1306 - 1307 - 1308 இம்மூன்று திருப்பாட்டுக்களும் முன்னும் பின்னும் தொடர்ந்து செல்லும் கொச்சகக் கலிப்பாவாகிய யாப்பின் வகையுட்பட்டன வாயினும், வேறாய், வெண்டளையான் வந்த கொச்சகக்கலிப்பா என்ற யாப்பினால் அமைத்த அமைதி குறிக்கொள்ளத் தக்கது. சொல்லும் பொருளும் ஒத்தியலுதல் என்ற ஆசிரியரது சிறந்த கவிநலம் இவற்றுட் சிறக்கக் காணவுள்ளது. முன்பின் சரிதம் தொடர்பினுள் அம்மையாரது மன நிலை செயல் நிலை - மாறுபாடுகளை வேறெடுத்து உரிய யாப்பினால் அறிவிக்கும் வகையில் அமைந்த யாப்பின் சிறப்புக் கண்டுகொள்க. 43 வேறு 1309. | புலர்வதன்முன் றிருவலகு பணிமாறிப் புனிறகன்ற நலமலியான் சாணத்தா னன்குதிரு மெழுக்கிட்டு மலர்கொய்து கொடுவந்து மாலைகளுந் தொடுத்தமைத்துப் பலர்புகழும் பண்பினாற் றிருப்பணிகள் பலசெய்தார். |
44 (இ-ள்.) வெளிப்படை. பொழுது விடிவதற்குமுன் திருமுன்றிலே திருவலகிடுதலாகிய திருப்பணிசெய்தும், ஈன்றணியதல்லாத நன்மை மிக்க பசுவின் சாணத்தினால் நன்கு திருமெழுக்கிட்டும், பூக்களைக் கொய்து கொண்டுவந்து மாலைகள் தொடுத்து அமைத்துக் கொடுத்தும் அன்பர்கள் பலரும் பாராட்டும் பண்பினாலே இவ்வாறு பல திருப்பணிகளையும் செய்தனர். (வி-ரை.) இங்குச் செய்யப்பட்டன சைவ நன்னெறிகள் நான்கனுட் சரியை என்ற பகுப்பில் வைத்துப் பேசப்படுவன. புலர்வதன் முன் - ஞாயிறு கிளம்ப மூன்றேமுக்கால் நாழிகைகளுக்கு முன் திருப்பள்ளி எழுச்சி என்ற கால வழிபாட்டின் முன் செய்யப்பட வேண்டியிருத்தலின் முன் என்றார். திருவலகு பணிமாறுதல் - திருமுற்றத்தினைப் பெருக்கித் தூய்மை செய்தல் மரபு வழக்கு. புனிறு - ஈன்றணிமை. ஈன்று பத்து நாட்கள்வரை அந்தப் பசுவின் பால் - சாணம் முதலியவற்றை இறைவனது பூசைக்குப் பயன்படுத்தலாகாது என்பது மரபு. "பெற்ற வன்றே" (1225) என்றவிடத் துரைத்தவை பார்க்க. நலமலி ஆன் சாணம் - நோய்ப்பசு - மலட்டுப்பசு - சினைப்பசு - மலந்தின்னும்பசு முதலியவற்றின் சாணமாகாது என்பர். நன்கு திருமெழுக்கு இடுதலாவது - இடை வெளி - புள்ளி முதலியன இல்லாமலும், எறும்பு முதலிய உயிர்களுக்குக் கேடு இல்லாமலும் ஒரு சீர்ப்படச் சாணத்தால் மெழுகுதல். மலர் கொய்து.......அமைத்து - 558 - 560, 1022 - 1026 பாடடுக்களில் உரைத்தவை யெல்லாம் இங்கு நினைவுகூர்தற் பொருட்டு, மலர்கொய்தல் - கொடுவருதல் மாலை தொடுத்தல் - என்ற செயல்களைத் தனித் தனிக் குறித்தார். முன் விரித்தபடியால் இங்குச் சுருக்கிச் சுட்டினார். பலர்புகழும் பண்பு - ஆன்று அவிந்து அடங்கிய அன்புடையடியவர் பலரும் எடுத்துப் புகழும் தன்மை. ஏனையோரது இகழ்ச்சியும் புகழ்ச்சியும் பொருளல்ல. திருப்பணிகள் பல - திருவிளக்கிடுதல், புகழ்ந்து பாடுதல், வலம்வருதல் முதலாயின. கழறிற்றறிவார் புராணம் 9-ம் பிறவும் பார்க்க. |