பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்435

 

சிறந்தோங்கவே; மூல அன்பர்...பல சாத்தி - உலகம் நலமடைதற்கு மூலமாக நின்ற அன்பர்களாகிய இருபெருமக்களும் மொழிமாலைகளாகிய தேவாரப் பதிகங்கள் பலவற்றையும் சாத்தி; நீலகண்டர்..நினைவுற்றார் - நீலகண்டராகிய இறைவர் எழுந்தருளிய பிற தலங்களையும் சென்று வணங்கவேண்டுமென்று நினைந்தார்கள்.

262

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

1526.(வி-ரை.) ஆறுசடைமேல் அணிந்தருளும் - பகீரதனுக்காகக் கங்கையைச் சடையுள் வைத்து உலக மழிந்துபடாமற் காத்தும், பகீரதனது இறந்த மூதாதைகளை உயிர்ப்பித்து நல்வழிப்படுத்தியும் அருளியபடி உலகம் வறுமையால் வருந்தாது காத்தனர் என்பது குறிப்பு.

அண்ணல் வைத்த படிக்காசால் - இறைவன் நாயன்மார்களுக்குப் படிக்காசு வைத்தமை அவர்களது திருவாக்காகிய தேவார அகச்சான்றுகளாலும் பிற திருவாக்குக்களாலும் அறியப்படும். "வம்மின்னடி யிர்நாண்மல ரிட்டுத்தொழுதுய்ய, வும்மன்பினொ டெம்மன்பு செய்து" (நட்டபாடை - மிழலை - 3), "கலைநிலவிய புலவர்களிடர் களைதருகொடை பயில்பவர்மிகு" (திருவிராகம் - மேற்படி - 3), "வாசி தீரவே காசு நல்குவீர்", "கறைகொள் காசினை, முறைமை நல்குமே" (திருவிருக் - குறிஞ்சி - மேற்படி - 1 - 2), "கரக்கை தவிர்மினே" (மேற்படி - 8), "அடியவர் குழுமிட வவனியில் நிகழ்பவர்" (வியாழக்குறிஞ்சி - மேற்படி - 4), "மற்றுமுள மன்னுயிர்களுக், கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்த வெழிலார்" (திருவிராகம் - மேற்படி - 3), "நண்ணிவரு நாவலர்க ணாடொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ்சேர்" (மேற்படி - 6) முதலியனவாய் வரும் இத்தலத்துப், பிள்ளையார் தேவாரங்களும்; "என்பொனே....நன்பொனே... செம்பொனே திருவீழிழலையுள்" (குறுந்), "பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு, வாட வாட்டந் தவிர்ப்பா ரவரைப் போல், தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா, வோடிப் போந்திங் கொளித்தவா றென்கொலோ" (குறுந்), "பந்தமும் வீடும் பரப்புகின்றீர்" (2), "விலக்கின்றி நல்கும் மிழலை" (3) (திருவிருத்தம்) என்பன முதலிய நாயனார் தேவாரங்களும்; "பரிசினாலடி போற்று பத்தர்கள் பாடியாடப் பரிந்து நல்கினீர்" (சீகாமரம் - மிழலை - 5), "மிழலை, யிருந்துநீர் தமிழோடிசை கேட்கு மிச்சையாற் காசு நித்த னல்கினீர்" (மேற்படி - 8) என்பனவாதி நம்பிகள் தேவாரங்களும்; "பாடலங் காரப் பரிசில்காசருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி, நீடலங் காரத் தெம்பெரு மக்க ணெஞ்சினுணிறைந்து நின்றாயை" (சேந்தனார் - மிழலை - 12) என்ற திருவிசைப்பா முதலியனவும் காண்க.

ஈறிலாத பொருள் - முடிவில்லாத செல்வம் என்க. படிக்காசால் ஈறிலாத பொருள் என்ற தொடர்புக் குறிப்பினால் உலவாச் செல்வம் - திருவருள் பெறுநிலை - என்ற பொருளும்பட நின்றது.

திருமடங்கள் - இப்பெரியார்கள் தங்குமிடங்க ளெவையும் திருமட மெனப்படும். இங்கு அவை இப்போது அவ்வவர் பேரால் தனிக்கோயில்களாக அமைக்கப்பட்டு வழிபடப்பெறுகின்றன. ஏழனுருபும் முற்றும்மையும் தொக்கன.

தொலையாதே ஏறும் - குறைவுபடாமல் வளரும் என்க.

உண்ண உண்ண - அடுக்கு மிகுதிணயுர்த்திற்று. தொண்டர் உண்ண - நாளும் உண்ண - மகிழ்ந்து உண்ண - உண்ண உண்ண - என்று கூட்டி அளவிறந்த தொண்டர் - எண்ணிறந்த நாட்கள் - மிகமகிழ்ச்சியுடன் - வயிறு நீரம்ப உண்ணவும் என்க.

ஏறு பெருமை - எடுக்க எடுக்கக் குறைபும் இயல்புடைய பொருள், அவ்வாறின்றி, மிகுவதாகிய பெருமை. காசு ஒன்றாயிருந்தும் அதனாற் கொள்ளப்பட்டதாகிய சோறு உண்ண உண்ணக் குறையாது வளர்ந்தது; இது திருவருட் சிறப்பாலாகியது.

புவிபோற்ற இன்புற்று இருக்கும் - "தாமின் புறுவ துலகின் புறக்கண்டு, காமுறுவர் கற்றறிந் தார்" (குறள்).