என்றவிடத் துரைத்தவையும், பிறவும் பார்க்க. ஆளுடைய நம்பிளும் இவ்வாறே "தொழுந்தொறும் புறவிடை கொண்டு" (255), "நெடுந் திருவீதியை வணங்கி" (256)த் தில்லையினின்றும் போந்தமையும் காண்க. இத்திருவீதிகளின் சிறப்புப்பற்றி முன் 245 - 248-ல் உரைத்தவை இங்கு நினைவு கூர்தற்பாலன. இவ்வாறு அருள்பெற்றுப் பேர்ந்த நாயனார் இனி மீண்டும் திருத்தில்லைக்கெழுந் தருளுவதில்லை என்ற சரித நிகழ்ச்சியும் இவ்வாறு வீதிபுரண்டு விடைபெற்றுப் போதலின் கருத்துக்காட்டி நிற்பதும் குறிக்க. போந்தே - புறப்பட்டு. ஏகாரம் பின்னர் மீளவும்வந்து புகுதப் பெறாமைக் குறிப்பு. ஆளுடைய பிள்ளையார் இறுதியாக மூன்றாம்முறை திருத்தில்லையினைத் தரிசித்து விடைபெற்றுச் சீகாழிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியினையும் இவ்வாறே "கூத்தரருள் பெற்றுப் பேர்ந்தருளி" (திருஞான - புரா - 1144) என்பதும், ஆளுடைய நம்பிகளும் இவ்வாறே இரண்டாம் முறை தரிசித்துப் போந்தமையைப் "பொற்பதியை வணங்கிப் போய்" (ஏயர்கோன் - புரா - 116) என்பதும் ஒப்பு நோக்கற்பாலன. எப்புவனங்களும் நிறைந்த திருப்பதி - ஞானாகாய நிறைவினால் எல்லா விடங்களிலும் நிறைவு கொண்ட பதி என்பது. "எங்குந் திருமேனி யெங்குஞ் சிவசத்தி, யெங்குஞ் சிதம்பர மெங்குந் திருநட்ட, மெங்குஞ் சிவமா யிருத்தலா லெங்கெங்குந், தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே" (9 - 74), "அண்டங்களோரெழு மம்பொற் பதியாகப், பண்டை யாகாசங்களைந்தும் பதியாகத், தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே" (9 - 101) என்பன முதலாகத் திருமூலதேவ நாயனார் தில்லைக்கூத்தினைப் பற்றித் திருமந்திரம் ஒன்பதாந் தந்திரத்தினுள் அருளியவை காண்க. நிறைந்த என்ற கருத்தும் காண்க. ஏனை நான்கு பூதங்களள்ளும் நிறைந்து அவற்றுக்கு இடங்கொடுத்து நிற்பது சகடமாகிய பூத ஆகாயம்; ஞான ஆகாயம் எல்லாப் புவனங்களும் நிறைந்து ஒங்குவதுங எல்லையினை இறைஞ்சி ஏத்தி - எல்லையைப் பணிந்து அங்கிருந்தபடி தலத்தைப் போற்றி. "புவனவா ரூரினிற் புறம்புபோந் ததனையே நோக்கி நின்றே" (திருஞான - புரா - 518) என்று ஆளுடைய பிள்ளையார் திருவாரூரைப் போற்றிப் போந்த வரலாறும், பிறவும் கருக. செப்பரிய பெருமையினார் திருநாரையூர் - பெருமையினாருடைய என்று ஆறாம் வேற்றுமை உருபு விரித்துரைத்துக் கொள்க. எப்பரிசும் - நாரையூர் நம்பனுக்கு "அம்ம அழகிதே" என்று திருக்குறுந்தொகையிலும், "நம்பன்றன்னை நாரையூர் நன்னகரிற் கண்டே னானே" என்று திருத்தாண்டகத்திலும் பெருமானது சொலற்கரிய பல பெருமைகளையும் நாயனார் பாராட்டியருளிய திறத்தினைக் குறிக்கச் செப்பரிய பெருமையீனார் என்று கூறினார். பெருமையினார் என்றது நாயனாரைக் குறிப்பதாகவே கொண்டு பணிந்து எழுதற்கு எழுவாயாக்கி உரைத்தலுமொன்று. இப்பொருளில் மேல்வரும் பாட்டில் திருநாவுக்கரசர் தாமும் என்ற எழுவாய்க்குப் பெருமையினாராகிய என்று பண்பாக்கி உரைத்துக் கொள்க. 179 1445. (வி-ரை.) தொண்டர்குழாம் புடைசூழச் - சார்ந்தார் - என்று கூட்டுக. நாயனாரது பெருமையறிந்த பல அடியார்கள் அவரைச் சுற்றிச் சூழ்ந்துவந்தனர். அவர்கள் திருத்தில்லையினின்று போந்து தொடர்ந்து வந்தாரும் சீகாழிப்பதியினின்று எதிர்கொண்டு வணங்கச் சென்றாருமாம். தொழுத கரத்தொடு நீறு துதைந்த கோலம் - இஃது அடியார் கண்டவாறு நாயனாரது திருக்கோலம். தொழுத கரம் - காழிவரும்பெருந்தகையார் மலர்க்கழல்கள் வணங்க எழும் விருப்பம் வாய்த்து வருகின்றாராதலின் அந்தத் திசையையும் பதியையும் நோக்கிக் கைகூப்பிய வண்ணமாகத் தொழுதுகொண்டே வருகின்றார். |