பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்425

 

செங்கனகக்குன்ற வில்லியார் - நாடோறும் படிக்காசு நல்கிய பிற்சரித நிகழ்ச்சிக்குறிப்புப்படப் பொன்மலைத் தொடர்புபற்றிக் கூறினார். "கன்னெடுங், காலம் வெதும்பிக் கருங்கட னீர்சுருங்கிப், பன்னெடுங் கால மழைதான் மறுக்கினும் பஞ்சமுண்டென், றென்னொடுஞ் சூளறு மஞ்சனெஞ் சேயிமை யாதமுக்கட், பொன்னெடுங் குன்றமொன் றுண்டுகண் டீரிப் புகலிடத்தே" என்ற பொதுத் திருவிருத்தக் கருத்துக் காண்க.

கோயில் வலமா வந்து - கோயிலைப் புறத்து வலம்வந்து பின்னர் உட்புகும் முறை.

செக்கர்ச்சடை - சிவந்தசடை. "தீமலர்ந்த சடைக்கூத்தர்" - திருத்தொண்டர் புராணம் வரலாறு.

சடைமவுலி - சடையாகிய முடி. "சடைமுடி சாட்டியக் குடியார்க்கு" (திருவிசைப்பா).

விழுந்தார் - எழுந்தார் - வினைமுற்றுக்கள் எச்சப்பொருளில் வந்தன. வினைமுற்றாகவே கொள்ளலுமாம். இச்செயல்கள் வழிபாட்டு முறையில் தொடர்ந்து நிகழ்வனவேனும், நாயனாரது வழிப்பாட்டின் ஆர்வ மிகுதியால் அவை தனிச் செயல்களாகக் காணப்பட்டன என்பது குறிப்பு. இது, விம்மினார் என்றதனாலும், மேல்வரும் பாட்டிற் கூறுகூனவற்றாலும் குறிப்பிக்கப் பட்டது.

252

1518.

 கைகள் குவித்துக் கழல்போற்றிக் கலந்த வன்பு கரைந்துருக
 மெய்யில் வழியுங் கண்ணருவி விரவப் பரவுஞ் சொன்மாலை
"செய்ய சடையார் தமைச்சேரார் தீங்கு நெறிசேர் கின்றா"ரென்
 றுய்யுநெறித்தாண்டகமொழிந்தங்கொழியாக்காதல் சிறந்தோங்க,


1519.

முன்னா ளயனுந் திருமாலு முடிவு முதலுங் காணாத
பொன்னார் மேனி மணிவெற்பைப் பூநீர் மிழலை யினிற்போற்றிப்
பன்னாள் பிரியா நிலைமையினாற் பயிலக் கும்பிட் டிருப்பாராய்,
அந்நாண்மறையோர் திருப்பதியிலிருந்தார் மெய்மை யருந்தவர்கள்.

(இ-ள்.) கைகள்.....விரவ - கைகளிரண்டையும் சிரமேற்குவித்துக் கழல்களைப்போற்றி, உள்ளமானது நிரம்பிக் கலந்த அன்பினாற் கரைந்து உருகத், திருமேனியில் வழியும் கண்ணீர் அருவிபோலப் பொருந்த; பரவும் சொன்மாலை - துதிக்கின்ற சொன்மாலையாகிய திருப்பதிகம்; "செய்ய சடையார்....சேர்கின்றார்" என்று - "சிவந்த சடையினையுடைய பெருமானைச் சேராதவர்கள் தீங்கு நெறிக்கே சேர்கின்றார்" என்ற கருத்துடையதாய்; உய்யும்...மொழிந்து - உய்யும் நெறியைக் காட்டுந் திருத்தாண்டகத்தை அருளிச் செய்து; அங்கு....ஓங்க - அவ்விடத்து நின்றும் நீங்க முடியாத காதல் மேல் ஓங்கி எழ,

253

1519.(இ-ள்.) முன்னாள்....போற்றி - முற்காலத்தில் அயனும் திருமாலும் முடிவும் முதலும் அறியமுடியாது நீண்ட பொன்னார் மேனியினையுடைய மணி வெற்பாகிய இறைவரை அழகிய நீர்வளமுடைய திருமிழலையிற் போற்றி செய்து; பன்னாள்......கும்பிட்டிருப்பாராய் - பலநாளும் பிரியாதிருக்கும் பண்பினால், வாகீசர், பயிலக் கும்பிட்டுக் கொண்டிருப்பாராகி; அந்நாள்....அருந்தவர்கள் - அக்காலத்தே மறையோர் வாழும் அத்திருப்பதியில் உண்மைநிலை யருந்தவர்களாகிய அவ்விரு பெருமக்களும் அடியார்களும் தங்கி எழுந்தருளி யிருந்தார்கள்.

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.

1518.(வி-ரை.) இத்திருப்பாட்டும் வாகீசர் பெருமானது செய்கை குறித்தது. கைகள் குவித்தல் - கழல் போற்றல் - அன்பு உருகுதல் - கண்ணீர் பாய்தல் சொன்மாலை பரவுதல் - இவை அன்புமிகுதிப்பாட்டின் நிகழும் மெய்ப்பாடுகள்.