பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்57

 

குறைந்தடைதல் - பணிவுடன் தாழ்தல். "தாழ்வெனுந் தன்மையோடு சைவமாஞ் சமயம் சாரும் ஊழ்" என்பது காண்க. "எளியோனை வந்திரங்கி என்று கொண்டாய்" - "பித்தனேன்......பிழைத்தனக ளெத்தனையும் பொறுத்தாயன்றே" என்று பலவாறும் தமது சிறுமையினையும், இறைவனுடைய பெருங்கருணையினையும் எண்ணி எண்ணி ஏசற்றிருத்தல். "என் செய்வான் றோன்றினேன் ஏழை யேனே" என்ற குறிப்புடைய குறைந்த திருநேரிசைப் பதிகக் கருத்தினையும், அதனை ஆசிரியர் "குறைந்தடைந்த நேரிசை" (திருநாவு - புரா - 414) என்றதும் கருதுக. "பணி செய்து அங்கு உறைந்து அடையும்" என்று பாடங்கொண்டு அதற்குத்தக உரைப்பாருமுளர். நன்னாளில் - நன்மை - இயற்கை யடைமொழி. ஈசனிடம் குறைந்தடையும் நாட்களே நன்னாட்கள்; ஏனையவை அவமே கழிபவை என்பது அன்றோர் துணிபு. "பேசாத நாளெல்லாம் பிறவா நாளே," "சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே", "பயிலாதே பாழேநா னுழன்ற வாறே", "சாராதே சாலநாள் போக்கி னேனே", "போற்றாதே யாற்றநாள் போக்கி னேனே", "சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே", "கருதி யேத்தப், பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே" முதலியவை இவ்வாறு குறைந்தடையும் நாட்களே நன்னாட்கள் என்று கொள்வோரது உள்ளக் குறிப்பை விள்ளுவன.

கேள் உறும் அன்பு உற ஒழுகும் கேண்மையினார் - கேள் - இங்கு உடற் சுற்றம் குறிக்காது, உயிர்க்குத் துணையாகிய சிவனும் சிவனடியார்களும் அடிமைத்திறமும் ஆகிய உயிர்ச்சுற்றம் குறித்தது. "அப்பனீ அம்மைநீ யையனுநீ அன்புடைய மாமனு மாமியுநீ" (திருத்தாண்டகம்), "கேளுந் துணையும் முதற் கேடில்பதங்க ளெல்லாம், ஆளும் பெருமா னடித்தாமரை யல்ல தில்லார்" (976), "உறவாவா ருருத்திரபல் கணத்தி னோகள்" (மறு - தாண்), "சுற்றம் மாசிலா வீசுனன்பர்" (திருவிளை - புரா) முதலியவை காண்க. அடியார்களிடத்து அன்பு பொருந்த ஒழுகுதல் சரியையின் பகுதி என்பது முன்காட்டிய இலக்கணங்களாலறிக. "கேளீரேயாகி" (ஏயர்கோன் - புரா - 404) பார்க்க.

ஒழுகும் கேண்மை - ஒழுகுவதாகிய நிலையில் நின்ற கேண்மை. பிறிதினியையு நீக்கிய விசேடணம். இங்கு அம்மையார் "பேராத பாசப்பிணிப்பு ஒழிய" நின்ற அடிமைத் திறமாகிய ஒழுக்கமும் குறித்து நின்றது.

அம்மையார் தம் பின் பிறந்தாரை இங்கு எண்ணியது உடற்சார்பு பற்றிய உலக நிலைக் கேண்மையினாலன்று; உயர்ந்த சிவச்சார்பு பற்றிய அடிமைத்திறத்தில் வைத்த கேண்மையினாலாகியது என்றபடியாம். முன்னர்த் "தம்பிரா ருளராக வேண்டுமென வைத்ததயா" (1299) என்றது வேறு; இங்குத் "தம் பின் பிறந்தார் பரசமயங் குறித்ததற்கு மூளுமனக் கவலை" என்றது வேறு; இது தம்பியாரின் உயர்ந்த உயிரின் மேன்மை நிலையினை உட்கொண்டெழுந்தது என்பது. "அவமொன்று நெறிவீழ்வான் வீழாமே யருளும்" , "ஈண்டுவினைப் பரசமயக் குழிநின்று மெடுத்தருள வேண்டும்" என்றவற்றாற் கண்டுகொள்க. முன்னர்க் கருதியது அவர் உயிருடன் வாழ்தல் மட்டுமாம்.

கேள் உறும் அன்பு - நூல்களுள் விதந்து கேட்கப்படும் அன்பு என்று உரைப்பாருமுண்டு.

கோள்உறு தீவினை முந்த - கோள் உறுதலாவது - பற்றித் தன்வயப்படுத்திக் கொள்ளுதல். இத்தீவினை அவர் பரசமயங்குறித்ததனாலறியப்பட்டது. குறித்தல் குறிக்கோளாக அடைதல்.

துயருழந்து - துன்பத்தினுள் மூழ்கியதனால் - உழந்ததனால் காரணப் பொருட்டாய் வந்த வினையெச்சம்.