பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்267

 

கியபோதே நாயனார் தோணியப்பரையும் உடன் கண்டு வணங்கினர் என்பதும் துணிபு. தோணியப்பரும் பிள்ளையாரும் பிரிக்கப்படாத தொடர்புடையார். ஆளுடைய பிள்ளையார் திருக்காளத்தியிற் கண்ணப்ப நாயனாரைக்கண்டு வணங்கிய விடத்து "அவ்வன்பி னுள்ளே மன்னும், வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண் விமலரையு முடன்கண்ட விருப்பம்" (திருஞான - புரா - 1023) என்றது இங்கு நினைவுகூர்தற்பாலது. அன்றியும் "அன்ப ரொடுமரீஇ, மாலற் நேய மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும்" (சிவஞானபோதம் 12-ம் சூத்திரம்) என்ற விடத்து அன்பார் கூட்டத்தை முன்வைத்தோதியதனையும், பின்னரும், ஆலயம் தொழுவதன்முன் வேடந் தொழுவதனை வைத்த வைப்பு முறையினையும் கருதுக.

விருப்பின் மிக்கார் - அடியார் கூட்டம் நிகழ்ந்தபோது அவர்கள் செய்வது அரனை நினைவதுவம் பேசுவதுவும் வணங்குவதுமேயாதலின் இவ்விரு பெருமக்களும் கூடியபின் தோணிபுரேசரது கழல் வணங்கும் விருப்பில் மிக்கவராயினர்.

மிக்கார் - சேர்ந்தார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. மிக்கார் - முற்றெச்சம் மிக்காராகி.

தமைக்காணப் பெற்றதற்கு - என்பதும் பாடம்.

184

1450. (வி-ரை.) பிள்ளையாரும் அரசுகளும் கூடிச் சென்று இறைவரது திருக்கோயில் சேர்வதனை ஆசிரியர் மூன்று உவமங்களால் இப்பாட்டில் விரிக்கின்றார்.

யாவரும் பாராட்டி வியக்கும் அருமைப்பாடுடையது இத்திருப்பாட்டு. இப்புராணமாகிய குன்றின்மேல் விளங்கும் பெரு விளக்குக்களில் இப்பாட்டும் ஒன்றாகும்.

அருட்பெருகு.......கடலுமாம் எனவும் - அருளினாலே பெருக்கெடுக்கும ஒப்பற்ற ஒருகடல், அன்பு செறியும் ஒரு கடல் என்றிரண்டும் உலகுக்கெல்லாம் உதவுவன. அருட்பெருக்கு ஒன்று; அன்புப் பெருக்கு ஒன்று. "அருளென்னு மன்பீன் குழவி" (குறள்) என்றபடி அன்பு வரையறை யின்றிப் பெருகுதலே அருளாம். உலகுக் கெல்லாம் என்றது நடுநிலைத் தீபமாய் முன்னும் பின்னும் ஈரிடத்தும் சென்றியைவது. நாயனாரைப் பிள்ளையார் "அப்பர்" என்றதற்கேற்ப, அவரை அன்பு என்றும, பிள்ளையாரை அன்பினாற் பெறப்படும் அருள் எனறும் கூறிய நயமும் காண்க.

ஒங்கும் - கண்ணிரண்டு எனவும் - உயிர்கள் ஒங்குதற்குச் சாதனமாகயி பொருள்களையுடைய சமயமாகிய முதற் சைவ நெறிதான்பெற்ற கண்கள் இரண்டு என்றது. சைவநெறி இவர்களால் விளங்கலாவ தெனவும், சைவ நெறியினை மக்கள் இவர்களது திருவாக்குக்களாகிய கண்ணின் மூலமாகக் காணவேண்டுவ தெனவும் கூறியபடி. "காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந்தாங்கு" (திருக்கோவை) என்றபடி கண்களிரண்டாயினும் அவற்றினுட் சென்று கண்டு புலஞ்செய்து விளங்கும் உயிர் உணர்வு ஒன்றேயாம். இரண்டு கண்களின் பார்வையும் ஒன்று கூடிக் கலந்த வழியே முழுப்பார்வை நிகழும். The one is complementary to the other என்பர் நவீனர். கண் - சாதி ஒருமை. கண்களில் வலம் ஒன்றும் இடம் ஒன்றுமாக இரண்டுண்டு. ஒன்று மற்றொன்றின் காட்சியினை நிறைவாக்குவதாகும். சைவத்தின் வலது கண் இறைவனுடையதும், இடது கண் அம்மையாருடையதுமாம் என்ற முறையினையும், மேல்வரும் உவம உள்ளுறையினையும் காண்க. புண்ணியம் - சிவ புண்ணியம்.

இருட்கடுவுண்டவர் அருள் - உலகமெல்லாம் ஈன்றாள் தன் திருவருள் - இறைவனதருள் கடுவுண்டமையாலும், இறைவியினருள் உலகீன்றமையாலும் புலப்படுவ தென்பார் உடம்பொடு புணர்த்தி ஒதினார்.