நிகழ்ந்து வருவன என்பதும் காண்க. இகந்து - கடந்து மேற்சென்று. இகந்து என்ற இகழ்ச்சி குறித்த இலேசினால் அறங்கள் மிக்கனவாயினும் அவை பசு புண்ணியங்களேயாவனவாதலின் அவை யொன்றும் நாயனாரது மேற் செலவைப் பிணித்தில என்பதும் குறிக்கப்பட்டது. மங்குல் சுற்றிய வெற்பு - சுற்றிய - சூழந்து தலையில் முடிப்பதுபோல மேகங்கள் இம்மலைச் சிகரங்களைச் சூழ்ந்தன என்பதும் குறிப்பு. மலைகளின் உயர்ச்சி குறித்தது. மத்திம பைதிரம் - பைதிரம் - நாடு. Central Provinces என்பர் நவீனர். பரதகண்டத்தின் மத்தியப்பிரதேசம் என்பதுமாம். பிரயாகைக்கு மேற்கும் விநசத்துக்குக் கிழக்குமாகிய தேசம் என்பர் ஆறுமுகத் தம்பிரானார். மத்திய - என்பதும் பாடம். 352 1618. (வி-ரை.) அன்ன நாடு - மத்திம பைதிரம், உட்பிரிவுகளாகிய பல நாடுகளைக் கொண்டமை குறிப்பு. தெய்வக் கங்கை முதலிய நீர்ச் சிறப்பினால் அன்னங்கள் மலியும் நாடு என்ற குறிப்பும் பெறவைத்த கவிநலமும் காண்க. இந் நாடுகளில் ஒன்றாகிய நிடத நாட்டரசனாகிய நளன் கதையில் அன்னத்தை் தூது விட்ட வரலாறும், இராமன் கதையில் "அன்னப் பேடை சிறையில் தாய்க்கரை, துன்னிற் றென்னவும்" என்று உவமை கூறும் கம்பர் பாட்டும் கருதுக. கங்கை அணைந்து சென்று வலங்கொளும் - வாரணாசி என்று கூட்டுக. அணைந்து என்றது ஆகாயத்தினின்று போந்தமையும், சென்று என்றது இமய மலையிற் போந்து நிலத்தில் அதுவரை பெருகி ஓடியமையும், வலங்கொளும் என்றது அதுவரை மேற்கினின்றும் கிழக்குநோக்கிப் பெருகிவரும் செலவை மாற்றி வாரணாசியை நோக்கி வடக்கு முகமாக ஓடி வாரணாசியைச் சூழ்வந்து மீளக் கிழக்குப் பார்த்து ஓடுகின்றமையும குறித்தன. வலங்கொளும் - தற்குறிப்பேற்ற அணி. "வம்புலாமலர் நீரால் வழிபட்டுச், செம்பொன் - வார்கரை யெண்ணில் சிவாலயத், தெம்பிரானை யிறைஞ்சலி னீர்ம்பொன்னி, யும்பர் நாயகற் கன்பரு மொக்குமால்" (57) என்று காவிரியைச் சிறப்பித்த கருத்து இங்குக் கருதற்பாலது. காவிரிபோல அத்துணையும் வழிபாடின்றி "வாரணாசி வலங்கொளும்" சிறப்பொன்றுமே குறித்தமையும் கருதுக. இக் குறிப்புப்படக் "காவிரி நாடன்ன கழனி நாடொரீஇ" என்று கூறும் கம்பர் பாட்டும் காண்க. மின்னு வேணியர் - சிவந்து நீண்டு ஒளிவிடும் தன்மைபற்றி மின்னு என்றார். "மின்வண்ண மெவ்வண்ண மவ்வண்ணம் வீழ்சடை" (பொன்வண் - அந் - 1.) தலவிசேடம் :- வாரணாசி - காசி - எனத் தேற்றமாய் வழங்கப்படுவது. இதன் பெருமை காசிகண்ட முதலியவற்றுட் காண்க. விசுவநாதர், விசாலாட்சி யம்மை யாருடன் விளக்கமாய் எழுந்தருளியுள்ள சிறப்புடைய பெருந் தலம். தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. "மதிலுஞ்சை மாகாளம் வாரணாசி" (காப்புத் - திருத்தாண்டகம் - 11) முதலியவை பார்க்க. வரணை - அசி - என்ற இரண்டு நதிகள் இத்தலத்தைத் தெற்கும் வடக்குமாக அந்தர் வேதியாகச் சூழ்ந்து இருப்பதனால் இது வாரணாசி எனப்படும் என்பது காசிகண்டம். "காசியி லிறக்க முத்தி" என்று விளங்க அறியப்படும் முத்தித்தலம். விருப்பினோடு - பணிந்து - தாம் காதலித்துச் சென்ற கயிலாய நாதரே விசுவநாதர் என்ற பெயருடன் அவரது கங்கை சூழ வீற்றிருக்கும் சிறப்புப்பற்றி, "வேறு எம் மருங்குமொர் காதலின்றிச்" சென்ற நாயனார், இங்கு விருப்பினோடு பணிந்தனர் என்பதாம். அன்றி, வடகயிலை கண்டுதொழச் சென்ற நாயனார் வட நாட்டில் வடக்கில் இறைவரைப் பணிந்து வழிபட்ட தலம் இதுவேயா மென்பதும் குறிப்பு. இனிக், கயிலை மலையிற் பணிந்ததும் பாடுவதும் அருவமாய் |