பக்கம் எண் :


26திருத்தொண்டர் புராணம்

 

பின் மலரும் - "கடும்பகலின், வேலையே போன்றிலங்கம் வெண்ணீறு" என்றபடி உதித்போதன்றி ஞாயிறு பின்மலரும். நாயனார் சரித விளக்கும் சமணத்தினின்றும் மீண்டபின் மலர்தல் குறிப்பிற் காண்க.

18

1284.

மாதினியார் திருவயிற்றின் மன்னியசீர்ப் புகழனார்
காதலனா ருதித்தற்பின் கடன்முறைமை மங்கலங்கள்
மேதகுநல் வினைசிறப்ப விரும்பியபா ராட்டினுடன்
ஏதமில்பல் கிளைபோற்ற, விளங்குழவீப் பதங்கடந்தார்.

19

(இ-ள்.) வெளிப்படை. மாதினியாரது திருவயிற்றினிடமாக வந்து உதித்த பின், செய்கடன் முறைமையில் வரும் மங்கல வினைகள் எல்லாவற்றையும் மேம்பட்ட நல்லவினை சிறக்கும்படி விரும்பிய பாராட்டுக்களுடன் குற்றமில்லாத சுற்றத்தார்கள் செய்யப், புகழனாருக்குக் காதலனாராகிய மருணீக்கியார் இளங்குழவிப் பருவத்தைக் கடந்தனர்.

(வி-ரை.) புகழனார் காதலனார் - காதலன் - மகன். ஆண்மகப் பேற்றைத் தந்தையரும், பெண்மகப் பேற்றைத் தாயரும் விரும்பும் இயல்பு குறித்தது. காதலனார் - என்ற குறிப்புமது. தடாதகைப் பிராட்டியார் திருவவதாரத்தின்போது மலயத்துவச பாண்டியர் பெண்மகவு பெற்றமைபற்றிக் கவன்றனர் என்பது வரலாறு. "மாதர் தோன்றிய மரபுடை மறையவர்" (1107), "பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார்" (876) என்றவிடங்களிலுரைத்தவையும் பிறவும் இங்குக் கருதற்பாலன.

உதித்ததற்பின் கடன்முறைமை மங்கலங்கள் - மருணீக்கியார் இரண்டாவது மகவாதலின் முதன் மகப்பேறு தரித்தபோது பத்துத் திங்களினும் செய்யும் சடங்குகள் இவர்திறத்து இல்லை என்பது குறிக்க உதித்ததற் பின் என்றார். அவை குல வழக்குப்படி முதல் மகவாகிய திலகவதியார் திறத்துச் செய்யப்பட்டனவாதல் வேண்டுமென்பதும் குறிப்பாலுணர்த்தப்பட்டது. இப்புராணத்துட் சரிதமுடைய நாயன்மார்கள்பாலே இவை ஏற்ற பெற்றி கூறப்படுவன என்பதும் ஆதலின் திலகவதியார் திறத்து அவை கூறப்படாமையும், இங்கு உணர்தற்பாலன. கண்ணப்ப நாயனார், ஆளுடைய பிள்ளையார் முதலியோர் புராணங்கள் பார்க்க.

கடன் முறைமை மங்கலங்கள் - பாராட்டினுடன் - மகவு பிறந்தபின் பத்து நாளும் செய்வனவும், நாட்கறித்து எழுதுதல், பெயர் சூட்டல், சோறு ஊட்டுதல் முதலியனவாக ஆண்மகவுக்கு விதிக்கப்பட்டனவும் ஆகிய கடன்கள். இவை முன்னர்த் திலகவதியம்மையார் திறத்துக் கூறப்படாமை பெண்மகார்க்கு மணம் ஒன்றே யன்றி வேறு கடன்கள் விதிக்கப்படாமையானும், பிறவாற்றானுமாம்.

கடன் முறைமை - கடன் - செய்யப்பட வேண்டியனவாக விதிக்கப்பட்ட சடங்குகள். முறைமை - விதித்த முறையே.

வினை சிறப்ப - பாராட்டு - கிளை போற்ற என்றவற்றால் சடங்கு செயலின் தொழிற் சிறப்பும், அவற்றை இயற்றுதலின் ஊக்கத்துட னியன்ற மகிழ்வும், அவை செய்தலிற் கிளைஞர் பலரும் கூடிய களிப்பும் உணர்த்தப்பட்டன. பாராட்டு - விருந்தினர் - ஊரவர் முதலியோரது செயலும், போற்றல் - கிளைஞரது (சுற்றம்) செயலும் குறித்தன என்றலுமாம். "விருந்தளித்தும் ஒக்கல்வளர் பெருஞ்சிறப் பின் உளரானார்" (1281) புகழனாராதலின் பலர்களது பாராட்டுதலும், கிளைஞரது போற்றலும் உளவாயின என்பதும் குறிப்பு. "மங்கல மென்ப மனைமாட்சி மற்றத, னன்கல னன்மக்கட் பேறு" (குறள்).