பக்கம் எண் :


264திருத்தொண்டர் புராணம்

 

அழுகை தீர்ந்த - "அழுது அழைத்துக் கொண்டவர்" (1447) என முன் பாட்டிற் கூறியபடியால் அதனையே தொடர்ந்து அவ்வாறு அழைத்துக் கொண்டபின் அம்பிகை பொற்கிண்ணத்தில் அமுதஞானங் கொடுத்ததனால் அவ்வழுகை தீர்ந்தனர் என்று கூறிச் செல்லும் நயமும் காண்க. அழுகை தீர்ந்த - அழுகை - பிறப்பினையும், தீர்ந்தமை - அதன்கழிவாகிய முத்தியினையும் குறிக்கும். பிள்ளையார் அமுது ஞான முண்டமையால் அவர் அழுகை தீர்ந்ததுமன்றி, வேதநெறி தழைத்தோங்கிற்று; மிகுசைவத்துறை விளங்கிற்று; பூதபரம்பரை பொலிவுற்றது; எனக் காண்போம். ஆதலின் உயிர்கள் யாவும் தத்தம் அழுகை தீர்ந்து நிலவுதற்குக் காரணமுண்டாயிற்று என்பதும் குறிப்பு.

செம்பவள வாய்ப்பிள்ளை - மூன்று வயதாகிய இளவயதாதலின் அழகிய அவரது திருவாய்ப் பவளம் போன்று விளங்கிற்று. "வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம்" (திருஞான - புரா - 62) என்பது இதனை விளக்குவது காண்க.

அழுதபோது வாய் உருவாற் பவளம் போன்றதும்; அழுகை தீர்ந்தபோது ஞானத்தமிழ் பிறத்தற்கிடமாய்ச் செம்பொருள்தந்து உலகை உய்யக் கொண்டமையாற் றிருவாய் செம்பவளம் போன்றது என்பதும் குறிப்பு. செம்மை, நிறத்தால் மட்டும் அன்றிப் செம்பொருள்தரும் என்று குறிப்பதும் காண்க.

செம்பவள வாய்ப்பிள்ளை - திருநாவுக்கரசர் - அவரும் செம்பொருள் தரும் வாயினையுடையார்; இவரும் திருநாவினுக்கு - வாக்குக்கு - அரசராந் தன்மையுடையார் - என இருவரும் எமக்கு ஒரு தன்மையுடைய சிறப்புப் பெற்றவர் என்பதும் குறிப்பு. எம்பெருமக்களும் என்றதும் சிறந்த, சீர்த்தி - என்றதும் இக்குறிப்பினை விளக்குவன. சிறப்பும் சீர்தியும் ஒரு பொருளனவாதலும் காண்க.

பிள்ளை - "அம்பிகைசெம் பொற்கிண்ணத் தமுதஞா னங்கொடுப்ப வழுகை தீர்ந்த, செம்பவளவாய்" என்ற இத்துணையும் பிள்ளை என்பதற்கு அடைமொழி. இவை பிள்ளையாரின் சிறப்புணர்த்தி நின்றன.

திருநாவுக்கரசர் - நாயனாரது சரிதத்துள் ஒருசிறந்த பகுதிகூறும் இவ்விடத்து அவர் பெயரை அடைமொழியில்லாது கூறினர்; அடைமொழியில்லாது கூறலே தனிச் சிறப்புணர்த்து மாகலான். பேராசிரியர் திருக்கோவையார் முதற்பாட்டினுள் கோங்கு என்றதற்கு அடைகொடாமையே அதன் ஏற்றத்தை விளக்கி நின்றது என்றுரைத்ததனை இங்கு நினைவுகூர்க. அடைமொழிச் சிறப்பினைப் பிள்ளையாரது கருத்தாக வைத்து "நீண்ட வரைவில்லியார்.....ஆண்டவரசு" என முன்பாட்டிற் கூறியதும் கருதுக.

எம்பெருமக்கள் - இருவரும் எம்மால் ஒன்று போல வணங்கப்பெறும் பெருமக்கள் என்பதாம். இவ்விருவரையும் பற்றியே "பாடலங் காரணப் பரிசில்காசருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி, நீடலங் காரத் தெம்பெரு மக்க ணெஞ்சினு ணிறைந்து நின்றானை" (திருவிசைப்பா - வீழி - 12) என்ற சேந்தனார் திருவாக்கினை இது விளக்கம் செய்தல் காண்க. "என், பாட்டிற்கு நீயு மவனுமொப் பீரபெ் படியினுமே" என்று பிற்கால ஆசிரியரும் இக்கருத்தையே தீட்டிவைத்ததும் காண்க. இவ்வாறு இருவரும் ஒப்பாந் தன்மையினையும், ஆயினும் வேறாந் தன்மையினையும், மேல்வரும் "அருட்பெருகு தனிக்கடலும்" (1450) என்ற திருப்பாட்டில் ஆசிரியர் அழகும் அருமையும் பெற ஓதுவதும் கருதுக.

எம்பெருமக்களும் இயைந்த கூட்டம் - நாயனார் பிள்ளையாரொடு கூடிய கூட்டம் என்றாதல், பிள்ளையார் நாயனாரொடு கூடிய கூட்டம் என்றாதல் கூறாது, இவ்வாறு இருவரும் இயைந்த கூட்டம் என்ற பெருங்கவிநயம் கருதிக் களிக்கத்தக்கது. ஓடுவுருபு சார்ந்த பெயரின்பாற் சிறப்புக் குறிக்குமாதலாலும் முன் கூறியதுபோல