கருதி நீத்து மேம்பட்ட தன்மையினால், என்றும் உடனிருந்து பிரியாத உலகில் அடையும்படியான கற்பு நெறியினின்றும் திறம்பாமல் கணவனாருடன் போயினர். (வி-ரை.) சுற்றமுடன்....நீத்து - சுற்றம் என்றும், உள்ள தொடக்குகளைத் துகள்போல் எண்ணி அவற்றை விடுத்து - துறந்து. துகள் ஆகவே - துகள்போல நொய்தாய். மெய்பற்றி வந்த உவமம். மலைபோலப் பெரிதென்றும் துகள்போலச் சிறிது என்றும் ஒரு பொருளை நிலையிடுதல் அதனைப் பற்றிய மனத் துணிபினாலாவது என்றதாம். கூத்தாட் டவைக்களம் - சந்தையிற் கூட்டம் - என்பனபோல உள்ளவையே சுற்றமாதலானும், மேலும் பற்றுக்கோட்படச் செய்து பிறவிக்கு ஏதுவாவனவாதலானும் சுற்றமுடன் நீத்தனர் என்க. துகள் - கழுவப்படுவது என்ற பொருளில் வைத்துரைத்தலுமாம். இப்பொருளிற் பண்புவமம். சுற்றமுடன் மக்களையும் - மனை வாழ்க்கையின் சிறந்த கடன் சுற்றந்தழுவுதலாகும். அச்சிறப்புப்பற்றி உடன் என்ற மூன்றனுருபைச் சுற்றம் என்றதனுடன் சார்த்தி முதற்கண் வைத்தார். மக்களைத் தமதாருயிராகக் கொண்டுஅவர்களின் பொருட்டே உயிர் துறப்பாரும் உயிர்தாங்குவாரும் ஆகிய தாயர்களும் உளர். இங்குக் கணவரைப் பிரிந்து வாழாமை என்ற கற்புநெறி அதனினும் மேம்பட்ட தாதலின், விடத்தகாத பற்றாகும் மக்களையும் துறந்து உயிர் நீக்கும்படி செய்தது என்றதாம் கற்புநெறியின் முன்னர் ஏனைய பற்றுக்கள் யாவும் துகளாகவே கொள்ளப்பட்டன என்க. மக்களையும் - உம்மை உயர்வு சிறப்பு. கணவனாருடன் சென்றார் - கற்பு நெறி - "இருவ ராகத்து ளோருயிர் கண்டனம்", "ஒராருயி ரீருருக் கொண்டு" என்ற திருக்கோவையார்த் திருவாக்குக்கள் அறிவிக்கின்றபடி உள்ளது கணவன் மனைவியர்களது உத்தம இயல்பு. "இப்பிறவியில் உன்னைப் பிரியேன்" என்று நாயகன் சொன்னபோது "ஆயின் வரும் பிறவியிற் பிரிவு கூடுமோ?" எனக்கொண்டு ஒரு நாயகி புலந்தனள் என்னும்படி உள்ளது இத்தன்மை என்பர். இவ்வாறு கணவனுடன் பிரியாது உயிர் நீப்ப வரை மாசத்தி - தெய்வம் - என்று கொண்டு அவர் பொருட்டுக் கல்நாட்டியும் பிறவாறும் வணங்கி வழிபடும் மரபும் உண்டு. அவை மாசத்திக்கல் என வழங்கி வருவது கல்வெட்டுக்களிற் காணலாம். இப்படி உயிர் நீப்ப வரும் அன்புதானும் தலை இடை கடை என மூவகைத்தாகப் பகுக்கப் படுமாயின், கற்புநெறி பற்றி நமது நாட்டிற் கொண்ட பெருங்கொள்கையின் மேன்மை கண்டுகொள்ளத் தக்கது. பெற்றிமை - இங்கு மேம்பட்ட தன்மை குறித்தது. என்றும் உடன் பிரியாத என்க. உடனிருத்தலினின்றும் என்றும் பிரியாத. பிரியாத உலகு - கற்புடை மகளிர் நித்தியமாய் வாழும் விண்ணுலகம். உடன் சென்றார் - இதனை உடன்கட்டை ஏறுதல் - சத்தி - என்று சிறந்த கற்புநெறியாக முன்னாளில் வழங்கினர். வடவர் இதனைச் சககமனம் என்பர். என்றும் உடன் பரியாத பெற்றிமையால் நீத்து வழுவாமற் சென்றார் என்று உரை கொள்வதுமாம். நந் தமிழ்நாட்டில் நாயகன் நாயகியிடை உள்ள காதலொழுக்கம் தானும் "உடம்பொ டுயிரிடை யென்ன", "கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும், திருநுதற் கில்ல யிடம்", "வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை" (குறள் - காதற் சிறப்புரைத்தல்), "பொட்டணியானுதல் போயிறும் பொய்யோ லிடையெனப்பூ, ணிட்டணி யான்றவி சின்மல ரன்றி மிதிப்பக் கொடான், மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சி" (திருக்கோவை - 303) என்ற இலக்கணங்களுக்கு ஏற்ற இலக்கியமாக நின்றது. சூரபதுமன் இறந்து பட்டான் எனக் கேட்ட அளவானே அவன் மனைவி பதுமகோமளை உயிர்நீத்தனள் என்பது கந்த |