திருப்பணியாயின - வாக்குத் தொண்டும் கைத் திருத்தொண்டும் முதலாயின. ஆயின - அமைந்தவை - ஏற்றவை என்றலுமாம். தாணுவினை.....குறிப்பினால் - தாணு - சிவபிரான். "பொழிலேழுந் தாங்கிநின்ற கற்றூண்காண்" என்ற திருத்தாண்டகத்தின்படி இங்கு இறைவர் உலகமெல்லாந் தாங்கும் தூண் போன்றிருக்கும் நிலையும் குறிப்பிடத்தக்கது. (தாணு - தூண்). அம்மலைமேற் பணிந்த குறிப்பினால் - அந்த மலை தென்கயிலாய மாதலின் அது திருக்கயிலை மலையினை நினைவூட்டிற்று என்க. இது கயிலையே என்று திருமனத்துட்டோன்றும் அருட் குறிப்பு. ஆளுடைய பிள்ளையாரும், ஆளுடைய நம்பிகளும் இவ்வருட் குறிப்புக் கொண்டே இங்கு நின்ற வண்ணமே திருக்கேதாரம் முதலிய வட கயிலைத் தலங்களைப் பாடியருளிய வரலாறுகளும் இங்கு நினைவு கூர்தற்பாலன. (திருஞான - புரா - 1026); (ஏயாகோன் புரா - 198). குறிப்பினால் - காளத்தி தென்கயிலை என்ற மரபுடனே, நக்கீரனார் கயிலைபாதி காளத்தி பாதி யந்தாதி பாடியமையும், கண்ணப்பர், முன்னை நிலையில் அருச்சுனராகிக் கயிலையில் தவஞ்செய் கேட்ட வரத்தின் தொடர்ச்சி பற்றிக் காளத்தியிற்போந்து முத்திபெற்றமையும், பிறவும் திருவுள்ளக் குறிப்பில் நிகழ்ந்த அதனால் நாயனாரது சரிதப் பின் னிகழ்ச்சிகள் நிகழ்விக்கவுள்ள அருட்குறிப்பு. 751 முதலியவையும் பார்க்க. பேணு - இறைவர் விரும்பி வீற்றிருக்கும். மெய்யடியார்கள் எல்லாரும் பேணுகின்ற என்றலுமாம். பெருங்கோலம் - 1638 முதல் 1644 வரை கூறப்படும் கோலம். உலகம் எங்கும் காணப்படுவது இதுவேயாதலின் பெருங்கோலம் எனப்பட்டது. காணுமது......காவலனார் - இவ்வடி முற்றுமோனை. இவ்வாறு எழுந்த காதல் பின்னர் முற்றும் வகையைக் குறிப்பில் உணர வைத்த திறம் காண்க. கயிலையிற் காணுமது என்னாது கோலம் காணுமது என்றதனால், அதனையே ஐயாற்றிற் கண்டனர் என்பதும் குறிப்பு. "வைதெழுவார் காமம்பொய் போகாவடி...கைதொழுது நாமேத்திக் காணும்படி" (திருவடித்தாண் - 3) என்றபடி நாயனார் கொண்ட திண்ணிய காதல் பொய்போகாது நிறைவெய்தப்பெற்ற திறமும் காண்க. மயிலையின் குறிப்பல் மகர முற்றுமோனை பெறவைத்தது போல (1596- 1597), இங்குக் கயிலையின் குறிப்பில் ககர முற்றுமோனைபெற வைத்த நயம் காண்க. கலைவாய்மைக் காவலனார் - ஏனை ஆசாரியான்மார்களும் திருக்கயிலையினை இங்கு நின்றுபோற்றினார்கள். அவர்கள் காணுமது காதலிக்காது நின்று துதித்து அவ்வளவில் உலகை வழப்படுத்தியருளினர்; ஆனால் நாயனார் தாம் பேணு மது மட்டோடமையாது, காணுமதுவும் காதலித்து அவ்வழியே உலகையும் ஊக்கினர். அதுபற்றி யன்றே அடியவர் பரம்பரையில் இந்நாள் வரையில் திருக்கயிலாய மகாயத்திரையும் வழிவழி நிகழ்ந்து வருவதாயிற்று!. கலைவாய்மைக் காவலனாராதலின் காதலித்தார் என உடம்பொடு புணர்த்தி யோதியருளிய திறமும் சிந்திக்க. "தொல்கலையின் பெருவேந்தர்" (1608) பார்க்க. சரியை முதலிய சாதனங்களைக் கூறும் அரஞானமாகிய சிவக்கலையும், அதன் வாய்மையாகிய சாத்தியச் சிவயோக போக விளைவுகளும் உலகில் நின்று நிலவும்படி காவல் செய்பவர் என்பார் கலைவாய்மைக் காவலனார் என்றார். "கற்றதனா லாயபயன்" (குறள்), "அலகில்கலைத் துறைதழைப்ப" (1283) என்றவையும் கருதுக. அம்மலைமேல் தாள்பணிந்த - அகரச்சுட்டாகிய சேய்மைச் சுட்டினாற் கூறிய ஆற்றலினாலும், சேணிலவு திருமலை என்ற குறிப்பினாலும் அம்மலை என்றது திருக்கயிலாயமலை என்றே கொண்டு, தாம் முன்னை நிலையில் வாகீச முனிவராகத் திருக்கயிலையில் பணிசெய்திருந்த குறிப்பு என்றுரைக்கவும் நின்றது. 347 |