மீளா நிலையாகிய வீடுபேற்றுக்குக் காரணமாவன. "காசினி மேற் புகழ்விளங்க" என்றும், "நானிலத்துள்ளோர் யாவருக்கும்" என்றுங் கூறுதல் இக்கருத்தை விளக்குவன. கண்டு - அன்னையும் அத்தனும் அகன்றமையும் தமக்கையார் உலகினைத் துறந்து தாபதியாராயினமையும் கண்டும். அநுபவத்தாற் கண்டும். அறங்கள் செய்வாராய் - இந்த அறங்கள், அறச்சாலைக ளமைத்தலாதியாக மேல் இப்பாட்டிலும், மேல்வரும் பாட்டிலும் உரைக்கப்படுவன. இவை "ஈகை வினைத்துறை" என்று தொகுத்துக் கூறப்பட்டன. இவை முப்பத்திரண்டறங்கள் எனப்படும். 1148 பார்க்க. கருணையினால் - அமைப்பார் என்க - ஆசில் அறச்சாலைகள் - இவை அன்னசாலை - மருத்துவசாலை - கல்விச்சாலை முதலியன என்ப. நிதியளித்தல் - இவற்றுக்கு வேண்டிய செலவுக்கு முதற்றனமும் மூலதனமும் கொடுத்தல். தம்மால் இன்னார் என்றறியப்படுதலின்றி இச்சாலைகளுக்கு வரும் யாவரும் பயன்பெற எண்ணுதலால் கருணையினால் என்றும், அளித்து என்றுங் கூறினார். அறச்சாலைகளும் தண்ணீர்ப்பந்தரும் - தண்ணீர்ப்பந்தரும் அறச்சாலையே யாயினும் வெயில் வெப்பம் தாகம் இளைப்பு முதலிய தாபங்களை உடனே தீர்க்கும் அதன் தனிச் சிறப்புநோக்கி விதந்து தனியாக எடுத்து ஓதினார். இதன் இயல்பினை "அளவில் சனம்" (அப்பூதி - புரா - 5) என்ற திருப்பாட்டினால் ஆசிரியர் தனி எடுத்தோதுதல் காண்க. தண்ணீர்ப்பந்தர் வைத்த அறத்தின் பயனாக, அப் பூதிநாயனார், தாம் குருமூர்த்தியாகக் கொண்டொழுகிய திருநாவுக்கரசு, நாயனாரின் அருளை அடைந்துய்ய நேர்ந்த குறிப்பும் காண்க. பசு தருமம் பதி தருமத்துக்கு ஏதுவாகும் சிறப்பும் நோக்குக. "தண்ணீர்ப்பந்தர் சயம்பெற வைத்து, நன்னீர்ச் சேவக னாகிய நன்மையும்" (திருவாசகம்) என்றபடி இறைவனார் தாமே தண்ணீர்ப்பந்தல் வைத்து இவ்வறத்தின் சிறப்பினைக் காட்டிய திருவிளையாடலையும் இங்கு நினைவுகூர்க. ஆசில் அறச்சாலை - "மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்" (குறள்) என்றபடி எல்லா வகையாலும் மாசற்ற மனத்தாற் செய்யப்பட்டவை என்றதாம். மாசின் மனம் என இப்பாட்டினைத் தொடங்கிக் காட்டிய திறமும் காண்க. 35 1301. (வி-ரை.) கா வளர்த்தல்-குளந்தொடுதல்- இவை மக்களுக்கேயன்றி, ஏனைப் பறவை விலங்கு முதலிய உயிர்த்தொகைக்கும் வேண்டுமாறு உதவும் கருணையை மேற்கொண்டன. அன்றியும், ஏனை அறச்சாலைகளில் அடைவோர் அங்குள்ள பிறருதவியை நாடியே பயன்பெற வேண்டியிருத்தலின், அவ்வாறு நாடாது பயன் பெற வேண்டு மக்களும் உளராதலின் அவர்களும் அடையுமாறு கொண்ட கருணைத் திறத்தினையும் இவை உட்கொண்டன. இவை பசு தருமம். நந்தனார் திருப்புன்கூரில் "ஒரு சூழல் அவலோடும் அடுத்ததுகண்டாதரித்துக் குளந்தொட்டார்" என்றறிகின்றோம்; அது வேறு. அது பதிதருமத்தின்பாற் பட்டது. நாயனார் பின்னர்த் திருவருளா லாட்கொள்ளப்பட்ட பின்பு செய்யும் சரியையாதி கருமங்கள் பதி தருமங்களாம். கடப்பாடு வழுவாமல் - கடப்பாடு - நேர்மை. கொடையில் நேர்மை தவறாமையாவது, கொடுப்போன் - கொள்வோன் - கொடைப்பொருள் - கொடைப்பயன் என்பனவற்றை உலகநிலையில் வைத்து ஆராய்ந்து நீதிநூல்களுள் விதித்தவாறு செய்யும் நேர்மை. "தொடுத்த வறுமையும் தூக்கிவழங் குநர்போல" (திருவாதவூ - உப. பட - 2) என்ற திருவிளையாடற் புராணக் கருத்தை நோக்குக. இயற்பகையார் மனைவியாரை ஈந்ததும், சிறுத்தொண்டனார் பிள்ளையைக் கறி சமைத்ததும், வாதவூரடிகள் அரசனது பொருளை அடியார்க் கீந்ததும் முதலியவை |