1608.(வி-ரை.) பல்பதியும் நெடுங்கிரியும் படர் வனமும் - பல்பதி - திருத்தணிகை வளைகுளம் முதலியன; நெடுங்கிரி - நகரி மலை, குன்றவர்த்தனம், இராஜிகுண்டாமலை முதலியன; படர் வனம் - மலைகளினிடையே பரந்த காடுகள். இந்நாடு முழுமையும் இந்நாளினும் மலைகளும் வனங்களுமாயுள்ளது காண்க. திருக்காரிகரை - தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. "கடங்களூர் திருக்காரி கரை கயிலாயம்" (நம்பி - கொல்லி - இடையாற்றுத் தொகை - 3). திருவாலங்காடு திருப்பாசூர் முதலிய தலங்களை வணங்கி, ஆளுடையபிள்ளையாரும் இவ்வாறே இங்குப் போந்து வணங்கித், திருக்காளத்தி சென்றருளிய வரலாற்றை "மென்புனனாட் டினையகன்று வெற்புங் கானுந், தொக்கபெரு வன்புலககானடைந்து போகிச் சூலகபா லக்கரத்துச் சுடரு மேனி, முக்கண்முதற் றலைவனிட மாகி யுள்ள முகினெருங்கு காரிகரை முன்னர்ச் சென்று, புக்கிறைஞ்சிப் போற்றிசைத்தப் பதியில் வைகிப் பூதியரோ டுடன் மகிழ்ந்தார் புகலி வேந்தர்" (1014) "இறைவர்க் காரிகரை யிறைஞ்சி யப்பா லெண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்....." (1015) என்று ஆசிரியர் அவர்தம் புராணத்து விரித்தருளல் காண்க. இஃது மலையுங் காடுமடர்ந்த நாட்டினிடையில் உள்ளது. M. S. M. இருப்புப் பாதையில் அரக்கோணம் - ரேணுகுண்டா வழியில், புத்தூர் என்ற நிலயத்தில் இறங்கி, அஙகு நின்றும் கிழக்கு நோக்கி ஊத்துக்கோட்டை செல்லும் வண்டிப் பாதையில் 5 நாழிகை யளவில், ஆரணிய நதியைத்தாண்டி, அதன் வடகரையில் உள்ளது. பதிகங்கள் கிடைத்தில, இருநாயன்மார்களும் இவ்வழியே போந்தருளியமையால் இஃது. அந்நாளில் பெருந்தலமாயிருந்திருத்தலும், திருவாலங்காட்டினின்றும் செல்வோர், திருப்புத்தூரினின்றும் ஊத்துக்கோட்டை சேர்ந்து அங்கு நின்று வடக்கே வண்டிப்பாதை வழியே திருக்காளத்தி செல்வது பெரும் வழக்காகிய வழியா யிருந்திருத்தலும் கூடும் என்று கருதப்படும். அடைவார் - பணிந்து - எய்தினார் - என்று முடிக்க வைத்தோதிய கருத்துமிது. செல்கதி முன் அளிப்பவர் - செல்கதி - உயிர்கள் செல்லவேண்டிய கதி; சிவநெறி. முன் - வந்து வணங்காமுன். விரைவு குறித்தது. தொல்கலையின் பெருவேந்தர் - கலைஞானங்கள் எல்லாம் கைவரப்பெற்று இணையின்றி விளங்கியவர்; கலை ஞானங்கள் எனப்படும் அபரஞானங்களின் அரிய பெரிய உண்மைகள் பலவும் நாயனார் திருவாக்கில் அங்கங்கு ஒவ்வோர் சிறிய உவமை முதலிய துணுக்குகளாக எளிமைப்பாடு பெற அமைந்து கிடந்து விளங்கும் பெருமை குறிக்க இவ்வாறு விதந்தோதினார். "சென்றுருளும் கதி ரிரண்டும் விசும்பில் வைத்தார்"; "கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்தொன்றாகி, யுருவாகிப் புறப்பட்டு", "பூத்தானாம் பூவினிறத்தானாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற, கோத்தானாம்"; "வித்தா முளையாகும் வேரே தானாம்"; "ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்களின் கலைஞான நுட்பங்களையும், பதி பசு பாச விலக்கண முதலியவற்றைக் கூறும் திருவாக்கு நுட்பங்களையும் காண்க. சிவக் கலையாகிய பரஞானம் பெறச் சாதகமாதலின் தொல்கலை என்று சிறப்பித்தார். தொண்டர்கள் பின் உம்பர்குழாம் மல்கு - தேவர்கள் தொண்டர்களின் பின்னே அவர்களது ஆணை வழி நிற்கக்கடவர் என்ற கருத்து. "காலநேர் படுதல் பார்த்தய னிற்பக், காத லன்பர்கண நாதர் புகும்பொற், கோலநீடு திருவாயில்" (தில்லை; 249). "வாழ்ந்திமையோர் குழாநெருங்கு மணிநீள் வாயில் மருங்கிறைஞ்சி யுட்புகுந்து" (திருக்காளத்தி; திருஞான - புரா - 1022) முதலியவை காண்க. மாமலை - திருமலை; திருக்கயிலை என்ற குறிப்பு. 1612-ம் இவ்வாறே வரும் ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பிகள் சரித வரலாறுகளும் நினைவு கூர்க.  திருக்காரிகரை - முகப்பு (இராமகிரி)
|
|