பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்459

 

பிள்ளையார்பாற்கொண்ட பத்தியைக் காட்டுவது. பிள்ளையார் "திருக்காப்பு நீங்கப் பாடும் அப்பர்!" (1532)என்றது உரிமையும் பெருமையும் காட்டிற்று. அருளும் - என்றதனால் திறந்தும் அடைத்தும் செல்லு நெறி திருந்தும்படி ஆசிபுரிந்து அருளுக என்பது குறித்தபடி.

நிறைந்த - இறைவன் திருவாய் மொழியாலும், எந்தம் பெருமக்கள் திருவாக்காலும் பயிலும் அருள் நிறைவுடைய இதற்கு இவ்வாறன்றித் திறந்த என்று பொருள் கொள்வாரு முண்டு. அது பொருந்தாமையறிக.

"அருளும்" என - மொழிந்த உரைகொண்டு - தமிழ்விரகர் - பாடும் அவ்வளவில் - எடுத்த - திருப்பாட்டிற் - கதவம் - திருக்காப்புச் செய்தது - எனக் கூட்டி முடிக்க. இவ்வாறு இருபெருமக்கள் செயலும் திருவருட் செயலின் வைத்து முடித்த நயமும் காண்க.

நின்ற வாகீசர் - என்பது பாடம்.

271

1537. (வி-ரை.) தாமும் - அரசுகள் தம் உரை கொண்டுபாடியருளியது போலவே தாமும் என இறந்தது தழுவியது.

பண்பின் மொழிந்த உரை கொண்டு - பண்பாவது - முன்பாட்டிற் கூறியபடி திறந்தும் அடைத்தும் செல்லுநெறி திருந்துதல். அரசுகள் தம்பாற்கொண்ட பத்தியுரிமைப் பண்பு என்றலுமாம். உரை கொண்டு உரையை மேற்கொண்டு. உரைத்த அதனாலே. "உரை செய்தருள அதனாலே" (1533) என்றது காண்க.

பாடும் அவ்வளவில் - பாடப்புகும் அந்த மட்டில். அப்போது அவ்வளவில் எடுத்த திருப்பாட்டில் என்று கூட்டியுரைத்தலுமாம்.

கண் பொற்பு அமைந்த நுதல் - காள கண்டர் - கண் அழகு பெற அமைந்த நெற்றி. "கண்ணிற் கணிகலம் கண்ணோட்டம்" (குறள்). "செற்றங் கனங்கனைத் தீவிழித் தான்றில்லைச் சிற்றம்பலவன், நெற்றியிற் கண்கண்டகண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே" (திருவிருத்) என்றபடி அனங்கனை எரித்த அதுவே, ஒப்ப அடியார்க் கருளுந் திறமுடைத்தாலின் பொற்பு அமைந்த என்றார். நாயனார் வேண்டப் பத்துப் பாட்டளவும் கதவம் திறத்தல் தாழ்த்து, இரக்கமில்லீர் என்று அரிதின் வேண்டத் திறந்தும், பிள்ளையார் வேண்ட எடுத்த பாட்டில் எளிதின் அடைத்தும் இவ்வாறு இருவர்க்கும் வெவ்வேறு திறம்பட அருள் புரியும் இங்கு, இறைவரைக் "கண் பொற் பமைந்த" என்ற தென்னையோ? எனின் அவ்வத் திறத்துக் கேற்றவாறு அருள்புரியும் அதுதான் அவரது அருட்டிரு நோக்கின் பெருமை என்பதறிக என்று எடுத்துக் காட்டியபடியாம். "பயன்துய்ப்பான்" (1533) என்று காட்டிய குறிப்பும், திருவீழிமிழலையில் பிள்ளையார்க்கு வாசிபடக் காசு வைத்த திருவருளும், பிறவும் இங்குக் கருதற்பாலன். இக்கருத்தைப் " பாட்டிற்கு நீயு மவனுமொப் பீரெப் படியினுமே" என்று சுவைபடக் கூறினர் சிவப்பிரகாச சுவாமிகள். இனித் தாம் பாடிய அருமையும் அவர்பாடிய எளிமையும் கருதி "நம்பர் திருவருள்ள மறியா தயர்த்தேன்" என நாயனார் நவிலும்போது இறைவர் செய்யும் அருட்டிறங்களையும் இங்குக் காண்க.

அவ்வளவில் - கடிது - உடனே - எடுத்து திருப்பாட்டில் - என்பன எல்லாம் இறைவர் கதவம் அடைப்பித்தருளிய விரைவு தோன்றக் கூறியபடி.

திருக்காப்புச் செய்தல் - அடைத்தல்; மரபு வழக்கு. எடுத்த - தொடங்கிய; முதலாகிய. முன்னர்க் காப்புச் செய்த அந்த மறைகளையே முதலாக வைத்துச் "சதுரம் மறை" என்று தொடர்ந்து எடுத்த என்பதும் குறிப்பு. பாட்டில் - பாட்டுப் பாடிய அளவில்.