பக்கம் எண் :


586திருத்தொண்டர் புராணம்

 

வேறு

1613.

அங்கண் மாமலை மேன்ம ருந்தை வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலி னுத்த ரத்திசை மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு தொடர்ந்து நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை யண்ணன் மேவு திருபப் ருப்பத மெய்தினார்.

(இ-ள்.) அங்கண்....வணங்கி - அங்கண்மையுடைய, அத்திருமலையின்மேல் மருந்தாகிய இறைவரை வணங்கி; ஆர் அருளால் - அவருடைய நிறைந்த திருவருள் பெற்றமையினாலே; மிக.....போதுவார் - மேன்மேல் மிகவும் பொங்குகின்ற காதலினால் வடதிசையை நோக்கி விருப்பத்தோடும் போவாராய்; துங்க...பின் - பெரியனவாகிய பெருமலைகளையும், கான்யாறுகளையும், தொடர்ந்துள்ள நாடுகளையுங் கடந்து சென்ற பின்பு; செங்கண்...எய்தினார் - சிவந்த கண்ணையுடைய மால்விடையினை உடைய சிவபெருமான் பொருந்தி எழுந்தருளியிருக்கும் திருப்பருப்பதத்தைச் சேர்ந்தனர்.

(வி-ரை.) அங்கண் - மருந்து என்று கூட்டுக. அங்கண்மையாவது அருணோக்கம் அறக்கருணை மறக்கருணை என்ற இரண்டு வகையிலும் எல்லா உயிர்கள் மாட்டும் வைத்தல். "காமனையு முடல்கொண்டார் கண்ணானோக்கிக் கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே" (பொது - தாண்) என்ற இடத்துக கண்ணானோக்கி என்று சிங்க நோக்காக இடையில் வைத்துக்கூறிய நாயனாரது திருவாககின் கருத்துச் சிந்திக்க. "அங்கணர் கருணைகூர்ந்த அருட்டிரு நோக்கமெய்த" (753). அங்கண் - அவ்விடத்து என்றுரைத்தலுமாம்.

மேன் மருந்தை - மேலாகிய மருந்து. மருந்து எல்லாவற்றினும் சிறந்த மருந்து. மருந்து போல்பவரை மருந்தென்றது உபசாரம். "மலைமருந்தை" (784) என்ற விடத்துரைத்தவை பார்க்க.

ஆர் அருளால் - பொங்கு என்றும், அருளால் - போதுவார் என்றும் கூட்டி ஏற்றபடி உரைக்க நின்றது. அருளால் - வணங்கி அருள் விடை பெற்று அத்துணை கொண்டு.

மிகப் பொங்கு காதல் - அமைவுபடாது மேன் மேலும் ஊற்றெடுக்கும் ஆசையின் மிகுதி.

உத்தாத் திசை மேல் - வடக்கில் திருக்கயிலாயத்தின் திசையை நோக்கி.

துங்கம் - பெரிது. இதனை, வரை - யாறு - நாடு - என்ற மூன்றுடனும் தனித் தனி கூட்டுக. வடதிசை செல்லச் செல்ல மலைகளும் யாறுகளும் அவை தொடர்ந்த நாடுகளும் மிகப் பரந்தும் நீண்டும் பெரிய அளவுள்ளவை. இது குடிவளம் குறைந்த மலைகளும், காட்டாறுகளும் பெருவெளியான நாடுகளும் ஆக உள்ள பரந்த தரைப்பகுதி. இவை இப்போது தெலுங்கு தேசமாக உள்ளன. மலைகளும் ஆறுகளும் தெலுங்குப் பெயர்களா லறியப்படுகின்றன.

செங்கண்.....திருப்பருப்பதம் - செங்கண்மால் விடை - நந்திதேவர். அண்ணல் விடைமேவு திருப்பருப்பதம் - என்று கூட்டுக. நந்திதேவர் தவஞ்செய்து இந்தமலை யுருவமாயிருந்து இறைவரைத் தாங்குகின்றார் என்னும் தலவரலாறு குறிக்க இவ்வாறு கூறினார். இன்றும் நந்தியால் - (Nandyal) என்ற ஊரினின்றும் இத்தலத்தை யடையும் வழியும், நந்தியால் என்ற பெயரின் வழக்கும், கருதுக. "செங்கணமால் பரவி யேத்திச் சிவனென நின்ற செல்வர்" "அடல்விடையூர்தி யாகி" (10) என்ற இத்தலத் திருநேரிசைகளும் காண்க.