| மதியிலா வரக்க னோடி மாமலை யெடுக்க நோக்கி நெதியன்றோ ணெரிய வூன்றி நீடிரும் பொழில்கள் சூழ்ந்த மதியந்தோய் தில்லை தன்னுண் மல்குசிற் றம்பல லத்தே யதிசயம் போல நின்று அனலெரி யாடு மாறே. |
11 பதிகக் குறிப்பு :- திருநீலகண்டனாராகிய முதல்வனாரைக் காணுமிடமுளது; அவர் தலையில் நிலவைச் சூடிக்கொண்டு இறுதி ஊழியாகிய தீயினுருவுள் நின்று சிற்றம்பலத்தே ஆடுகின்றனர். இப்பதிகப் பாட்டுக்கள் தோறும் நிலா எறிக்கும் சென்னியும், எரியாடுதலும், சிற்றம்பலமும் குறிக்கப்பட்டன. எரியாடுதல் - சங்கார காரணனாயுள்ள முதன்மையையும், நிலா எறித்தல் - தோற்றத்தையும், சிற்றம்பலம் மூலமாயி ஞானத்தையும் குறிக்கும். "ஒடுங்கி மலத்துளதாம்" என்ற சிவஞானபோத முதற் சூத்திரக் கருத்தும், "வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" என்பது முதலிய தேவாரங்களின் கருத்தும் காண்க. அம்பலக்கூத்தனது ஆடல் ஐந்தொழில் செய்யும் அருட்கூத்து; சிவஞானத்தாற் பெறப்படும் ஆனந்தந் தருவது. காண்டற்கரிய கடவுளாகிய நஞ்சடை கண்டனாரை காணலாம். எங்கு? எவ்வாறு? என்னில் அவர் நிலா எறிக்கும் சென்னியுடன் தில்லைச் சிற்றம்பலத்துள் எரியாடுமாறு; அஃது ஓர் அதிசயம்போலவுள்ளது. "காண்பதற்கரிய நின்கழலும் ... கண்டிலாத நின் கதிர்நெடு முடியும், ஈங்கிவை கொண்டு நீங்காது விரும்பி்ச் சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி, யேவருங் காண வாடுதி; யதுவெனக், கதிசயம் விளைக்கு மன்றே! யதிசமயம் விளையாது மொழிந்தது" (11-ம் திருமுறை - கோயினான் - 12) என்ற திருவெண்காட்டடிகள் திருவாக்கும், அதனுள் இஃது ஓர் அதிசயம்போல உள்ளது; ஆனால் கல்லினும் வலிய என்னெஞ்சத்தும் நுழைந்தனை; பெரியதிற் பெரியை; சிறியதிற் சிறியை; ஆதலின் அதிசயமன்று என விளக்கியவாறும் காண்க. "அதிசயம்போல நின்று அனலெரி யாடு மாறே" என்று பதிக இறுதியில் முடித்துக்காட்டியருளினர் நாயனார். இதனை ஆசிரியர் அதிசயமாம்படி பாடி என்று எடுத்துக்காட்டினர். பதிகப் பாட்டுக் குறிப்பு :- விரிந்த செஞ்சடைக் கற்றையானது இளநிலா எறிக்கும் முற்றம்போல உள்ளது. "மாலையின், றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை" (அற்புத - அந் - 65). நறவநாறும் சோலை - மஞ்சு அடைசோலை என்க. சோலையில் தோய்தலால் மஞ்சும் சோலையின் தேன் மணங்கமழும் என்றலுமாம். "சாலைமருங்கிறை யொதுங்கு மஞ்சு, மங்கவை பொழிந்த நீரு மாகுதிப் புகைப்பா னாறும்" (834). துஞ்சு அடை இருள் - துஞ்சுதல் - இறத்தல் - மரணம். மரணத்துக்குக் காரணமாகிய என்பது. "தோற்ற முண்டேல் மரணமுண்டு" (நம்பிகள்). இருள் கிழிய எரியாடுமாறு - உயிர்கள் ஞானவொளி பெற்று ஆணவ இருளின் நீங்கி முத்தியடையும் பொருட்டு எரியாடுதல் நிகழ்வதாம். -(2) ஏறு அனார் - ஏற்றினைப் போன்றவர். ஏறு தம்பால் ஏறனார் என்று கூட்டி ஏற்றினை ஊர்பவர் என்றலுமாம். ஆறனார் - வழிகாட்டுபவர். வழியினைஉடையவர். -(4) கண்ணியாள் - உமையம்மை. ஓர் - ஒவ்வோர். கைஎரி வீசிநின்று - கனல்எரியாடும் - கையில் ஏந்தும் எரி வேறு; நின்றாடும் எரி வேறு. -(6) இருவர் - சிவம், சத்தி. பாரிடம் - பூதகணம். பாணி செய்ய - கைகளால் தாளங்கொட்ட. -(8) சிறைகொள் நீர்த்தில்லை - "சிறைவான் புனற்றில்லை" (திருக்கோவையார்). -(9) விருத்தனாய்ப் பாலனாகி - எப்பொருட்கும் முன்னவனாயும் பின்னவனாயும் உள்ளவன். |