பக்கம் எண் :


434திருத்தொண்டர் புராணம்

 

யார்கட்காகக் கொடுக்கப்பெறினும் இந்நாயன்மார்களின் பொருட்டே கொடுக்கப்படுதலால் இவர்கள் திறத்துக்கேற்ற கொடையேயாம் எனப்படும்; வாகீசர் வாக்குத் தொண்டினும் கைத்திருத் தொண்டாகிய மெய்வருத்தும் அடிமைத்திறத்தின் முன்னின்ற நிலையினர்; பிள்ளையார் தாளம் பெற்றும், சிவிகை பெற்றும், பந்தர் பெற்றும் திருமேனி வருந்தப்பெறாது ஏற்ற தொண்டுசெய்த நிலையினர்; "மெய்வருத்தக் கூலிதரும்" என்றபடி கைத்தொண்டு செய்வார் பெறும் காசு வாசிபடுமாயின் வாசியினளவுக்குக் குறைவுபடுமாதலின் அவ்வளவுக்குக் குறைந்த கூலியாகி, ஏற்ற கூலிதராது வேலைவாங்கும் தலைவர் என்ற குறை இறைவர்பாற் சாரும்; பிள்ளையார், மெய்வருத்தக் கூலியாகாது மகனாராகுந் தன்மையாற் பெறும் காசாதலின் காசின் இயல்பின்படி வாசிபடுதலில் இழுக்கில்லை என்று இவ்வளவும் கொள்க. "இதனால் திருமேனி வருந்தக் கைத்தொண்டு செய்தலும் திருமேனி வருந்தாது மகனாரென்னும் பெருந்தன்மையோடிருத்தலுமாகிய வேறுபாடு விளக்கிய வாசியோடும் வாசியின்றியும் மிழலைநாதர் கொடுத்தனர் என்று கொள்க" என்பது ஆறுமுகத் தம்பிரானா ருரைக்குறிப்பு. அவ்வாறு போந்த வாசியினைப் பிள்ளையார், மேலும் "வாசிதீரவே" என்னும் ஓர் பதிகம் பாடிப் பணிசெய்து நீங்கப் பெற்றனர் என்ற வரலாறு அவர் புராணத்துட் காண்க. (திருஞான - புரா - 567 - 570). அஃது ஆண்டுக் கூறப்படும் தகுதிபற்றி இங்குக் குறிப்பிற் கூறியமைத்துப் போந்தனர்.

கைத் தொண்டாகும் படிமை - என்பது பாடமாயின், படிமை முறைமை என்றுரைத்துக் கொள்க.

பெற்றுவந்தார் - காலம் தவறு தீரும்வரை ஒன்றுபோலவே பெற்றனர். என்ற தொடர்ச்சி குறிக்கப் பெற்றனர் என்னாது பெற்று வந்தார் என்றார்.

பெற்று - உவந்தார் என்று பிரித்துரைத்தலுமாம். காசுபெற்ற கால முறைபற்றிப் பிள்ளையார் பெற்ற வகையினை முன்வைத்தார். பின் பெற்றமையால் வாகீசரைப் பாட்டின் கடையில்வைத்துக் கூறினார்.

உண்டவர்தம் - என்பதும் பாடம்.

260

1526.

ஆறு சடைமே லணிந்தருளு மண்ணல் வைத்த படிக்காசால்
ஈறி லாத பொருளுடைய விருவ ருடைய திருமடங்கள்
சோறுநாளுந் தொண்டர்மகிழ்ந் துண்ண வுண்ணத் தொலையாதே
ஏறு பெருமை புவிபோற்ற வின்புற் றிருக்கு மந்நாளில்,

261

1527.

காலந் தவறு திர்ந்தெங்குங் கலிவான் பொழிந்து புனல்கலந்து
ஞால மெல்லாங் குளிர்தூங்கி யுணவு பெருகி நலஞ்சிறப்ப
மூல வன்ப ரிருவர்களு மொழிமா லைகளும் பலசாத்தி
நீல கண்ட ருறைபதிகள் பிறவும் வணங்க நினைவுற்றார்.

262

1526.(இ-ள்.) ஆறு....படிக்காசால் . கங்கையாற்றினைச் சடையின்மேல் அணிந்தருளும் பெருமையுடைய இறைவர் வைத்த படிக்காசின் உதவியினால்; ஈறு இலா...திருமடங்கள் - முடிதல் இல்லாத பொருள் பெற்றுடையார்களாகிய இரு பெருமக்களுடைய திருமடங்களின்கண்ணும், தொண்டர் மகிழ்ந்து நாளும் சோறு உண்ண உண்ண சிவனடியார்கள் மகிழ்ச்சியுடன் நாள்தோறும் வந்து சோறு உண்ண உண்ணவும், தொலையாதே ஏறு பெருமை - குறைவு படாமல் ஓங்கி வளரும் பெருமையினை; புவிபோற்ற - உலகம் ஏத்த; இன்புற்றிருக்கும் அந்நாளில் - இன்பமடைந்திருந்த அந்நாள்களில்,

261

1527.(இ-ள்.) காலந்தவறு...நலஞ்சிறப்ப - காலநிலைமையாகிய வறுமை நீங்கி, முழக்கமுடைய மேகங்கள் மழைபெய்ய அந்நீர் பெருகிப் பரந்து உலக மெங்கும் குளிர்ச்சி மிகுந்து உணவுப் பொருள்கள் பெருக விளைந்து நன்மை நிலை