| காரொளிய திருமேனிச் செங்ண் மாலுங் கடிக்கமலத் திருந்தவனுங் காணா வண்ணஞ் சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்த்த வேரொளியை யிருநிலனும் விசும்பும் விண்ணு மேழுலகுங் கடந்தண்டத் தப்பா னின்ற பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. |
10 திருச்சிற்றம்பலம் பதிகக் குறிப்பு :- உணரவும் ஒதவும் அரியவனாயினும் இன்னின்ன வகையால் அன்பால் நினையும் அடியவர்கட்கெளியவன் என்று அவனது அரியனாந்தன்மையும் எளியனாந் தன்மையும் கூறுவதும், அவனைப் பேசாத நாட்கள் பிறவாத நாட்கள் அதாவது இறந்த நாட்களோ டெண்ணப்படுவன என்பதும் இப்பதிகக் குறிப்பு. முன்னர் ஆசிரியர் குறித்த "அரியானை - எளியானை" என்றதனால் இவ்வகை காட்டப்பட்டது. மனிதரது வாழ்நாளின் பயனிதுவே எனக் குறித்தலால் இத்திருப்பதிகம் யாவரும் மனத்துள் வைத்துப் பயிலத் தகுந்தது என்பதனை "அவர்தஞ் சிந்தை பிரியாத" என்று உணர்த்தியருளினர் ஆசிரியர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) அரியானை - (ஆயினும்) அந்தணர்தம் சிந்தை யானை என்க. அந்தணர் - அறவோர் - மாமுனிவர். யார்க்கும் - பசுபோதமுடைய எவர்க்கும். கரியான் - உயிர்களின் செயலெல்லாமுள்ளிருந்து சாட்சியாக உணர்கின்றவன். கரி - சாட்சி. கரியான் - திருமால் என்றலுமாம். பிறவா நாளே - இறந்துபட்ட நாட்கள் என்பதனை மங்கல வழக்காகக் கூறியருளியபடி. "உணர்வழியு நாள் - உயிர்போகு நாள் - உயர்பாடைமேற் காவுநாள் இவை ஓவு நாள்" என்று இக்கருத்தையே ஆளுடைய நம்பிகள் விளக்கஞ் செய்தருளியது காண்க. (ஓவுதல் - நிங்குதல்). -(2) அற்றார்க்கும அலந்தார்க்கும - அற்றார் - வேறு துயைற்றவர் தம்மையே சார்ந்து உலகச் சார்பை அறுத்தவர். அலந்தார் - துன்பப்பட்டவர். இறைவரது கருணையின் எளிமை கூறப்பட்டது. அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் (4), அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும அருமருந்தை ... பெருந்துணையை (5), யாரேனு மடியார்கட் கெளியான் றன்னை (8) என்பனவும் இக்கருத்தை விளக்குவன. - (5) பொது நீக்கி ... வல்லோர் - பிறரோடு இவரும் ஒருவர் என்று பொது நோக்கால் எண்ணாத இவரையே தனிமுதற் பெருங்கடவுள் - பசுபதி - என்று நினைவோர். "எம்பிரான் றம்பிரானாந் திருவுருவன்றி மற்றோர் தேவரெத்தேவ ரென்ன, அருவரா தவரைக் கண்டா லம்மநா மஞ்சு மாறே" (அச்சப் பத்து - 2) என்ற திருவாசகம் இக்கருத்தை வற்புறுத்தி விளக்குவது. - (7) வாளி ... எரியக் கோத்த - வாளி, கோத்த அளவில் நின்றதாக, எரியச்செய்தது பிறிதொன்றா லாயிற்றென்றது குறிப்பு. - (8) துளங்காத சிந்தையராய்த துறந்தோர் - இதற்கு நாயனாரே சிறந்த இலக்கியம். முன்னர் "போகமாற்றிப் பொது நீக்கித் தனை நினைய வல்லோர்" என்றதற்கு மிவ்வாறேயாம். - (9) மரகதம் - தேன் - பால் முதலியவை அருமையானவை யென்று மக்கள் கொள்ளும் பொருள்கள். அவற்றினும் அருமையானவன் என்றபடி. -(10) அண்டத்தப்பால் நின்ற பேரொளி - "அண்ட மாரிரு ளூடு கடந்தும்ப, ருண்டு போலுமொரொண்சுடர்" (தனிக்குறுந்தொகை). |