தல், என்கடன்பணி செய்து கிடப்பதே" என்பது நாயன்மார்களின் மனநிலையாதலின், தம்மையே இறைவரது பரமாக ஒப்புவித்த அவர்களை வழிபடும் அடியவர்களைக் காப்பதும் இறைவரது கடனாயிற்று. குலவும் பெருமை - சிவனையன்றி வேறுணராது அறிவாற் சிவனேயாகும் பெருமை. ஞாலம் அறிய - உலகர் அறிந்ததனால் திருத்தொண்டின் பெருமை அறிந்து உய்யும்படி. படிக்காசு - படியாகிய காசு. படி - நாள்தோறும் நியமிக்கும் ஒழுங்கு. படியில் என்று உரைப்பாருமுண்டு. "கிழக்கும் மேற்கும் பீடத்தில்" காசு வைத்தார் என்று மேல்வரும் பாட்டில் உரைப்பதனால் அவ்வுரை பொருந்தாதென்க. படிவேறு; பீடம் வேறு. "நாள்கடொறுங் காசுபடி வைத்தருள" (1523) என்பதும் காண்க. வேலை நாட்கூலிக்காகத் தரும் உணவுப்பொருளுக்குப் படிச்செலவு என்பதும் வழக்கு. இங்கு வேலை இறைவனடித் தொண்டு. அமுதுபடிக்கு வேண்டும் காசு என்றலுமாம். 257 1523. | விண்ணின் றிழிந்த விமானத்தின் கிழக்கு மேற்கும் பீடத்தில் அண்ணல் புகலி யாண்டகையார் தமக்கு மாண்ட வரசினுக்கும் நண்ணு நாள்க டொறுங்காசு படிவைத் தருள, நானிலத்தில் எண்ணிலடியா ருடனமுது செய்தங் கிருந்தா ரிருவர்களும், |
258 1524. | "அல்லார் கண்டத் தண்டர்பிரா னருளாற் பெற்ற படிக்காசு பல்லா றியன்ற வளம்பெருகப் பரம னடியா ரானார்கள் எல்லா மெய்தி யுண்க"வென் விரண்டு பொழுதும் பறைநிகழ்த்திச் சொல்லாற்சாற்றிச்சோறிட்டார்; துயர்கூர்வறுமைதொலைத்திட்டார். |
1523.(இ-ள்.) விண் நின்று இழிந்த விமானத்தின் - ஆகாயத்தினின்றும் போந்த விமானமாகிய கோயிலினுள்; கிழக்கும் மேற்கும் பீடத்தில் - கிழக்கிலே திருமுன்பு உள்ள பீடத்திலும், மேற்கிலுள்ள பீடத்திலும், புகலி ஆண்டகையார் தமக்கும் ஆண்ட அரசினுக்கும் - ஆளுடைய பிள்ளையாருக்கும் ஆளுடைய அரசுகளுக்குமாக; நண்ணும் நாள்கள்தொறும் - கும்பிட வரும் நாள்கள்தோறும்; அண்ணல் - பெருமையுடைய மிழலை நாயகனார்; காசுபடி வைத்தருள - படியாகக் காசினை வைத்தருள; நானிலத்தில்...இருவர்களும் - நானிலத்தில் எண்ணில் அடியார்களுடன் அமுதுசெய்து அங்குத் தங்கியிருந்தார்களாகி நாயன்மார் இருவர்களும், 258 1524.(இ-ள்.) அல்லார்....பெருக - திருநீலகண்டமுடைய தேவதேவரது திருவருளினால் படியாகப் பெற்ற காசினால் பலவாறு பொருந்திய வளங்கள் பெருகியதனால்; "பரமன்...உண்க" - "முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானடியாராயினார் எல்லாரும் வந்து அமுது உண்க"; என்று - என்று எடுத்துக்கூறி; இரண்டு...சாற்றி - நாள் இருபோதும் பறை சாற்றுவித்துச் சொல்லாற் சாற்றுவித்து; சோறு இட்டார் - சோறு இட்டார்கள்; துயர்...தொலைத்திட்டார் - துன்பமிகு வறுமை நோயைத் தொலைத்திட்டார்கள். 259 இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டு ஒரு பொருண்மேனின்றன. 1523.(வி-ரை.) விண்ணின்று இழிந்த விமானத்தின் - "விண்ணிழிந்த கோயில்" (1516) பார்க்க. விமானம் - இங்குக் கோயில் என்ற பொருளில் வந்தது. கிழக்கும் மேற்கும் பீடத்தில் - பீடம் - பலிபீடம். கிழக்குப்பீடம் - சுவாமி சந்நிதிக்கு நேர் எதிரில் உள்ளபீடம். "பிள்ளையார்தாம் அபிமுகத்துப் பீடிகை |