எடுத்த திருப்பாட்டில் திருக்காப்புச் செய்தது - என்க. வினைமுற்றை முறை பிறழவைத்ததும் அவ்வருட் செயல் முன்னர் நிகழ்ந்துவிட்ட விரைவு தோன்றக் கூறியபடி. திண் பொற் கதவம் - "திண்ணமாக" - "திண்ணமாக் கதவம்" முதலியவை காண்க. பொன் - அழகு. பொன்பூண்ட என்றலுமாம். மொழிந்தவருள் - திருக்காப்புக் கொண்டது - என்பனவும் பாடங்கள். 272 1538. | அதுகண் டுடைய பிள்ளையார் தாமு மாண்ட வரசுமகிழ்ந் "திதுநம் பெருமா னருள்செய்யப் பெற்றோ" மென்றங்கிறைஞ்சியபின் பதிக நிரம்பப் பிள்ளையார் பாடித் தொழுது பணிவுற்றார்; எதிர்பொற் றிருவா யிலின்வழக்க மென்று நிகழ்ச்சி யெய்தியதால். |
273 (இ-ள்.) அது கண்டு.....இறைஞ்சிய பின் - அவ்வாறு திருவருளால் எடுத்த திருப்பாட்டில் கதவம் காப்புச்செய்த அதனைக் கண்டு ஆளுடைய பிள்ளை யாரும் ஆளுடைய அரசுகளும் மகிழ்ந்து "நமது பெருமான் இதனை அருள்செய்யப் பெற்றோம்" என்று அங்கு வணங்கிய பின்னர்; பதிகம்....பணிவுற்றார் - ஆளுடைய பிள்ளையார் தொடங்கிய திருப்பதிகத்தை நிரம்பப் பாடித் தொழுது பணிந்தனர்; எதிர் பொன்....எய்தியது - (இறைவரது) நேர் முன்பு உள்ள அத்திருவாயிலின் வழக்கம் திறக்கவும் அடைக்கவுமாக உள்ள நிகழ்ச்சி அன்று முதலாக என்றும் நிலவுவதாயிற்று. (ஆல் - அசை.) (வி-ரை.) அதுகண்டு - முன்பாட்டிற் சொல்லிய அந்த நிகழ்ச்சியைக் கண்டு. பிள்ளையார் தாமும் ஆண்ட அரசும் மகிழ்ந்து - இது பிள்ளையாரது அருளிச் செயலாதலின் அவரை முன்வைத் தோதினார். 1534 - 1535 பாட்டுக்களில் இவ்விருவரையும் வைத்துக் கூறிய வைப்புமுறையினுடன் இதனை ஒப்பு நோக்குக. தாமும் - அரசுகளால் உரைசெய்தருளப் பெற்று அதன்படி வேண்டிப் பாடி வேண்டியவாறே இறைவர்பால் எடுத்த திருப்பாட்டிலே கதவம் காப்பிட்டருளப் பெற்ற பிள்ளையாரும் என உம்மை இறந்தது தழுவியது. முன்பாட்டில் "தமிழ் விரகர் தாமும்" என்றதில் தாம் அரசுகளை வேண்டியவாறே அவரால் வேண்டப்பெற்ற தாமும் என்ற அளவில் நின்றது; இங்கு அதனோடு அவ்வாறு பாடியவரும் அருள் பெற்றவரும் ஆகிய என மேலும் சென்றது. அது (கண்டு) - இது - அது - என்றது அவர்கள் கண்ட காட்சியை; இது - அவர்கள் உள்ளத் தெண்ணியதனைத் தன்மையிற் கூறுவதனாலும், பின்னரும் என்றும் நிகழ்வதாகலானும் அண்மைச் சுட்டினாற் கூறினார். நம்பெருமான் - நம் - இருவர்க்கும் ஒப்ப அருளிய குறிப்பிற்கொண்டு கூறிய உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. இறைஞ்சிய - என்றது இறைவரது அருள் நிகழ்ச்சி கண்டவுடன் தம்மிருவர் கருத்தும் நிறைவெய்த அருளியதன்பொருட்டு இருவரும் வணங்கியது. பணிவுற்றார் என்றது பதிகம் நிரம்பப் பாடியபின் பிள்ளையார் தாம் வணங்கியது. பதிகம் நிரம்பப் பாடியபின் - பாடும் அவ்வளவில் எடுத்த திருப்பாட்டிற் கதவம் திருக்காப்புக் கொண்டமையாலும், அவ்வருளிப்பாட்டினைக் கண்டு உடனே இருவரும் இறைஞ்சியமையாலும், பதிகப்பாட்டனரின் பத்தில் ஏனை ஒன்பது பாட்டுக்களும் திருக்கடைக் காப்பும் பாட எஞ்சி நின்றனவாதலின் பதிகம் நிரம்பப் பாடினார். எதிர் - இறைவரது திருமுன்புக்கு நேராகவுள்ளது. "அவிமுகத்துத் திருவாயில்" (திருஞான - புரா - 581). "நேர்வழி" மேற்படி (583). |