வார் - (1302) பள்ளி மாடணைந்தார் (1303) என்றதனோடு, இங்கு நண்ணுவார் - வீரட்டானஞ் சேர்ந்தார் (1307) என்பதனை ஒப்பிட்டுக் கருத்து நயங்களை உய்த்துணர்க. நாதனருள் - என்பதும் பாடம். 41 1307. (வி-ரை.) பேராத பாசப் பிணிப்பு ஒழிய - பிறவிக்கேதுவாகிய கட்டுக்கள் நீங்க. பேராத - எளிதில் நீங்காத. சிவன்பா லன்பினாலன்றி வேறெவ்வாற்றானும் பெயர்க்கமுடியாத என்ற பொருளில் வந்தது. பிஞ்ஞகன்பால் ஆராத அன்புபெற - பிறவிக் கட்டு நீங்குதற்குச் சாதனமாகிய அன்பு. இது சாதன வியலுள் வைத்து ஞான சாத்திரங்களில் விரிக்கப்படும். ஆராத........அம்மடவார் - அகரத்தைப் பற்றிவந்த முற்றுமோனை. அகரம் போன்ற சிவனுடைய சம்பந்தம் குறித்தது. ஆராத - எப்போதும் நிறைவு பெறாத - போதும் என்ற நிலை வராத. ஆர்தல் - நிறைதல். "ஆரா வியற்கையவா" - குறள். நீரார் கெடிலம் - தூய்மை செய்யும் நீர்மை நிறையப்பெற்ற என்பதாம். நீர் - நீர்மை. "தென்றிசையிற் கங்கையெனுந் திருக்கெடிலம்" (235) பார்க்க. திண்ணன் கெடிலப்புனல், தத்தும் - தடமார் - நலமார் - நிரந்த - உலவு - ஓடும் - தாழும் - நிரம்பு - கெடிலப்புனல் என்று இதன் நீர்ச்சிறப்பை நாயனாரும், "கெண்டைப் பிறழ்தெண்ணீர்" (தக்கராகம்) என்று பிள்ளையாரும், "இரும்புனல்வந் தெறிகெடில" என்று நம்பிகளும் (திருவதிகை - காந்தாரம்) விதந்து கூறினமையால் அந்நீரினையுடைய என்றதும் குறிப்பு. நீடு பெரும் சீரார் திருவதிகை - நீடுதல் நிலைத்திருத்தல்; பெருமை - வலிய திரிபுரங்களையும் எரித்த சுரித நிகழ்ச்சிக்குரிய இடமாதல். சீர் - அடைந்தோரது மும்மலமும் சிதைக்கும் சிறப்புக்கிடனாதல். "திருவரம் அதிகை" (தக்கராகம்) என்பது பிள்ளையார் தேவாரம். திருவதிகை வீரட்டானம் - சிவபெருமான் வீரஞ்செய்த எட்டுத்தலங்களுள் ஒன்று. 234ல் உரைத்தவை பார்க்க. அத்தலங்களாவன : திருக்கண்டியூர் - திருக்கோவலூர் - திருவதிகை - திருப்பறியல் - திருவிற்குடி - திருவழுவூர் - திருக்குறுக்கை - திருக்கடவூர் என்பன. இத்தலங்களைப் "பூமன் சிரங்கண்டி" என்ற திருப்பாட்டு அவ்வவற்றிற் செய்யப்பட்ட வீரங்களுடன் முறைப்படுத்திக் கூறுதல் காண்க. வீரட்டானம் - வீ - ஞானம்; ரம் - சம்பந்தம்; ஞானசம்பந்தமுள்ள இடம் என்றலுமாம். பிணிப்பு ஒழிய - அன்புபெற - வீரட்டானம் சேர்ந்தார் - திருவாமூரில் இருந்தபடியே சாதனமாகிய அன்பினைப்பெற்றுப் பிணிப்பு ஒழியலாமே? எனின், அங்கு மனையும், முன்னை நினைவுகளாகிய பிணிப்புக்களும் ஒழியா; ஆதலின் ஒன்றியிருந்து சிவனையே நினைந்து பணிசெய்ய வேண்டி அம்மையார் திருவதிகை சேர்ந்தனர் என்க. அன்றியும், நீரார் - என்றதனால் தீர்க்கச்சிறப்பும், அதிகை - என்றதனால் தலச்சிறப்பும், வீரட்டானம் - என்றதனால் மூர்த்திச் சிறப்பும் விளங்குகின்ற திருத்தலம் சார்தல் ஏற்ற சாதனமாயிற்று என்பது குறித்தபடி. "மூர்த்தி தலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர், வார்த்தைசொலச் சற்குருவும் தமது தலமாகிய பழையாறையினை விட்டுத் திருநல்லூரில் சேர்ந்து திருமடம் அமைத்து வழிப்பட்டுப் பேறடைந்த செய்தியும், அவ்வாறு உள்ள பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. பிணியொழிய - நீராரும் - சீராரும் - என்பனவும் பாடங்கள். 42 |