1441. (வி-ரை.) "செஞ்சடைக் கற்றை முற்த் திளநிலா வெறிக்கும்" - இது இத் திருப்பதிகத்தின் தொடக்கம். சிறந்த - வாய்மை - அஞ்சொல் - வளம் - தமிழ் - மாலை - அடை மொழிகள் இத்திருப்பதிகத்தின் பண்புகளைக் குறித்தன. சிறப்பாவது - இறைவரைக் காணலாகும் வகையினையும் இடத்தையும் காட்டுதல்; வாய்மை - அவரது இறைமை அறிவித்தல்; அஞ்சொல் - நேரிசையின் இனிய இசை; வளம் - பொருள்வளம்; தமிழ் - அப்பொருளைத்தரும சொல்வளம்; மாலை - நிலா எறித்தலும் எரியாடுமாறும் ஒன்று போல பாசுரந்தோறும் வருமாறு யாத்து முடித்துக் காட்டுதல். அதிசயமாம்படி பாடி - அதிசயமாகும் படியினைப்பாடி. படி - தன்மையினை, இரண்டனுருபு தொக்கது. "அதிசயம் போல நின்று அனலெரி யாடு மாறே" என்ற இத்திருப்பதிகத்தின் ஈற்றுக் குறிப்பும் பதிகக் கருத்துமாம். அதிசயமாவது அறிந்தனுபவிக்கும்படி மனத்துள் எழுகின்ற பெருமித உணர்ச்சி. "தெருளு மும்மதி னொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ, யருளு மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே" என்ற திருவாசகம் காண்க. அன்பு சூழ்ந்த நெஞ்சு உருக - அன்பு சூழ்ந்ததனால் நெஞ்சு உருகிற்று எனக்காரணங்காட்டுவார் உடம்பொடு புணர்த்தி ஓதினார். சூழ்ந்த - முழுதும் நிறைந்த என்ற பொருளில் வந்தது. அகப்படுத்திக்கொண்ட - வயப்படுத்திய என்க. மனத்தின்வழி வாக்கும், அதன்வழி மெய்யும் தொழில்செய்யு மாதலின் அம்முறையே வைத்துக் கூறினார். வார்புனல் பொழி என்க. வார்தல் - இடைவிடாது மழைபோலப் பெருகுதல் பரவியசொல் - பரவிய - சிவபெருமானையே துதித்த. "குழையோர் காதிற் கோமாற்கே", "பொதுநீக்கித் தனைநினைய" முதலியவை காண்க. சொல் - திருப்பதிகம். நிறைந்த - இடைவிடாது வெளிவருதல். கண்ணிணையும் - வாயும் - என்பவற்றுக்கேற்பத் தம் திருப்பணியின் ஒயிாத செயலும் என்க. திருப்பணி - உழவாரப் பணி. தம் செயலின் - என்றது நாயனார் அதனைத் தமது சிறந்தபணியாகக் கொண்ட கருத்தைக் குறித்தது. மாறாது சாரும் - முக்கரணங்களாலும் நீங்காமற் செய்தலால் சிவத்தையே சார்ந்து நிற்கும். சாரும் - சார்புணர்ந்து சார்கின்ற. நாளில் - கேட்டார் என்று மேல் வரும்பாட்டுடன் கூட்டிமுடிக்க. "கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்" (திருஞான - புரா - 1022) என்றபடி திருப்பணியும் மாறாது சார்ந்ததன் பயனாகப் பிள்ளையாரது திருவார்த்தை கேட்கப் பெற்றனர் என்ற குறிப்பும் காண்க. 176 திருச்சிற்றம்பலம் திருநேரிசை - கோயில் | செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி நஞ்சடை கண்ட னாரைக் காணலா நறவ நாறும் மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே துஞ்சடை யிருள்கி ழியத் துளங்கெரி யாடு மாறே. |
1 | பாலனாய் விருத்த னாகிப் பனிநிலா வெறிக்குஞ் சென்னி காலனைக் காலாற் காய்ந்த கடவுளார் விடையொன் றேறி ஞாலமாந் தில்லை தன்னுள் நவின்றசிற் றம்ப லத்தே நீலஞ்சேர் கண்ட னார்தா நீண்டெரி யாடு மாறே. |
10 |