பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்41

 

யானும் முன்னம் - முன்னம் - நீர் உயிர்துறப்பதன் முன். எனக்கு உரிய காலம் வருமுன்பு என்றும், யான் உம் முன்னம் என்று பிரித்து, உமது திருமுன்பே என்றும் உரைக்க நின்றது.

இடரின் அழுந்தினார் - அழுந்தினாராகவே. முற்றெச்சம். மிக்க துன்பமடைந்தனராகவே. அழுந்தினார் குறிப்புருவகம். துன்பமாகிய கடலினுள் என்க.

33

1299. (வி-ரை.) தயா - விலக்க என்க. கணவனுடன் செல்வதினின்றும் ஏனையோரை விலக்குவது உடற்பற்று முதலிய காரணங்கள்; ஆனால் இங்கு அம்மையாரை "உம்பருல கணையவுறு நிலை"யினின்றும் விலக்கியது" தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா"வேயாகும். தயா - கருணை. தம்பொருட்டு உயிர்தாங்க நினையாது தம்பியார் பொருட்டே உயிர்தாங்கத் துணிந்தனர் என்பதாம்.

உளராக - உளராதல் - உலகில் உள்ளவராகுதல். "உளரானார் - உளரானார்" (1281) என்றது பார்க்க. புகழனார் உளரானதுபோல அவர்தம் மகனாராகிய, தமது தம்பியாரும் வழிவழியாக உளராக வேண்டுமெனக்கொண்ட கருணை. அந்தக் குடும்பம் கால்வழி யற்றுப்போகாது சைவத் திறத்தில் நீடுசெல்வது வேண்டுமென்பது கருதி என்க. திலகவதியார் வைத்த தயாவானது அன்று அவர் கருதியதன்மேல் பன்மடங்கு பெரும்பயனை உலகுக்கு அளிக்கும்படி விளைந்ததனை 1330 - 1331-ன் நிகழ்ச்சிகளாற் காண்க. சைவ மரபு இன்றும் இனியும் உளதாவது இதன் பயனாகுமென்க.

உம்பருலகு - கணவனுடன் என்றும் பிரியா விண்ணுலகம். 1293 பார்க்க. அதனை அணையவுறுதலாவது தீப்பாய்ந்து உயிர் துறந்து செல்லுதல்.

உயிர் தாங்கி - தாங்கி என்றதனால் உயிருடனிருத்தல் இன்பமெனப் பற்று வைக்காது அதனை ஒரு பாரமெனவே தாங்கினார் என்பது கருத்து.

அம்பொன் மணிநூல் - பொன்னும் மணிகளும் கோத்த அணிகள். மணிக்கோவை.

மணிநூல் தாங்காது - உலக நிலையில் வைதவ்யம் என்றும், அமங்கலித்துவம் என்றும் வழங்கும் நிலையில்நின்று. "இதனைக் காதல னிழந்த தாபத நிலையும், நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடை யிட்டபாலைநிலையும்" என்று தொல்காப்பியம் (புறத்திணையியல் - 24) கூறும். இதற்குக் காதலனையிழந்த மனைவி தவம் புரிந்தொழுகிய நிலைமையானும்" என்றுரை கூறினர். "இம்பர்மனைத் தவம்புரிந்து" என்றதும், பின்னர் "தாபதியார்" (1343) என்பதும் காண்க. மாதினியார் செய்கையினாலும், திலகவதியார் துணிவுகொண்ட அதனாலும், கலிக்காமர் தேவியாரும் "பொருவருங் கணவரோடு போவது புரியுங்காலை" (ஏயர்கோன் - புரா - 398) என்றதனாலும் கணவருடன் செல்வதே கற்புடை மகளிருள் அந்நாளில் பெரும்பான்மை வழக்காயிருந்த தென்பதும், அவ்வாறு செல்லாது உயிர்தாங்கித் தாபத நிலையில் வாழ்வது சிறுபான்மை நிகழ்ந்ததென்பதும் அறியப்படும். இவ்விருவகை நிலைகளையும்பற்றியும் தொல்காப்பியத்திலும், புறப்பாட்டு முதலிய பழந் தமிழலக்கியங்களிலும் உரைத்தவை ஆண்டாண்டுக் கண்டுகொள்க. இதனைக் காஞ்சித்திணை என்பதனுளடக்கிக் கூறுவர். "காஞ்சிதானே பெருந்திணைப் புறனே", "பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும்" (மேற்படி 22), "நில்லா வுலகம் புல்லிய நெறித்தே" (மேற்படி 23) என வரும் தொல்காப்பியமும், "முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாகவன்றி வாளா நிலையின்மை தோன்றக்கூறும் பகுதி" என்று சூத்திரக்கருத்துரைத்த நச்சினார்க்கினியர் உரையும், அவைபோன்ற பிறவும் இங்குக் கருதத்தக்கன. "பல்சான்றீரே" (புறம் - 246) என்ற புறப்பாட்டு இவ்விருவகை நிலைகளையும் நன்கு விளக்குவது, ஆனால் கணவனொடு செல்லும்நிலை முதலியவற்றைத் தற்கொலை என்று வகையின்பாற்படுத்தி அரசாங்கத்தார் சட்டங்களின் வாயிலாக விலக்கி விட்டமையால் இந்நாளில் அவை ஒழிந்துபோயின. ஏனைத் தாபதநிலை முதலிய