இளங்குழவிப் பதம் - மூன்றாண்டு என்ப. காதலனார் - பாராட்டினுடன் போற்றக் - கடந்தார் என்க. 19 1285. | மருணீக்கி யார்சென்னி மயிர்நீக்கு மணவினையுந் தெருணீர்ப்பன் மாந்தரெலா மகிழ்சிறப்பச் செய்ததற்பின் பொருணீத்தங் கொளவீசிப் புலன்கொளுவ மனமுகிழ்த்த சுருணீக்கி மலர்விக்குங் கலைபயிலத் தொடங்கு வித்தார். |
20 (இ-ள்.) வெளிப்படை. மருணீக்கியார் என்று பெயர் சூட்டப்பெற்ற அவருக்குத் தலைமயிரை நீக்குதலாகிய சௌளம் என்ற மணச்செயலினையும் அறிவுடைய பல மக்கள் யாவரும் மகிழ்ச்சி கூரும்படி செய்ததன் பின்னர், நற்பொருள்களை வெள்ளம் போலப் பெருக உதவி அறிவு விளங்கச் செய்தலால் மனம் சுருண்டிருந்த நிலையை நீக்கி மலரச்செய்யும் கலைகளைப் பயிலத் தொடங்குவித்தலாகிய சடடங்கைச் செய்தனர். (வி-ரை.) மருணீக்கியார் - கடன் முறைமை மங்கலங்கள் எனக் கூறியவதனால் பெயர் வைக்கும் "நாமகரணம்" (திருஞான. புரா - 41) என்ற சடங்கும் அவ்வாறு நிகழ்ந்தமை குறிக்கப்பட்டதாதலின் இங்குப் பெற்றோரால் இடப்பட்ட அப்பெயராற் கூறினார். மருணீக்கியார் - நாயனாரது பிள்ளைப்பெயர். 1283-ல் கூறியது பெயராக அன்றிக் காரணப் பொருள்தந்த அளவில் நின்றது. மருணீக்கியாருக்கு - மணவினையும் - செய்ததற்பின் - என்க. நான்கனுருபு தொக்கது. மணவினையும் - முன் சொன்னவதற்றோடு இதனையும் என இறந்தது தழுவிய எச்சவும்மை. ஞானச்சடங்கினையே வேண்டிய அவர்க்கு ஏனை உலகர் போல இதனையும் என்று இழிவு சிறப்பும்மை என்றலுமாம். மயிர்நீக்கும் மண வினை - இதனைச் சௌளக் கல்யாணம் என வழங்குவராதலின் மணவினை என்றார். மகப் பிறந்தபோது நின்ற தலைமயிரை உரிய பருவத்திற் களைந்து குலமரபின்படி குடுமி வைத்தல் என்பது விதிக்கப்பட்ட ஒரு சடங்கு. இது சைவச் சடங்குகள் பதினாறனுள் ஒன்று. இப்பதினாறும் ஒவ்வொரு ஞானப்பொருளைக் குறிப்பன எனவும், அவற்றுள், இது, சிவப்பிரசாதத்தினுயர்வைக் குறிப்பதெனவும், அசிந்திய விசுவசாதாக்கியம் என்னும் ஆகமங் கூறும். "சிவப்பிரசா தோத்கர்ஷந்து யத்தச் சூடாகரம் பவேத்" என்பது அவ்வாகம வாக்கியம். இது மகவின் நல்ல உடல் வளர்ச்சிக்குந் துணை செய்வது. உடல்பற்றிய நிலையில் இதன் இன்றியமையாத சிறப்புப் பற்றியும் இதனை வேறு பிரித்துக் கூறினார். இது முடிவாங்குதல் என்ற பெயரால் தெய்வ சந்நிதியில் நிகழ்த்தும் பராவுக் கடனாக இந்நாளில் நிகழும் வழக்கும் காண்க. "சிறந்த சிகை வருவித்தார்" என்ற திருவாதவூரர் புராணம் காண்க. இது பொருளற்ற வெறும் சடங்கு என்றொழியாதபடி அறிவோர் மகிழும்படி என்ற கருத்தும் காண்க. பொருள்...கலை - பொருள் - கலைகளாற் புகட்டப்படும் நற்பொருள். நீத்தம் கொள - வெள்ளம்போல. மெய்பற்றி வந்த உவமம். கொள - உவமவுருபின் பொருள் தந்து நின்றது. புலன் - அறிவு. மனம் முகிழ்த்த சுருள் - இதழ்கள் சுருண்டு குவிந்த முகை போலிருந்த மனத்தின் தன்மை. நீக்கி - மலர்வித்தல் - முகையின் சுருண்ட இதழ்கள் விரிந்து மலர்வது போல மனத்தை விரியச் செய்தல், முகை மலர்ந்து விரிதலுக்கு நீரும், நிலச்சத்தும், சூடும் வேண்டப்படுவது போல, மனமாகிய முகை மலர்வதற்குப் பொருளும் புலன் கொளுத்தலும் தரும். |