தனர். அயர்தல் - தளர்தல். என்று கொண்டுரைத்தலுமாம். "அயலார்போல அயர்வேனோ" - (திருவா - பிரார் - 9) அயர்தல் - செய்தலுமாம். கவன்று - திருவுள்ளம் பற்றாச் செயலிற் றுணிந்தமையும், அதனோடு, பெருங் கருணையாளராய், அருளையேயன்றி வேறு செய்யாதவராய் உள்ள இறைவரை இரக்கமில்லீர் என்று வலிந்து நொந்து கொண்டமையும் தாம் செய்த பிழை என்று கவன்றனர். பெரிதும் அஞ்சி - அந்தப் பிழை பெருமான்பா லபராதமாதலின் பெரிதும் அஞ்சற்பாலது என்றபடி. ஒருபால் அணைந்து - பிழைபட்டமையால் ஏனை அடியார்களுடன் கூடத்தகாதென்று ஒருபுறம் ஒதுங்கி இருந்து. பேழ்கணித்து - கண்மூடிக்கொண்டு. பேழ்கணித்தல் - துயிலின்றிக் கண்மூடியிருத்தல், "பிற்பா னின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியான் பெருமானே" (திருவா - யாத் - 7). மருவும் உணர்வில் துயில்கொண்டார் - அறிதுயில் அமர்ந்தார். உணர்வு மருவும் துயில் - என்றது சாக்கிராவத்தைநிலை மாறாது, துயில் பெறாது, கண்மூடி நிற்கும் நிலை. வாய்மை திறம்பா வாகீசர் - பிள்ளையார் எளிதிற்பாடி அடைப்பித்தமை கண்டு பொறாமை முதலிய திக்குணங்களின் வயப்பட் டெழுந்ததன்று, நாயனார் பால் நிகழ்ந்த இவ்வுணர்ச்சி என்பது குறிப்பு. இங்கு இவ்வாறன்றிப் பிள்ளையார் "கதவந் திறக்கப் பாடும்" என்று தம்மைக் கேட்டபோது தாம் அதற்கிணங்காது அவரையே பாடுமாறு கேட்டிருத்தல் வேண்டுமென்றும், பிள்ளையாரே இக்கதவந் திறப்பித்தற் குரியார் என்பது இறைவர் திருவுள்ளமென்றும், பிள்ளையார் திருத்தொண்டைச் சிறப்பிக்குங் கருத்தால் பிரானார் கருத்தில் சிறிது வேற்றுமை யிருந்ததென்றும் நாயனார் கருதிக் கவன்றனர் என்றும், பிறவாறும் இங்கு நுட்பங் காண்பாருமுண்டு. அவை பொருந்தா என்க. செவ்வி - சமயம் - அறியாது திறப்பித்தமையே தமது பிழை என்பதுவே நாயனார் கருதியது என்பது "பிழைத்துச் செவ்வியறியாதே திறப்பித்தேனக்கு" (1545) என மேல் வரும் பாட்டினால் அறியக்கிடக்கின்றது. யாம்பாட - என்பதும் பாடம். 275 1541. (வி-ரை.) செல்வம் மன்னும் - என்க. செல்வம் - பொருட் செல்வம், அருட் செல்வத்தோடு பொருந்தி நிகழ்தல். "செல்வத் திருமறைக்காடு" (1528) என்று தொடங்கியதனை இக்கருத்துப் பற்றி "முத்தங் கொழிக்கு மறைக்காட்டுக் குன்ற வில்லியார்" (1529) என்று பொருள்விரித்துக் காட்டியது காண்க. மணி - மணி போன்றாராகிய இறைவர். உவம ஆகுபெயர். "கண்ணே கண்ணிற் கருமணிேயே மணியாடு பாவாய்" (ஆவடுதுறை - தாண்ட). மணி - கண்மணி. பொருள்களைக் காட்டும் உபகாரம் செய்தலால கண்மணி உவமமாயிறறு. மணி - முத்து என்று கொண்டு இயல்பாய் ஒளி விடும் தன்மை பற்றிக் கோடலுமாம். முத்து இயல்பாகவே நிறபது; வீடுதரும் தன்மை குறிப்பது. "முத்தங் கொழிக்கும்" (1529). 492-ல் உரைத்தவை பார்க்க. "கடற்றிரை தவழ் முத்தங், கங்கு லாரிருள் போழும் கலிமறைக் காடமார்ந்தார்" என்று பிள்ளையார் தேவாரக் குறிப்புங் காண்க. பாதம் மனத்தின்கண் உன்னித் துயிலும் பொழுதின்கண் - தாம் செய்ததாகக் கருதிய பிழையின்பொருட்டு இறைவரையே நினைந்து என்க. "மருவும் உணர்வு" என முன்பாட்டிற் கூறியது இவ்வுணர்வு. உன்னித் துயிலுதல் - நினைவு மாறாமற் கண்மூடிய அளவில் துயில்கொள்ளுதல். அறிதுயில் என்ப. "உன்னி யுன்னி |