பக்கம் எண் :


42திருத்தொண்டர் புராணம்

 

வழக்குக்களும் பெண்ணுரிமைச் சீர்திருத்தம் என்ற பேரால் ஒழிக்கப்பட்டன வாய் நிற்றலின் இவையெல்லாம் பழங்கதைகளாய், முற்காலச் சரித ஆராய்ச்சிக்குத் துணைசெய்யும் அளவில் நின்றொழிந்தன.

அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி - எல்லாவுயிர்களும் இன்புற்றிருக்கும் அதனை நினைதல் திலகவதியாரது அருள்பொதிந்த திண்ணிய கருத்தாதலின் அது எல்லாவுயிர்க்கும் இன்பம் செய்யும் பேரருட் பரமாசாரியராகத் தமது தம்பியாரை உருப்படுத்தி உலகுக்கு அளித்தது என்க. அருள் - தொடர்பு பற்றாது உயிர்கள் மேல் செல்லும் இரக்கம்.

மனைத்தவம் புரிந்து - மனையை விட்டுப் புறம் செல்லாது உரிய நோன்புகளும் அறங்களும் பூசையும் செய்து. தவம் - பூசையும் தியானமும் முதலியன.

இருந்தார் - உயிர்தாங்கி நின்றனர். இறந்தார் எனப்படாது இருந்தார்; சொல்லளவில் இருந்தார் - எனப்பட்டார் என்பது கருத்து. ஆயின் அவர் இருந்தார் என்பதற்கும் அவ்வாறாக உள்ள ஏனையோர் (உயிருடன்) இருந்ததற்கும் உள்ள வேறுபாட்டினை "தயா.....புரிந்து" என்றதனால் காட்டிப் போந்தமை காண்க. தம்பியார் உயிர் நீப்பதனை விலக்கும்பொருட்டே தாம் உயிர்தாங்கியிருந்தார் என்பது.

34

1300.

மாசின்மனத் துயரொழிய மருணீக்கி யார்நிரம்பித்
தேசநெறி நிலையாமை கண்டறங்கள் செய்வாராய்க்
காசினிமேற் புகழ்விளங்க நிதியளித்துக் கருணையினால்
ஆசிலறச் சாலைகளுந் தண்ணீர்ப்பந் தருமமைப்பார்,

35

1301.

காவளர்த்துங் குளந்தொட்டுங் கடப்பாடு வழுவாமன்
மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்
நாவலர்க்கு வளம்பெருக நல்கியுநா னிலத்துள்ளோர்
யாவருக்குந் தவிராத வீகைவினைத் துறைநின்றார்.

36

1300. (இ-ள்.) வெளிப்படை. குற்றமற்ற தமது மனத்தின் துயரம் நீங்க, அதன்பின் மருணீக்கியார் வயது நிரம்ப வளர்ந்து, உலக வாழ்க்கை நிலையாமையுடையது என்று கண்டு அறங்களைச் செய்வாராகி, உலகத்தில் தமது புகழ் விளங்கும்படியாகச் செல்வத்தைக் கொடுத்துக் குற்றமற்ற அறச்சாலைகளையும் தண்ணீர்ப் பந்தரையும் கருணையினால் அமைப்பாராகி, (அவற்றுடனே)

35

1301. (இ-ள்.) வெளிப்படை. சோலைகளை வளர்த்தும் குளங்களைத் தோண்டியும், நேர்மையினின்றும் வழுவாமல் வந்து மேவினவர்களுக்கு வேண்டுவனவற்றை மகிழ்ச்சியுடன் கொடுத்தும், விருந்தினரைப் பாதுகாத்தும், நாவலர்களுக்கு வளம்பெருகும்படி செல்வம் முதலியவற்றைக் கொடுத்தும், இன்னும் இந்நானிலத்துள்ளார் எவர்களுக்கும் பாகுபாடின்றித் தவிர்தலில்லாத ஈகைத் தொழிலில் ஒழுகி, மாறாது நின்றனர்.                                                                                 36

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1300. (வி-ரை.) மாசில் மனத்துயர் - துயர் - திலகவதியார் தம்மைத் தனிக் கைவிட் டேகாமல் இருத்தல்வேண்டுமே என்னும் கவலையினால் நேர்ந்ததுன்பம்.

ஒழிய - அவர் உயிர்தாங்கி நிற்க உடன்பட்டதனால் நீங்க.

நிரம்பி - தக்க வயது நிரம்பிய பின். 1287-ல் கருதப்பட்டவாறு அப்போது பத்து ஆண்டுகளே நிரம்பப்பெற்றிருந்த அவர் பின்னர் உரிய ஆண்டுகள் நிரம்பப் பெற்றபின் என்பது. அறங்கள் செய்தற்கும், நாவலர்க்கும் பிறருக்கும் நலனறிந்து