நின்று செய்த உலக தருமங்களையும் குறித்தது. இங்கு அவ்வாறு செய்த அறமும் நிலையன்று எனக்கொண்டு, மனையையும் துறந்து, ஆன்ம விசாரணையிற் புகுந்து, முழுத்துறவு பூண்டனர் என்க. நிலையா வாழ்க்கை அல்லேன் - நிலையுதலில்லாத உலக வாழ்விற் பயனில்லை; அதில் நின்று நான் வாழ்வே னல்லேன் என்ற மனத்துணிவே துறவு பூண்பதற்குக் காரணமாகியது. அற - முற்றும். பொருட் சார்பாகிய மனை - செல்வம் முதலியவற்றையும், உலக உடற்சார்பாகிய தமக்கையார் முதலிய சுற்றத்தையும் என்க. ஆயின் இதன் பினனர்ப் "பண்டையுற வுணர்ந்தார்க்குத் திலகவதி யாருளராக் கொண்டு" (1320) என்ற விடத்து இத்துறவு நிலை மாறியதன் கொள்கை என்னை? எனின், அஃது ஆண்டு விரிக்கப்படும். சமயங்கள்.....அருளாமையினால் - ஆன்ம விசாரணையிற் புகுவது சமய வாழ்க்கையின் தொடக்கம். சமயங்கள் பலப்பலவாக விரிவன. அவ்வாறு உள்ளது இறைவன் றிருவுள்ளமுமாம். "சமயகோ டிகளெலாந் தந்தெய்வ மெந்தெய்வமென், றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும்" என்றனர் தாயுமானார். இவற்றின் நல்லாறு என்றது, "இஃது ஒருபடியின் உண்மை; இஃது அதன் அடுத்தபடி; இஃது அதனினும் மேற்பட்ட மெய்; இஃது முழு உண்மை" என்று படிமுறையில் வைத்து உண்மையை நிறுத்து உணர்தல். தெரிந்து - உணர - என்றது காண்க. தெரிதல் - ஒப்பநாடி ஆராய்தல். உணர்தல் - ஆராய்ச்சியின் பயனாக உண்மை நிலைகண்டு பற்றுதல். இவை அறிவும் அனுபவமும் எனவும், ஞானமும் போதமும் எனவும் படும். நம்பர் அருளாமையினால் - உயிர்களுக்கு அவ்வவற்றின் பக்குவப்பேதம் நோக்கியே அறிவு விளக்கம் தரப்படுதலால் சமயங்களின் நன்மைப் படிமுறையை நாடியறியும் அறிவு, உரிய காலத்தில் வருவதன்றி எல்லார்க்கும் ஒரு படித்தாய் ஒரு காலத்து நிகழாது. ஒரு தாய் பல குழந்தைகட்கும், ஓர் ஆசிரியன் பல மாணாக்கர்க்கும் ஊட்டுவதும் உணர்த்துவதும் போல என்க. இங்குச் சைவ சமயத்தின் நல்லாற்றினை நாயனாருக்கு, இனி, மேல் உரிய முறையாலே சூலையினுருவில் நம்பர் அருள நிற்கும் வரலாறு பின்னர்க் காண்க. இப்போது அருளாமை, முற்பிறவித் தவக்குறைவோ? பக்குவக்குறைவோ? கன்ம பலனோ? கீழ்நிலை தெரிந்துவந்து பரபக்க நிக்கிரகம்செய்ய ஏதுவாதல் காரணமோ? அறியப்படா தென்க. "ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும்......கேட்பான் புகி லளவில்லை கிளக்க வேண்டா" (ஆளுடைய பிள்ளையார்). கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம் - கொல்லாமை என்ற அறத்தின் போர்வையின் கீழே தமது ஏனைக் குறைபாடுகளையும் கொலையினையும் ஒளித்து மறைவொழுக்கம் பூண்ட சமணம் என்னும் சமயம் என்க. இங்குக் கூறியது இடைக் காலச் சமண சமயநிலை என்றும் தலைக்காலச் சமணநிலை மிக உயர்வாகிய தொன்றென்றும் கூறியும், அது சைவ சமயப் பெருநிலையோ டொப்பிடத்தக்க தென்ற கருத்துப்பட உரைத்தும், இங்கு ஆராய்ச்சி செய்வாருமுளர். இடைக்காலச் சமணமோ அன்றித்தலைக்காலச் சமணமோ எதுவாயினும் ஆகுக. சமணம் என்ற சமயம் கொல்லாமை எனும் ஒன்றே அறமாவதென்று கூறி அதனை முற்படக் காட்டிக்கொண்டு நிற்பதென்பது மறுக்கொணாததாகும். அவ்வாறு கூறும் சமயம் அடுபாறை கிடத்தல், மயிர் பறித்தல் முதலிய மெய்வருத்தும் விரத நோன்புகளையும், உயிர் கழிப்பதனையும் பொருளெனக் கொண்டொழுகுதல் முன் கூறிய அதன் அடிக்கொள்கைக்கு மாறுபட்டது என்பது தேற்றம். அன்றியும், தம் சமயத்தில் மேற்பட்ட தரும சேனராகக் கொண்டொழுகிய நாயனாரை அவர்கள் செய்த வஞ்சனையும், கொடுமைகளும், ஆளுடைய பிள்ளையாரது திருமடத்தில் நாடித் தீயிட்டது முதலியனவும் அந்த அறத்தின் கொள் |