பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்261

 

தமது திருக்கைகளால் எடுத்து; இறைஞ்சி - அவரைத் தாமும் எதிர் இறைஞ்சி; "அப்பரே" என - "எமது அப்பரே!" என்று சொல்ல; அவரும் "அடியேன்!" என்றார் - அவரும் "அடியேன்!" என்றனர்.

(வி-ரை.) அழுதழைத்துக் கொண்டவர்தாம் - தொழுது - அணைவுற்று பற்றி எடுத்து - இறைஞ்சி - என, அவரும் - என்றார் - என்று கூட்டி முடிக்க.

தொழுது அணைவுற்று - முன்பாட்டில் கண்டபடி. காண்டகைய திருவுள்ளக் கருத்தினோடு - எழுந்தருளிமுன்னே வந்தாராகிய - பிள்ளையார் தொழுது அணைந்தனர் என்க. நாயனார் "தொழுத் கரத்தொடு" (1445) சார்ந்தாராதலின் அவரைக் காணும் விருப்பொடு சென்ற பிள்ளையாரும் எதிர் தொழுது அணைந்தனர். "தொண்டர் திருவேட நேரே தோன்றிய தென்று தொழுதே" (திருஞானபுரா - 271) எனப் பின்னர் இதனை விரித்துக் காண்க.

பிள்ளையார் தொழுது அணைவுற்றனர்; அவரைச் சூழ்ந்த தொண்டர் குழாத்தினிடையே ஆண்ட அரசுகள் அன்புருகச் சென்று பெருங் காதலுடன் பிள்ளையார் தமது மலர்க்கையால் எடுத்து இறைஞ்சி "அப்பரே!" என்றனர்; அவரும் (அரசுகளும் ) "அடியேன்!" என்றார் என்று இத்திருப்பாட்டின் பொருளை வகுத்துக் கொள்க.

தொழுது - அணைவுற்று - பற்றி எடுத்து என்று அடுக்கிவந்த செய்து என்னும் வினையெச்சங்கள், முன்னின்ற எச்சமாகிய இறைஞ்சி என்ற எச்சம் என என்பதனோடு கூடி முடிந்தவழித், தாமும் பொருண் முடிந்தன. "ஆண்டவரசு ... அடிபணிய" என்றது இடைப்பிறவரலராய் நின்றது. "பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி, சொன்முறை முடியா தடுக்குன வரினு, முன்னது முடிய முடியுமன் பொருளே" (தொல் - சொல் - வினை - 36) என்பதிலக்கணம். அணைவுற்று என்பதனை அணைவுற என்று செய என்னும் வாய்ப்பாட்டெச்சமாக்கி உரைப்பினுமமையும். இவ்வாறன்றி, ஆண்ட அரசு, தொழுதணைவுற்று என்று கூட்டி உரைப்பாருமுண்டு. அவ்வாறு கொள்ளுங்கால் முன்னர்த் "தொழுத கரத்தொடு" (1445) என்றதனைப் பொதுவகையானும், இங்குத் "தொழுது" என்றதனைப் பிள்ளையாரைத் தொழுது எனச் சிறப்பு வகையானும் கொள்ளப்படும்.

அன்புருக - உருகச் சென்று அடிபணிய என்க. உருக்க என்பது உருக என வந்தது. அன்பினால் உருக்கப்பட்டாராதலின் என்க. தாம் காதல் கூர வணங்கவந்த பொருள் நேரே காணக் கிடைத்தபோது அன்பு உருக்கியது.

தொண்டர் குழாம் - பிள்ளையாருடன் புடைசூழ (1446) வந்த அன்பர் கூட்டம். நாயனாருடன் புடை சூழ்ந்து வந்த தொண்டர் கூட்டம் (1445) என்றலுமாம். இரு திறத்தும் கூடிய அடியார் கூட்டத்தினிடை என்றலும். பொருந்தும். "திரண்டபெருந் திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ் சேர்ந்தபோதில்" (1498) எனப் பின்னர் வருதலும் காண்க.

பழுதுஇல் பெருங்காதல் - பழுதில்லாமையாவது அன்றைக்கு ஓங்கிய காதல் பின்னர் என்றுங் குறையாமல் வளர்ந்திருத்தல். "மருவியநண் புறகேண்மையற்றை நாள்போல் வளர்ந்தோங்க" (1452) என்றதும், பின்னர் இவ்விரு பெருமக்களும் இருமுறை சந்தித்த வரலாற்று நிகழ்ச்சிகளும் கருதுக.

அடிபணிய - நிலத்தின்மேல் விழுந்து திருவடிகளில் அட்டாங்கமாக வணங்குதல். "வாழியவர் மலர்க்கழல்கள் வணங்குதற்கு மனத்தெழுந்த விருப்"பி (1443) னால் வந்தாராதலின் அவ்வாறே அடிபணிந்தனர்.

கரங்கள்பற்றி எழுதரிய மலர்க்கையால் எடுத்து - அடிபணிந்த அரசுகளது கைகளைத் தமது கைகளாற் பற்றி எடுத்தனர் பிள்ளையார். இவ்வாறெடுத்தல்