நல்குதற்கும் உரிய வயது நிரம்பி என்பது கருத்து. கல்வி அறிவு ஒழுக்க முதலியவற்றால் நிரம்பி என்பாருமுண்டு. இங்கு நிரம்பி என்ற ஒரு சொல் அவர் மனையில் வாழ்ந்த வாழ்க்கையின் காலமுழுமையும் குறித்து நின்றது. அந்நாளில் அவர் மணஞ் செய்து கொண்டு மனைவி மக்களுடனிருந்து இல்வாழ்க்கை நடாத்தினார் என்று புதிய ஆராய்ச்சி செய்வாரும் பலருளர். "மக்களே மணந்த தார மவ்வயிற் றவரை யோம்புஞ், சிக்குளே யழுந்தி யீசன் றிறம்படேன் றவம தோரேன்" (குறைந்த திருநேரிசை - 2) முதலிய திருவாக்குக்களை அவ்விசாரத்துக்குத் துணையாகவும் காட்டுவார். நாயனார் மணஞ்செய்து இல்வாழ்க்கை நிகழ்த்தாமலே துறவறத்தில் ஒழுகியவர் என்று கொள்வது மரபு. "மூர்த்தியாரப்பர் நல்ல துறவறம்" என்பது புராண வரலாறு. ஆயின் அவர் மனையிலிருந்து அறங்கள் செய்த வாழ்க்கை நிலையின் திறம் எதுவாயினும் அது துறக்கப்பட்டொழிந்ததனை "நிலையா வாழ்க்கை யல்லேனென் றறத்துறந்து" (1302) எனக் கூறியவாற்றானும், நிரம்பி என்று ஒரு சொல்லாற்றலால் அதன் விரிவெல்லாம் இலேசாக அடக்கிக் கூறிப்போந்த திறத்தாலும், மற்றும் சொல்லாமையானும் அவ்வாராய்ச்சி அவமாகிய வீண்செயலா மென்பது ஆசிரியர் கருத்தென்பது துணியப்படும். தேசநெறி - உலகவாழக்கையிற் கொள்ளும் மனை செல்வம் இல்வாழ்க்கை முதலியவற்றைச் சார்ந்தொழுகும் உலகநெறி. நிலையாமைகண்டு - யாக்கை, இளமை, செல்வம் முதலிய உலக உடைமைகள் யாவும் நிலையாக உள்ளனபோலத் தோன்றிப் பின் மறைந்துபடுவனவே என்ற உண்மையை உணர்ந்து. கண்டு - தெரிந்து உணர்ந்து. நூற்கல்வியாற் றெரிதலேயன்றி உள்ளத்தழுந்திய உணர்ச்சியாகிய அனுபவத்தில் தெரிந்து. "தந்தையாரும்பயந்த தாயாரும்" ஒருங்கே தமது இளம்பருவத்தில் அகன்றதும், தமக்கை யாருக்கு மணம் பேசியவரும் வதுவைவினை முடிப்பதன் முன் அகன்றதும், அது பற்றி அம்மையார் உயிர்நக்க நின்றதும், தம் வேண்டுதலுக்காக உயிர்தாங்கித் தாபதநிலை மேற்கொண்டு தவம்புரிந்து நிற்பதும் ஆகிய இவையே இளம்பருவத்தில் நாயனாரது மனத்தினுள் ஊன்றி உலக நிலையாமையினை அவரது மனத்தில் வற்புறுத்தப் போதியனவாயின. அறிவுடைய ஒருவன் இவ்வாறு கண்ட உலக அனுபவங்களாலே பல அரிய ஞானங்களைக் கற்றுக்கொள்ள ஏதுவுண்டு. ஆயினும் பலரும் இவ்வாறு ஞானம் பெறாமலுழல்வது என்னை? எனின், முன்னையநிலையிலே முனியாக இறைவனை அடையத் தவஞ்செய்து விட்டகுறை இங்குத் தொடர்ந்து இந்த ஞானம் விரைவில்வரத் துணைசெய்தது என்பதும் நாம் நினைவிற் கொள்ளத்தக்கது. நிலையாமை கண்டு அறங்கள் செய்வாராய் - "பிறத்தலும் பிறந்தாற் பிணிப்பட வாய்ந்தசைந் துடலம் புகுந்துநின், றிறக்குமா றுளதே யிழித்தேன் பிறப்பினை நான், அறத்தையே புரிந்த மனத்தனா யார்வச் செற்றக் குரோத நீக்கியுன், றிறத்தனா யொழிந்தேன் றிருவாரூ ரம்மானே" (சீகாமரம் - 8) என்ற நாயனாரது திருவாக்கு அவரது இச்சரிதப் பகுதியை நன்கு விளக்கும் அகச்சான்றாகும். இங்கு நாயனார் செய்தன பசுதருமம் என்னும் உலகநிலை அறங்களேயாம். "ஈதல் அறம்" என்றபடி தமது உடைமைகளை வந்த வந்தவாறு அளித்தல் இங்கு அறமெனப்பட்டது. இவை வேறு; "தம்மை மறந்து நின்னை நினைப்பவர்" என்ற நிலையில் சிவபிரானிடத்தும் அவனடியா ரிடத்தும் செய்யும் அறங்கள் வேறு. அவை பதி தருமம் எனப்படும். முன்கூறிய பசு தருமங்கள் இம்மையிற் புகழும், மறுமையிற் புண்ணியமும் தந்தொழிநது மீளவும் பிறவியில் வீழ்த்தும். பதிதருமங்களோ |