மிக்கார் - குறிப்பு முற்றெச்சம். அவர் - தருமசேனர். அவர் என்ற சேய்மைச் சுட்டும் முன்கூறிய கருத்துப்பற்றியது. "ஆயநா ளிடையிப்பால்" (1292) "ஈங்கிவன் குறித்த கொள்கை யிதுவினி யிவனுக்காக.........உன்பால் ஆங்குநின் றாள்கள் போற்றும்" (காரைக்கால் 49), "முந்நூ லணியுங் கலியாணம் இந்த மனைமற் றந்தமனை யிழந்த ரழுகை" (வெள் - சருக் - 6) முதலியவை காண்க. ஆன்றதவச் செந்நெறி - ஆன்ற - பொருந்திய. அடிப்பட்ட சான்றோராசாரத்தாலும், தொன்றுதொட்டுவரும் மரபாலும், நூல்களாலும் விதிக்கப்பட்ட இங்குக் குறித்த நெறி "அம்பொன் மணிநூல் தாங்காது அனைத்துயிர்க்கு மருள் தாங்கி இம்பர்மனைத் தவம் புரிந்து" (1299) என்று கூறிய தவநெறி. இஃது மனையின் கண் நின்று செய்யப்பட்டது. இது வேறு; இனி, அம்மையார் பாசப் பிறப்பொழியத் திருவதிகை சேர்ந்து செய்யும் சிவநெறித்தவம் வேறு. அது 1309ல் விரிக்கப்படுவது. திலகவதியார் தாமும் - தாமும் - மருணீக்கியார் மனையையும் ஊரையும் துறந்து சென்றதுடன் இவரும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. தொன்னெறியின் சுற்றத்தொடர்பு ஒழிய - சுற்றத் தொடர்பு - பிறவிக் கேதுவாகிய பாசங்கள். ஈண்டுப் பண்டைக்காலமுதல் வரும் சுற்றங்களாகிய தொடர்பு என்றது "தம்பியா ருளராக வேண்டுமென வைத்ததயா" என (1299)ல் குறிக்கப்பட்டது. தம்பியாரின் நலம்பற்றிய தொடர்பு. சுற்றம் - ஈண்டுத் தம்பியார் என்ற அளவில் அமைந்தது. தாம் கொண்ட கணவருடன் செல்லும் திண்மை நெறியினையும் விலக்கி உயிர் தாங்கச்செய்த வலியுடைமைபற்றி இதனை இவ்வாறு விதந்து கூறினார். தொடர்பு - தொடர்பும். உயர்வு சிறப்பும்மை தொக்கது. யாவராலும் கடத்தற்கரிய இதன் வலிமைகாட்டப், பின்னரும் "பேராத பாசப் பிணிப்பு" என்று மேல்வரும் பாட்டில் இதனை மேலும் சிறப்பித்தார். ஆயின், "பின்பிறந்தார், கோளுறுதீ வினைமுந்தப் பரசமயங் குறித்ததற்கு மூளுமனக் கவலையினால் முற்றவருந் துயருழந்து" (1310) என்றும், "எடுத்தாள வேண்டுமெனப் பலமுறையும் விண்ணப்பம் செய்தனரால்" (1311) என்றும், வரும் நிகழ்ச்சிகள் இதற்கு மாறுபடுவனவோ? எனின், மாறுபடா, அது பின்னர் விளக்கப்படும். சுற்றத் தொடர்பு - தந்தை, தாய், கணவர், உலகம் எனவரும் தொடர்ச்சிகளெல்லாம் இதனுள் அடங்கும். தூய சிவ நன்னெறி - நன்னெறி - ஞானம். இங்கு அம்மையார் நின்றது தவச் செந்நெறியே யாயினும் சுற்றத் தொடர்பாகிய உயிர்ச்சார்பு முதலியவற்றின் தொடர்ச்சி அறாமையின் அது தூய்மை செய்து பிறப்பறுப்பதன்று; பிறப்புக் கேதுவாவது. உலகத் தொடர்பு முற்றும் அறுவித்துப் பிறவி அறுக்க வல்லது சிவநெறியே என்றது குறிப்பு. தூய்மை - என்றதனால் பாசம்போக்கித் தூயதாக்கித் தரும் சாதனமும், நன்மை - என்றதனால் சிவத்தைப் பெறுவிக்கும் பயனும் குறிக்கப்பட்டன. சிவநன்னெறி - சிவனைப் பெறுதற்குரிய ஞானநெறி. "மூக்கணன் றன்னெறியே சரணாத றிண்ணமே" (தேவா). நெறி - ஞானம் என்பர் சிவஞான முனிவர். நன்னெறியே சேர்வதற்கு நாதன் தாள் நண்ணுவார் - ஆயின், நெறி சேர்வதற்கும் அவன் அருள்வேண்டும். "அவனரு ளாலே அவன்றான் வணங்கி" என்பது திருவாசகம். தாள் - அருள் நிறைவு. நன்னெறி - சன்மார்க்கம். நமைகளெல்லாவற்றினும் சிறந்தது வீடுபேறு; ஆதலின் அதனை அடைதற்குரிய நெறி நன்னெறி எனப்பட்டது. நண்ணுதல் - இங்கு வழிபடுதல் என்ற பொருளில் வந்தது. நண்ணுவார் - நண்ணுவாராகி. எதிர்காலத் தெரிநிலைவினை முற்றெச்சம். நண்ணுவார் - சேர்ந்தார் - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. மருணீக்கியார் - குறுகு |