(இ-ள்.) அம்பிகை ... கொடுக்க - உமையம்மையார் செம்பொற் கிண்ணத்தினில் அமுத ஞானத்தை ஊட்ட (அதனால்); அழுகை தீர்ந்த ... பிள்ளை - அழுகை தீர்ந்த செம்பவளம் போலும் திருவாயினையுடைய ஆளுடைய பிள்ளையாரும்; திருநாவுக்கரசர் - திருநாவுக்கரசு நாயனாரும்; எனச் சிறந்த ... கூட்டத்தில் - என்னும் பெருஞ் சிறப்புடைய எமது இரண்டு பெருமக்களும் இயைந்த இத்திருக்கூட்டத்தினைக் காணும் பேறு பெற்றதனால்; அரனடியார் இனபம் எய்தி - சிவனடியார்கள் இன்பம் பெற்று; உம்பர்களும் போற்றிசைப்ப உலகம் எல்லாம் சிவம் பெருகு ஒலி நிறைந்தார் - தேவர்களும் போற்றித் துதிக்கும்படி உலகமெல்லாம் சிவத்தைப் பெருகுவிக்கும் அரகர என்ற முழக்கத்தை நிறைத்தனர். (வி-ரை.) அம்பிகை ... வாய்ப்பிள்ளை - இக்கருத்துப் பற்றியே முன்னர் "வெற்பரையன் பாவைதிரு முலைப்பா லோடும். அடையநிறை சிவம்பெருக வளர்ஞானங் குழைத்தூட்ட அமுது செய்த" (1442) என்றும். "அம்மைதிருப் பாலமுதமுண்டபோதே" (1443), என்றும் குறித்தனர். நாயனார் பிள்ளையாரைத் தரிசித்த காலமாவது ஆளுடைய பிள்ளையார் திருத்தில்லையைத் தரிசித்துத், திரு எருக்கத்தம்புலியூர் திருமுதுகுன்றம் முதலிய தலங்களை வணங்கித், திருநெல்வாயிலரத்துறையில் முத்துச் சிவிகைபெற்றுச், சீகாழிக்குத் திரும்பி வந்து, முந்நூலணியப் பெற்றுத் தங்கியிருந்த காலம். அவரது சரிதத்தில் அப்போது முதன்மையாய் எங்கும் பரவித், தேற்றப்பட உலகம் கண்டு, போற்ற நின்ற செய்தி அவர் அம்மையார் அளித்த ஞானப்பாலை அமுது செய்து மூன்று வயதில் முழுஞானம் பெற்று விளங்கியமையேயாம். அவரது பெருஞ் சரிதத்தில் ஏனைய பெரும் பகுதிகள் பின்னிகழ உள்ளன. முத்துச் சிவிகை பெற்ற செய்தி அப்போது அணிமையில் நிகழ்ந்ததாதலின் உலகர் அறிந்து போற்றப் போதிய காலமின்றாம்; ஆதலின் இப்பெரும் குழ் ஒன்றுபற்றியே குறித்துப் போற்றினர்.1 1. | நாயனாரும் பிள்ளையாரும் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள். நாயனாரது சரித நிகழ்ச்சிகள் ஆளுடையபிள்ளையாரது சரித நிகழ்ச்சிகளோடு பன்முறையும் அங்கங்கும் இயைந்து வருவன. ஆதலின் நாயனார் சரிதத்தைப் பொருள் செய்வதற்கு அங்கங்கும் போந்த பிள்ளையார் சரித நிகழ்ச்சிகளில் மனம் வைத்துக்கொண்டே செல்லுதல் வேண்டும். இவ்வுண்மை அங்கங்கும் ஆசிரியர் காட்டக் காண்போம். இப்போது பிள்ளையார் சீகாழியில் இருந்த காலம் அவர் தமது நான்காவது தலயாத்திரையை முடித்துத் தங்கிய காலமாம். பிள்ளையாரது சரிதம் ஏழுமுறை செய்த தலயாத்திரைகளாகப் பிரித்துணர நிற்பது. அவற்றுள் முதல் யாத்திரை திருக்கோலக்கா சென்று தாளம்பெற்றுத் திரும்பியது. இரண்டாவது யாத்திரை அவரது தாயார் பிறப்பிடமாகிய திருநனிபள்ளி மறையவர் அழைப்பிற்கிணங்கிச் சென்று பாலை நெய்தல் ஆக்கிய பதிகம்பாடித் திருவலம்புரம் திருச்சாய்க்காடு திருவெண்காடு இவைகளைத் தரிசித்துச் சீகாழிக்குத் திரும்பியருளியது. மூன்றாவது யாத்திரை தென்றிருமுல்லைவாயில் திருமயேந்திரப் பள்ளி திருக்குருகாவூர் தரிசித்து மீண்டருளியது. நான்காவது யாத்திரைதான் முன்னர்க் குறிக்கப்பட்டது. இதன் பின்னரும், ஐந்தாவது, அவரது அவதார உண்மையாகிய பரசமய நிராகரித்து நீறு ஆக்கும் பெரு நிகழ்ச்சிகள் நிகழும் யாத்திரை தொடங்கு முன்னரும், உள்ள இடைப்பட்ட காலமே நாயனார் பிள்ளையாரைக்கண்ட இச்செய்தி நிகழ்ந்த காலமாகும். ஆறாவது யாத்திரை அவர் தொண்டைநாடு தரிசித்துப் போந்தமையும், ஏழாவது நல்லூர்ப் பெருமணம் சென்று திருவடி நீழலிற் புக்கொன்றி யுடனாவதும் ஆகும். |
|