பக்கம் எண் :


428திருத்தொண்டர் புராணம்

 

பூநீர் - பூ - அழகு. நீர் - நீர்வளம், காவிரியாலாகியது. "பூந்தண் பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனல்" (1206). இதனை அடுத்து மேல்வரும் பாட்டில் "பொன்னி நதியும் பருவம் மாறுதலும்", என நீர் சுருங்கிய வறுமையைக் கூறும் ஆசிரியர், இங்கு நீர்ச்சிறப்பாற் கூறிய தென்னையோ? எனின், அவ்வாறு நீர் சுருங்க வரினும், வளஞ் சுருங்கா நிலையினை நாயன்மார்களது பெருமையாற் பெற்ற பூநீர்மையுடையது இத்தலமாம் என்று மிழலையின் தனிச் சிறப்புக் குறிப்பதற்கென்க.

நீர் - நீர்மை - தன்மை - என்ற குறிப்பும்பட நின்றது.

பன்னாள் பிரியா நிலைமையினாற் பயிலக் கும்பிட்டிருந்தமை - "அங்கு ஒழியாக் காதல் சிறந்தோங்க" (1518) வைத்துப் பிற் சரித விளைவினை நிகழ்விக்கும் பெருமானருட் குறிப்பினாலாகியது.

பிரியாமை - ஒவ்வொரு நாளும் காசுபெற்று அடியாரை அமுது ஊட்ட வேண்டி யிருத்தலின், அங்கு நின்றும் வேறு தலங்களுக்கும் போய் வராமல் என்றது குறிப்பு.

பன்னாள் பிரியா நிலைமை - "காலந் தவறு தீர்ந்து" (1527) என்னும் காலம் வரையில்.

பயில - மிகுதி குறிப்பது. காலங்கடோறும் நீங்காது. பிரியா நிலைமையும் - பயிலுதலும் இருவரையும், அடியார்களையும் உடன்கொள்க. இருப்பாராய் - தங்கும் திருவுள்ளமுடையவராகி.

அந்நாள் - அருந்தவர்கள் - இருந்தார் - என்க. அக்காலம் முழுதும் என்க. அகரச் சுட்டுப் பன்னாள் என்றதனைச் சுட்டியது.

மறையோர் திருப்பதி - அத்தலத்துள்ளோருள் மறையோர் மிகுந்திருந்தமையால் மிகுதிபற்றி மறையோர் பதி என்றார்; தென்னை மா பலா முதலிய மரங்களிருப்பினும் கமுகு மிகுதிபற்றிக் கமுகஞ்சோலை என்றாற்போல.

மெய்ம்மை அருந்தவர்கள் - நாயனாரும் பிள்ளையாரும். இறைவரது சத்தாகிய உருவம்போல, இவ்விரு பெருமக்களும் இறைவரை இடைவிடாது பற்றியதனால் அத்தன்மையே யாயினவர்கள் என்பது. மெய்ம்மை நிலையைத்தரும் - செய்யும் - அரிய தவம். சிவபூசை என்க. மெய்ம்மை யருந்தவர்களாதலின் அவர்களது திருவாக்கும் மெய்த் திருவாக்குக்களாகி - இறைவரது திருவாக்கேயாகி - செயல் செய்தன என்பது. ஈண்டு இவ்விரு பெருமக்களோடு அவர்களுடன் அமரும் பெருவாழ்வு பெற்றுப் பின்னர் உடன் முத்திபெருந் தகுதிவாய்ந்த ஏனை அடியார்களும் உடன் கொள்ளப்படும்.

254

1520.

சீரின் விளங்குந் திருத்தொண்ட ரிருந்து சிலநாட் சென்றதற்பின்
மாரி சுருங்கி வளம்பொன்னி நதியும் பருவ மாறுதலும்
நீரி னியன்ற வுணவருகி நிலவும் பலமன் னுயிர்களெலாம்
பாரின் மலிந்த விலம்பாட்டிற் படகூர் வறுமை பரந்ததால்.

255

(இ-ள்.) சீரின்...சென்றதற்பின் - சிறப்பினால் விளங்கும் திருத்தொண்டர்கள் அவ்வாறிருந்து சில நாள்கள் கழிந்த பின்பு; மாரி சுருங்கி - மழை சுருங்கியதனால்; வளம்பொன்னி....மாறுதலும் - நாள் பொய்யாதளிக்கும் வளமுடைய காவிரி நதியும் நீர்தரும் பருவத்தில் தராது மாறுதலடையவே, (அதனால்); நீரின் இயன்ற உணவு அருகி - நீரால் விளையத் தக்கனவாகிய உணவுப் பொருள்கள் குறைந்து; நிலவும் பல மன் உயிர்கள் எல்லாம் - உணவினால் வாழ்கின்ற பல நிலைபெற்ற உயிர்கள் எல்லாமும்; பாரின் மலிந்த இலம்பாட்டில் படர்கூர் - உலகில் மிக்க இலம்பாட்டின் காரணமாகத் துன்பமிகுதி அடையும்; வறுமை பரந்தது - தரித்திரம் பரவியது. (ஆல் - அசை - உறுதிக்குறிப்புப்பட நின்றது.)

(வி-ரை.) சீரின் விளங்கும் திருத்தொண்டர் - சீர் - இறைவரது திருவருள் பெற்று உலகமுய்யும் நெறிகாட்டும் சிறப்பு. விளங்கும் - முக்காலத்துக்கும்