துப்பற்றியே அடியவருக் கெளியானை என்று அடுத்து வைத்துக் கூறியருளினதும் காண்க.

அவர்தம் சிந்தை - அவர் - அவ்வடியவர். இறைவரைத் தமக்கு எளிவரப் பெற்ற அவர் என முன்னறிசுட்டு.

சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகம் - அடியவர்கள் எப்போதும் மனத்துள் வைத்துப் போற்றும் தன்மை யுடையதாதலின் பெரிய திருத்தாண்டகம் எனப்படும் பதிகம். அடையாளத் திருத்தாண்டகம், திருவடித் திருத்தாண்டகம், போற்றித் திருத்தாண்டகம் என்று ஒவ்வோர் காரணத்தால் பெயர் போந்த திருப்பதிகங்கள் போல இத்திருப்பதிகம் பெரிய திருத்தாண்டகம் எனப் பெயர் பெறும் என்பது. அவ்வாறு பெயர் வழங்குதற்குக் காரணம் அடியார்களது சிந்தையிற் பிரியாதிருக்கும் பெருமை என்று கூறியபடி. பெரிய திருமொழி என்ற வைணவர் வழக்கும் காண்க.

பிறங்கு சோதி ...... பொன்னம்பலத்து - பொன்னம்பலம் விளங்கும் ஒளியுடையது; அவ்வொளி விரிந்து எல்லாவுலகங்களிலும் விளங்குகின்றது; அஃது ஞானவொளி என்பதாம். "எப்புவனங் களுநிறைந்த திருப்பதி" (1444) என்று இக்கருத்தை மேலும் விளக்குவது காண்க. பூத ஆகாயம்போலக் கண்டிதமாக நில்லாமல் இஃது ஞான ஆகாயமாதலால் அந்த சிவஞானவொளிப் பரப்பினாலே அளவுபடாமல் எல்லாவிடத்தும் விரிந்து விளங்குதலால் இது சிற்றம்பலம் எனப்படம்.

சோதி விரியாநின்று - ஆடல் புரியாநின்றவர் - ஆநின்று - நிகழ்கால இடைநிலை. ஞானச்சோதி விரிதலும், ஐந்தொழிற் கூத்து நிகழ்தலும் எக்காலத்து முள்ளனவாதலின் நிகழ்காலத்தாற் கூறினார். "முந்நிலைக் காலமுந் தோன்றுமியற்கை யெம்முறைச் சொல்லு நிகழுங் காலத்து, மெய்ந்நிலைப் பொதுச்சொற்கிளத்தல் வேண்டும்" (தொல் - சொல் - வினை. 43) என்பதிலக்கணம்.

தமிழாற் பின்னும் போற்றல் செய்வார் - தமிழ் - செந்தமிழ்ப் பதிகம். அது மேல்வரும் பாட்டில் உரைக்கப்படுவது. போற்றல் செய்வார் - எதிர்கால வினைமுற்றெச்சம். போற்றுவாராகி. போற்றல் செய்வார் - பாடி - என மேல்வரும் பாட்டில் வரும் வினையெச்சத்துடன் முடிந்தது.

அடியவர்கட் - றேழுலகும் - விளக்கிய - என்பனவும் பாடல்கள்.

175

திருச்சிற்றம்பலம்

பெரிய திருத்தாண்டகம் - கோயில்

அரியானை யந்தணர்தஞ் சிந்தை யானை
         யருமறையி னகத்தானை யணுவை யார்க்குந்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
         திகழொளியைத் தேவர்கடங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
         கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் பலியூரானைப்
         பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

1