பக்கம் எண் :


54திருத்தொண்டர் புராணம்

 

1308.

சென்றுதிரு வீரட்டா னத்திருநத செம்பவளக்
குன்றை யடிபணிந்து கோதில் சிவசின்னம்
அன்று முதற்றாங்கி யார்வமுறத் தங்கையாற்
றுன்று திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்.

43

(இ-ள்.) வெளிப்படை. சென்று, திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியிருந்த செம்பவளக்குன்று போன்று விளங்கும் வீரட்டானேசுவரரை அடிபணிந்து, குற்றமில்லையாகச் செய்யும் சிவசின்னங்களை அன்றுமுதல் தாங்கிக் கொண்டு, அன்பு பொருந்தத் தமது கையினால் பொருந்திய திருப்பணிகளைச் செய்யத் தொடங்கினார்.

(வி-ரை.) சென்று - திருவாமூரினின்றும் போந்து.

செம்பவளக்குன்று - வீரட்டானேசுவரர். உருவம்பற்றி எழுந்த உவமையை உள்ளுறுத்த உருவகம். "செம்பவள வெரிபோன் மேனிப்பிரான்" (திருவங்கமாலை), "பொடியணிபவள மேனிப் புரிசடைப் புராண!" (922), "தெள்ளு பேரொளிப் பவள வெற்பென" (திருநா. புரா - 379 = 1644) முதலியவை காண்க. சிவபெருமான் "சுத்தமார் பளிங்கின் பெருமலை" போல வுள்ளவர் என்பவாயினும், மாசங்காரத்தின்போது கொண்ட நிறம் பவளநிறமென்பர். அன்றியும் "நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி யவனிறமே யென்கின் றாளால்" (காந்தாரம் - கழிப்பாலை 3) என்ற அப்பர் சுவாமிகள் தேவாரக்கருத்துட் கொண்ட காரணமுமாம். இரக்கத்துக்கு நிறம் சிவப்பென்பர். வீரட்டானே சுவரர் திருமேனி மிக உன்னதமாய்ச் செவ்வொளியுடன் விளங்குவதும் உட்கொள்க.

கோது இல் சிவசின்னம் அன்றுமுதல் தாங்கி - கோது இல் - குற்றங்களை இல்லையாகச் செய்யும். விதிப்படி அமைந்த என்றலுமாம். சிவசின்னம் - திருநீறும் கண்டிகையுமாம். அன்றுமுதல் தாங்கி - "அம்பொன்மணி நூல்தாங்காது - அருள்தாங்கி - மனைத்தவம் பரிந்து" (1299) என்ற நிலையிலும் அம்மையார் சிவசின்னங்களைத் தாங்கியிருப்பரேனும் அங்குச் சிறப்பாகக் கொண்டவை கணவனை நினைந்து செய்யும் கைமை நோன்பும், அக்காலங்கழிக்கும் பொருட்டு ஏனை உயிர்களைநோக்கிச் செய்யும் பசுதருமங்களுமேயாம். இங்கு அவை யாவும் ஒழியச் சிவன்பாலன்பு ஒன்றினையே உட்கொண்ட சிவதருமங்களே மேற்கொள்ளப்பட்டன; ஆதலின் அவை சிறப்பாகத் தாங்கப்பட்டமை குறிக்க அன்று முதற்றாங்கி என்று சிறப்பித்தனர். முதல் - முதன்மையாக என்ற குறிப்பும் காண்க. உடலுக்கு நாயகனாகக்கொண்ட கணவனுக்கும் உடற்சார்பாகிய உயிர்களுக்கும் ஆளாதலை ஒழிந்து, "உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்", "எங்கை யுனக்கல்லா தெப்பணியும் செய்யற்க" என்றபடி, "குழையோர் காதற் கோமாற்கே - மீளா வாளாய்" நிற்பதற்குரிய அடையாளம் இச்சிவசின்னங்களாவன என்ற உணர்ச்சியுடன் தாங்கினார் என்க. கோதில் என்ற குறிப்புமது. முன்னரும் சிவநேசமுண்டெனினும் ஏனைய பற்றுக்களும் உடனிருந்தன. இப்பொழுது சிவநேசமொன்றே நின்றது.

ஆர்வமுற - ஆர்வம் - அடங்காது பொங்கி மேல் எழும் ஆசை. "ஆராத அன்பு" (1307). ஆர்வமின்றிச் செய்யப்படும் பணிகள் உரிய பயன்தரா.

தம் கையால் - தமக்குரிய திருப்பணிகளை எவரும் தமது கையினாலே செய்தல் வேண்டும். பிறரைக்கொண்டு செய்வித்தல் அத்துணைச் சிறப்புடையதன்று என்பது.

துன்று திருப்பணிகள் - துன்றுதல் - நெருங்குதல். நெருங்கும்பணிகள் என்றது சிவபெருமானிடத்து உயிர்களை அணுகச்செய்வன என்றதாம். இவை மேல்வரும் பாட்டில் விரிக்கப்படுவன.