கலிப்பகையாரின் பண்புகள் கூறுமுகத்தால் இந்த இரண்டு பாட்டுக்களானும் அறிவிக்கப்பட்டன. இவற்றுள், தந்தையார் முதற்கண் சிறப்பாய் விரும்புவது குணமும் குலமுமாம் என்பது மேல்வரும் பாட்டால் அறிவிக்கப்படுதலும் காண்க. கொடைபூண்ட - என்ப. மகட்கொள்ளுதல் - மணஞ்செய்துகொள்ள மகளைப் பெற்றுக் கொள்ளுதல். மேலோர் - வயதானும், அறிவானும், உலகியல்பு கற்றுத் துறைபோகலானும் மேம்பட்டவர். செலவிட்டார் - சென்று வரும்படி விடுத்தனர். தலைவர் - விருப்புடையார் - அருளுடையார் - உள்ளார் - பெயரார் - செலவிட்டார் என்று முடிக்க. 23 1289. | அணங்கனைய திலகவதி யார்தம்மை யாங்கவர்க்கு மணம்பேசி வந்தவரும் வந்தபடி யறிவிப்பக், குணம்பேசிக் குலம்பேசிக் கோதில்சீர்ப் புகழனார் பணங்கொளர வகலல்குற் பைந்தொடியை மணநேர்ந்தார். |
24 (இ-ள்.) வெளிப்படை. வந்த மேலோர்கள், திருமகளை ஒத்த திலகவதியாரை அங்கு அந்தக் கலிப்பகையாருக்கு மணஞ்செய்யும் திறத்தினைப் பேசித், தாம் வந்த செய்தியை அறிவிக்கக், குணங்களைப் பேசியும் குலமுறையினைப் பேசியும் குற்றமற்ற சிறப்பினையுடைய புகழனார், பாம்பின் படம்போலும் அல்குலையுடைய பசிய தொடிகளை யணிந்த தமது திருமகளாரை மணஞ்செய்த கொடுக்க இசைந்தார். (வி-ரை.) அணங்கு அனைய - திருமகளைப்போன்ற. "திருவனைய" (1282). அணங்கு - தெய்வப்பெண் என்றலுமாம். மணம்பேசி - அறிவிக்க - என்று கூட்டுக. குணம் பேசிக் குலம் பேசி - குணமின்றிக் குலமும், குலமின்றிக் குணமும் பயன்படாவாதலின் அந்நாளில் அவ்விரண்டு திறத்தானும் தேர்ந்தனர் என்பது. குணம் - முன்கூறிய அரனடிமை விரும்பம், அரசர்பாற் செய்கை, வீரம், அழகு என்பன. பேசி என்பதனைப் பேச எனத் திரித்து, மணம் பேச வந்தவர் என்று முடித்தலுமாம். பைந்தொடி - தொடி - வளையல், தொடியை அணிந்த பெண்ணுக்கு வந்தது. அன்மொழித் தொகை. மணம். மணம் நேர்ந்தார் - மகட்கொடுக்க இசைந்ததனைக் குறிக்கும் மரபு வழக்கு. பசியதொடி - மாற்றுயர்ந்த பொன்னாலியன்றது. 24 1290. | கன்னிதிருத் தாதையார் மணமிசைவு கலிப்பகையார் முன்னணைந்தா ரறிவிப்ப, வதுவைவினை முடிப்பதன்முன் மன்னவதற்கு வடபுலத்தோர் மாறேற்க, மற்றவர்மேல் அன்னவர்க்கு விடைகொடுத்தா; னவ்வினைமே லவரகன்றார். |
25 (இ-ள்.)வெளிப்படை. கன்னியாராகிய திலகவதியம்மையாரின் தந்தையார் இவ்வாறு மணம் இசைந்ததனை முன்னர் வந்தவர்கள் சென்று கலிப்பகையாரிடம் அறிவிக்க, அவ்வாறே கலியாணச்சடங்கு முடிப்பதன்முன்னே, அரசனுக்கு வடநாட்டவர்கள் பகை மேற்கொண்டு போர்புரிய வந்தார்களாக, அந்தப்பகைவர்மேல் போர்செய்யக் கலிப்பகையாருக்கு அரசன் விடைகொடுத்து அனுப்பினான்; அத்தொழிலின் மேல் அவர் போயினர். (வி-ரை.) மணம் இசைவு - மணம் நேர்ந்ததனை. இரண்டனுருபு தொக்கது. அணைந்தார் - கலிப்பகையார் முன்-தாதை யா(ருடைய) இசைவு-அறிவிப்ப என்க. |