இப் பகுப்பினின் வேறாய் மேம்பட்ட நிலையிலுள்ளவை. இதற்கு இவ்வாறன்றி, ஈகை நிலையில் குறைவுபடாமல் என்றும், தாம் நிற்கும் நன்னெறியில் வழுவாமல் என்றும் உரைப்பாரு முண்டு. மகிழ்ந்து அளித்தும் - கொடைபுரிவதில் உள்ளநிறைந்த மகிழ்ச்சியும் அளியும் வேண்டப்படுவன. அந்தக் கொடையே பயன்றருவ தென்பது நீதி. "நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம், விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின், அகமலர்ந் தீவார் போல முகமலர்ந், தினிது மொழிந்தாங் குதவுதல்" (திருவிடை - மும் - கோ - 6) என்று இதன் திறத்தினைப் பட்டினத்துச் சுவாமிகள் விரித்தது காண்க. விருந்தளித்தல் - தொடர்பு பற்றாது புதியராய் வருவோர்க்குஉண்டி உறையுள் முதலியன உதவிக் காத்தல். தொடர்பு பற்றாது அளித்தலால் இஃது தேச நெறி நிலையாமை கண்டு செய்யப்படும் அறங்களுள் வைக்கப்பட்டது. சுற்றந் தழுவுதலை விருந்து அளித்தல் என்று மயங்கி உலகர் வழங்குகின்றனர். "விருந்தளிக்கு மேன்மை" (1281) என்றவிடத்துரைத்தவை பார்க்க. நாவலர்க்கு வளம் பெருக நல்கியும் - நாவலர்களைப் போற்றிய சிறப்புப் பழந்தமிழரிடைப் பெரிதும் விளக்கம் பெற்றிருந்தமை புறநானூறு - பத்துப்பாட்டு முதலிய பழந்தமிழர்களா லறியப்படும். வளம்பெருக என்ற குறிப்பும் ஆசிரியர் அதனைப்பாராட்டிய திறமுணர்த்திற்று. நாயனாரிடத்துக் கொடைபெற்ற நாவலர்கள் உண்மையாகவே மிகச் சிறப்புடையரே யாவர்! என்க. நாவலர்களைப் பாராட்டி நல்கிய திறத்தால் நாயனாரும் அதுபோழ்தே நாவன்மையிற் சிறந்திருத்தல் கூடுமென்பது கருதப்படும். நானிலத்துள்ளோர் யாவருக்கும் தவிராத ஈகை - குலம் - குணம் - குறி - கொள்கை முதலியவற்றை நோக்காது எல்லார்க்கும் ஒப்பத் தகுதி கண்டவழிச் செய்யப்படும் அறம் இங்குக் குறிக்கப்பட்டது. இத்திறத்தில் இறைவனடியாரிடமாக நின்று ஒழுகுதல் பதி தருமமாம் என்பது "நலமில ராக நலமதுண் டாக நாடவர் நாடறி கின்ற, குலமில ராக குலமதுண் டாகத் தவம்புரி குலச்சிறை" (புறநீர்மை - ஆலவாய்) என்ற ஆளுடைய பிள்ளையார் திருவாக்காலறியப்படும். ஈகைவினை என்ற குறிப்பும் அது. ஈகைவினைத் துறைநின்றார் - "பிறர்க்குக் கொடாத பண்டங்களை யெல்லாம் நான் இழந்தேன்" என்று ஆங்கில நாட்டுக் கலைஞனொருவன் இதன் உள்ளுறையை உருசிபடக் கூறினன். இந்த அறங்கள் எல்லாம் கொடுத்தல் என்றதொரு செயலையே உள்ளீடாக உடையனவாதலின் ஈகைவினை என்றார். இங்குக் காட்டப்பட்டவை நாயனார் செய்த அறங்களுட் சிலவே. இவைபோல்வன பலவும் அவர் செய்தனர் - அவை யாவும் ஈகை வினைகள் என்ற வழியுட்பட்டனவே என்பார் துறை என்றார். நின்றார் - நிலைத்து நின்றார் என்க. புகழ் என்றும் நிற்பதாம். 36 1302. | நில்லாத வுலகியல்பு கண்டு, "நிலை யாவாழ்க்கை யல்லே"னென் றறத்துறந்து, சமயங்க ளானவற்றின் நல்லாறு தெரிந்துணர நம்பரரு ளாமையினாற் கொல்லாமை மறைந்துறையு மமண்சமயங் குறுகுவார், |
37 1303. | பாடலிபுத் திரமென்னும் பதியணைந்து, சமண்பள்ளி மாடணைந்தார்; வல்லமணர் மருங்கணைந்து மற்றவர்க்கு "வீடறியு நெறியிதுவே"யெனமெய்போற் றங்களுடன் கூடவரு முணர்வுகொளக் குறிபலவுங் கொளுவினார். |
38 |