"செய்ய சடையார் தமைச் சேரார் தீங்குநெறி சேர்கின்றார்" என்று - இது பதிகக்கருத்து ஆசிரியர் காட்டியபடி. பதிகப் பாட்டுத்தோறும் வரும். "திருவீழிமிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே" என்ற மகுடம் காண்க. "திருநாகேச் சரத்து ளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே" என்று எதிர்மறை முகத்தாற் கூறிய நாயனார், அவ்வாறு நன்னெறியிற் சேரா விடில் எங்குச் சேர்கின்றாரென்னில், அவர் சேர்வது தீநெறிக்கேயாம் என்று உடன்பாட்டு முகத்தால் உறுதி கூறினார். "நன்றென்ப சிலவே, தீதென்பசிலவே, ஒன்றிலும் படாதன சிலவே." (11-ம் திருமுறை. கோயினா - 32) என்றபடிதீமையும் நன்மையும் அல்லாதவையு முளவாகலின் அவ்வாறன்றிச், சிவ நெறி சேராதார் தீநெறியே சேர்கின்றார் என்று வற்புறுத்தினார். தீங்குநெறி - தீமை பயக்கு நெறி. உய்யு நெறி - உலகரை உய்விக்கும் நெறியைக் காட்டுகின்ற. சிவபெருமானைச் சேர்வதே உய்யுநெறியாவது; பிற எல்லாம் அதற்கு மாறுபாடாய்த் தீமையிற் செலுத்தும் நெறிகள் என்று எடுத்துக்காட்டுதல் குறிப்பு. ஆங்கு ஒழியா - அங்குநின்றும் - அத்தலத்தினின்றும் - நீங்காத. "பிரியா நிலைமையினால்"என மேல்வரும் பாட்டிற் கூறுவதுமிது. சிறந்து ஓங்குதல் - மிகுதல். பலகாலம் அங்குத் தங்க நேர்ந்ததன் காரணம் கூறப்பட்டது."பலநாள் பயிலக் கும்பிட்டு இருப்பாராய்" என்பது இதனாலாகியது என்பது வரும்பாட்டின் குறிப்பு. இருப்பாராய் - வாகீசர் என்ற எழுவாய் தொக்குநின்றது. வாகீசர் - கூட - அணைந்தார் (1516), விம்மினர் (1517); அவர், போற்றி - உருக - விரவ - என்று - மொழிந்து - ஓங்கப் (1518), போற்றிக் கும்பிட்டு, இருப்பாராய்,- அருந்தவர்கள் - இருந்தார் (1519)என்று இந்த நான்கு பாட்டுக்களையும் முடிபுசெய்து கொள்க. இருபெருமக்களும் உடன் கலந்திருப்பினும் வாகீசர் புராணமாதலின் அவரது வழிபாட்டு முறைகளையும் செயல்களையும் இங்குத் தனியாகஎடுத்துக் கூறிப், பிள்ளையாரும் தொண்டர்களும் உடன் அணைந்தனர் (1516) என்றும் பதியில் இருந்தார் (1519) என்றும் முன்னும் பின்னும் கூட்டி உரைத்தனர். இவ்வாறே, ஆளுடைய பிள்ளையார் புராணத்துள், மறையோர் அவரை எதிர் கொண்டமையும், பிள்ளையார் திருக்கோயிலுட் சென்று வழிபட்ட முறைமையும், புறத்திற் சேர்ந்து ஒரு திருமடத்து எழுந்தருளியமையும் ஆகிய அவரது செயல்களையே தனியாகச் சிறப்பித்து (திருஞான - புரா - 539- 546) எட்டுத் திருப்பாட்டுக்களாற் கூறி, அரசுகள் பிள்ளையாரெழுந்தருளுமுன் திருமிழலை சேர்ந்ததும், வழிபாட்டின் பின்னர்த் திருக்கோயில் மதிற்புறத்து ஒரு மாமடத்து அடியார்களும் தாமும் சேர்ந்தமையும் முன்னும் பின்னும் கூட்டி உரைப்பதும் காண்க. இருபெரு மக்களும் கலந்து நிகழினும் இருவர் வழிபாடுகளும் வழிபாட்டு முறைகளும் தனித்தனி நிகழ்ந்தனவாதலின் தனித்தனி கூறப்பட்ட முறையும் கண்டு கொள்க. இருபெரு மக்களும், பின்னர், அடியார்களுடன், பின் "இருவருடைய திருமடங்கள்" (1526) என்றபடி, வெவ்வேறு திருமடங்களில் எழுந்தருளியிருந்தமையும், இருவர்க்கும் இறைவர் தனித்தனி படிக்காசு அருளியமையும், அவைபற்றிய பிற் சரித நிகழ்ச்சிகளும், அத்திருமடங்களின் நினைவாக இன்றும் வடக்குத் திருமாடவீதியில் இரண்டு தனிக்கோயில்களில் நாயன்மார்கள் எழுந்தருளியிருந்தலும், பிறவும் இங்கு வைத்துக் கண்டுகொள்க. கரைந்துருக்க - விரவி - என்பனவும் பாடங்கள். 253 திருவீழிமிழலை I திருச்சிற்றம்பலம் | திருத்தாண்டகம் |
| போரானை யீருரிவைப்போர்வையாலை புலியதளேயுடையாடை போற்றினானைப் பாரானை மதியானைப் பகலா னானைப் பல்லுயிராய் நெடுவெளியாய்ப் பரந்து நின்ற |
|