பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்37

 

கடவனவாகிய கடன்களை யெல்லாம் செய்தனர். மன்னவனுக்காக அவனது பகைவர்களை எதிர்த்துப் போர்செய்யப் போந்த கலிப்பகையார் பகைமை நிறைந்த போர்க்களத்தில் உயிரைக் கொடுத்துப் புகழினைக் கைக்கொண்டனர்.

(வி-ரை.) ஒருவாறு - துயரொழிந்து என்க. மேற்பாட்டிற் கூறியவாறு அவர்களடைந்தது ஆற்றமாட்டாத துன்பந் தருவதொன்றாதலின் ஒருவாறு ஒழிந்து என்றாதர்.

பெருவானம் - இல்லொழுக்க நல்லொழுக்கத்தினால் தந்தையார் சென்றதும் (1292), கற்பு நெறிவழுவாது உயிர்நீத்து அவருடன் பிரியாத உலகெய்தத் தாயார் சென்றதுமாகிய விண்ணுலகம். பெருமை உயர்வு குறிததது.

செய் கடன்கள் - ஈமக்கடன், நீர்க்கடன் முதலியவைகள். "ஈம அருங்கடன்" (994) என்றது காண்க. அவை இறந்த அன்றும், அதன் பின்னர்த் தொடர்ந்து விதித்த சில நாட்களிலும் செய்யத்தக்கன. இவை செய்தே தீரவேண்டிய கருமமாதலின் கடன் எனப்படும். "தென்புல வாணர்க் கருங்கடனிறுக்கும்" என்றதும் காண்க. சூரபன்மனது மகன் இரணியன் தந்தைக்கு ஈமக்கடன் கழித்தற்கு ஒருவன் வேண்டுமென்பதற்கென்றே, மீனுருவெடுத்துக் கடலில் ஒளித்தனன் என்ற சரிதமும் காண்க. இறந்தபின் உயிருக்கு வேறு பிறப்பு அல்லது இருப்பு இல்லை என்று கொள்ளும் உலகாயதக்கொள்கையுட்பட்டு அலையும் இந்நாள் மாக்கள் இக்கடன்கள் செய்தலில் நம்பிக்கையில்லா தொழிந்து வருவாராயினர். ஆனால், ஆவியுலகத்தாருடன் கலந்தறியும் திறம் வாய்ந்த கூட்டத்தார் ஈமக்கடன்களின்பயனைப் பற்றியும், அவைகள் செய்யப்படவேண்டிய இன்றியமையாமையைப்பற்றியும், பிரிந்த உயிர்கள்மூலம் பல செய்திகளைக் கண்டு கூறுகின்றமையும் இங்குக் கருதத்தக்கது.

பெருக்கினார் - விதித்தபடி செய்தனர். அந்தியக் கடனாற்றுதலைப் பெருக்குதல் என்றல் மங்கல வழக்கு. "தாலி பெருகிற்று" என்றாற்போல. "காடு பெருக்கினார்" முதலிய உலக வழக்குக்களும் காண்க.

மருவார் - பகைவர். மலைதல் - போர் செய்தல்.

உயிர் கொடுத்துப் புகழ்கொண்டார் - மங்கல வழக்கு. புரவலன்பாலும் அவனாற் புரக்கப்படும் மன்னுயிர்களின்பாலும் அருளுடைமையினால் அக்காவலின் பொருட்டுத் தம்முயிரையும் கொடுத்தாராதலின் புகழ்கொண்டார் என்றார். "ஈவார்மே னிற்கும் புகழ்" என்பது முதுமொழி. உயிர் உறுப்பு பொருள் ஆகவே இவை ஒன்றேனும் பலவேனும் கொடுத்துப் புகழ் பெறுவதாகும். இதனைத் திருக்குறளுரையினுள் 'இணையின்றாக வோங்குதலாவது கொடுத்தற்குரிய உயிருறுப்புப் பொருள்களைக் கொடுத்தமை பற்றி வருதலால் தன்னோடொப்ப தின்றித் தானேயுயர்தல்' என்றது காண்க. கொடுத்துக் - கொண்டார் - என்றதனால் கொடுக்கும் பண்டம் உயிராகவும், கொள்ளும் பண்டம் புகழாகவும் பண்ட மாற்றுவகையில் உருவகம் செய்யப்பட்டது. கொடுக்கும் பொருளினும் கொள்ளும் பொருளினைப் பெரிதாகக் கருதுவதே பண்டமாற்றில் கொடுப்போன் - கொள்வோன் என்ற இருதிறத்தாரும் உட்கொள்ளும் உள்ளுறை. இங்கு உயிரினும் புகழைப் பெரிதாகக் கருதினார் என்பது கருத்து. "நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும், வித்தகர்க் கல்லா லரிது" என்ற திருக்குறளுக்கு "ஆக்க மாகுங் கேடாவது புகழுடம்பு செல்வ மெய்தப் பூதவுடம்பு நல்கூர்தல்; உளதாகும் சாக்காடாவது புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறத்தல். நிலையாதனவற்றால் நிலையினவெய்துவார் வித்தகராதலின்வித்தகர்க்கல்லா லரிது என்றார்" என்று ஆசிரியர் பரிமேலழகர் உரைத்தவை காண்க.

கடன்கள் பெருக்கினார்; உயிர் கொடுத்துப் புகழ்கொண்டார் - அச்சிறு மகார்க்குப் பெற்றோரிருவரையும் ஓருங்கே யிழந்த ஆற்றெணாத துயரத்தினை அடுத்து, அது மாறாமுன், மற்றொரு பெருந்துயரமும் நேர்ந்ததென்பதனையும்.