விருப்புடையார் - ஆண்மகனுக்கு மணப்பருவம் பதினாறு வயதளவிற் கருதப்படுதலானும், அப்பருவம், அறிந்து அடிமை செய்தற்கேற்ற வயது நிரம்பப் பெறாதிருக்கு மாதலானும், அப்பருவத்தில் சிவனடிமைத்திறத்தினின்றும் திறம்பியும் அதனை மறந்தும் திரிவதற்குரிய பல சூழல்களும் சூழ்வதியல்பாகலானும், அவற்றுட் சிக்கியுழலாது அடிமை விருப்பம் பெறுவானாயின் அஃது அடியராந் திறத்தினுட் புகுத்தியே விடுமாதலானும் இவையெல்லாம் குறிக்க, அடியார் என்னாது, அடிமை விருப்புடையார் என்றார். "அறஞ்செய விரும்பு" என்ற கரத்தினையும் உன்னுக. பொன்னாரும்...அருளுடையார் - மேற்கூறிய பண்புகளின் அடுத்துக் கருதப்படுவது உலக நிலையின் உயர்ச்சியேயாகும். அரசரிடத்து அடுத்த தொழில்புரிதல் உலகநிலை உயர்வாகக் கருதப்படும். அருள் - இங்கு அரசர் பணியை அன்புகொண்டு மேற்கொள்ளுதல் குறித்து நின்றது. புரவலன் - காப்பவன். புரத்தல் - காத்தல். தீமை வாராது உலகங் காத்தலால் அரசனுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று. "காவலன்" என்ற பெயரும் இப்பொருளது. "மலர்தலையுலகங் காக்கும்" (110), "மாநிலங் காவல னாவன்...", "அறங்காப்பானல்லானோ" (121) என்றவை காண்க. அரசன் உலகு புரத்தலால் அவனது வலிமையினையும் ஆணையையும் புரத்தல் பெருங்கடனும், அவனாற் புரக்கப்படும் உலகுயிர்களினிடத்துக் கொள்ளும் அருளுமாம் என்று கருதி, வேறு அதனால் தனக்கு வரும் ஊதியம் ஒன்றினையே பொருளாகக் கருதாது கலிப்பகையாா சேனைத்தொழில் பூண்டொழுகினமையால் அருளுடையார் என்றார். சேனைத் தொழில் பூண்டு அரசன் ஏவின செய்தல் வேளாளார்க்குரிய மரபுத் தொழில்களுள் ஒன்றென்பது முன்னுரைக்கப்பட்டது. 872 - 1271 - பார்க்க. 1290-ல் வருவனவும் காண்க. 22 1288.(வி-ரை.) ஆண்தகைமைத் தொழில் - இங்குப் பொதுமையின் வீரங் குறித்து, நின்றது. வீரி - நீலி - பத்திரை முதலிய பெயர்களா லறியப்படுகின்ற படி போர்த்தொழில் ஆண் பெண் என்னும் பகுப்பின்றி இருபாலரும் புரியத் தகுவதாதலின் "ஆண் தகைமை" என்றார். ஆயினும் பெண்மையாவது தண்மை, அளி, மென்மை முதலிய பண்புகளோடு உடன்பவைத் தெண்ணப்படுவ தொன்றதலின் "ஆண் தகைமை" என்றார். அடல் அரி ஏறு என - குறிதவிராத மிக்க வலிமையும் வீரமும் குறித்தது. முன்னாளில் இவை மணமகள்பால் வேண்டற்பானவாகிய பண்புகளுட் சிறந்தனவாக வைத்தெண்ணப்பட்டன. "யானை கடிந்தார்", "உழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித், தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோ ராண்டகையே" (72) முதலிய திருக்கோவைத் திருவாக்குக்களும், ஏறு தழுவுதல் முதலிய வழக்குக்களும் காண்க. காண்தகைய...பெயரர் - உடற்பொலியும், கண்டார் விரும்பும் கட்டழகும் மணமகனிடத்தும் வேண்டப்பட்ட தன்மைகள் என்ப. "கண்களெண் ணிலாத வேண்டுங் காளையைத் காண வென்பார்" (171) முதலியவற்றின் கருத்துக்கள் காண்க. "ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய்" என்று கம்பர் பாடியதும் இக்கருத்துப் பற்றியது. கலிப்பகையார் எனும் பெயரர் - கலிக்குப் பகையாவது குற்றங்கள் எவையும் அணுகாமைக் காப்பவர் என்னும் பொருள்தருவது. இப்பெயர் இவர்க்கு இடுகுறியளவில் நில்லாது காரணக்குறியீடுபெற அமைந்தது என்ற குறிப்பும் பெருவனப்பிற் - பெயரார் என்றதனால் பெறப்படும். வேளாளர்களுள் மகட்கொடை நேர்வதன் முன்னம் பெண்ணைப் பெற்றோரும் சுற்றத்தாரும் விரும்பித் தோரும் பொருள்கள் யாவையும், இங்குக் |