தம் நூல்கள் பலரிடையும் பெருமைபெற்று விளங்கும் ஆற்றலினையும் காண்போமானால், அருங்கலை நூல் என்பதன் உள்ளுறை நன்கு புலப்படும். இவ்வாறு அரிய கலை நூல்களானும், கலைஞானப் பயிற்சிகளானுமே அவர்கள் தமது சமயத்தைப் பரவச்செய்து பலப்படுத்திக் கொண்டனர் என்பதற்கு நாட்டுச் சரித்திரம் பலவாற்றானும் சான்று பகரும். மந்திர விஞ்சைக் கலையில் அவர்கள் வல்லவராயினர் என்பதனை "வெந்த ழற்பட விஞ்சைமந் திரத்தொழில் விளைத்தால்" (திருஞான - புரா - 688) "அமண்சமயச் சாதகத்தால்" (1367), "நஞ்சமயத்தினில் விடந்தீர், தஞ்சமுடை மந்திரத்தால்" (1372), "மந்திர சாதக நாங்க ளொழித்திட" (1373), "நங்கள் சமயத்தி னின்றே நாடிய முட்டிநிலை" (1386) முதலியவற்றால் காண்க. பொங்கும் உணர்வு உற - மேன்மேல் எழும் உணர்ச்சியிற் பொருந்த. பொங்குதல் சமயவிசாரஞ் செய்தலில் மேன்மேல் ஆர்வம் கிளம்புதல். துங்கம் - பெரிது - தூலத்தாற் பெரியது. முழுவுடல் - ஒரு பாகமும் மறைக்கப்படாது முழுதும் வெளித்தோற்றப்படும் உடம்பு. உடையில்லாத வெற்றுடல். மகிழ்வார் - கொடுத்தார் - என்று கூட்டுக. மகிழ்வாராகி. எதிர்காலக் குறிப்பு முற்றெச்சம். மேலாம் தருமசேனர் எனும் பெயர் - தருமசேனர் - என்பது சமணர்களிடை வழங்கிய பெருநிலை குறிக்கும் பெயர்களுள் ஒன்று. நந்திசேனர் முதலியவை அவர்கள் தாங்கிய மரபுப் பட்டப்பெயர்கள். "சந்து சேனனுஞ் சிந்து சேனனுந் தருமசேனனுங் கருமைசேர், கந்து சேனனுங் கனக சேனனு முதல தாகிய பெயர் கொளா" (கொல்லி - திருவாலவாய் - 4) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரம் அவர்களது வழக்குக்களை நேரிற் கண்டு காட்டுவதாம். மருணீக்கியார் சமண சமயம் புகுந்து அவர் குழுவில் தருமசேனர் என்ற பெயருடன் விளங்கினார் என்று அவர் சரிதம் பற்றிய தருமசேன புராணம் என்ற சமண நூலும் கூறும். தங்களின் மேல் ஆம் - இனித் தம்மைவிட மேம்பட்டவராக ஆகும் என்ற குறிப்பும் காண்க. பெயர் - நாயனார்க்கு = மருணீக்கியார் என்பது பெற்றோரிட்ட பிள்ளைப் பெயர்; தருமசேனர் - சமணரிட்ட பெயர். திருநாவுக்கரசு - இறைவர் சூட்டிய பெயர்; அப்பர் - ஆளுடைய பிள்ளையார் இட்டழைத்த பெயர்; வாகீசர் - முன்னைப் பிறவியின் பெயர்; என்று இவ்வாறு பல பெயர்களும் கண்டுகொள்க. பெயர் கொடுத்தார் - சமய நிலையில் புகும்போது அதற்கேற்றபடி முன்னைப் பெயரைமாற்றி வேறு பெயர் கொடுப்பது சமய மரபு. சைவத் திறத்தில் இம்மரபு தொன்று தொட்டுத் தீட்சாநாமம் என்று வழங்கப்பெறும். பிறரும் அதனைக் கைக்கொண்டனர் போலும். இவ்வழக்குக் கிறித்தவர்களுள் வழங்குவதும் காண்க. துங்கமுறும் - என்பதும் பாடம். 39 1305. | அத்துறையின் மீக்கூரு மமைதியினா லகலிடத்திற் சித்தநிலை யறியாத தேரரையும் வாதின்கண் உய்த்தவுணர் வினில்வென்றே யுலகின்க ணொளியுடைய வித்தகரா யமண்சமயத் தலைமையினின் மேம்பட்டார். |
40 (இ-ள்.) வெளிப்படை. அந்தத்துறையில் மிக்குப் பெருகிய சிறப்பினாலே உலக உண்மையில் சித்தநிலை யறியாத புத்தர்களையும் வாதினில் ஆராய்ந்து செலுத்திய உணர்வினாலே வென்று, உலகத்தில் அறிவொளிபெற்ற பெரியோராய்ச் சமண சமயத் தலைமையில் மேம்பட்டனர். |