1620. (இ-ள்.) ஆய...அன்பர் தம்மை - அவ்வாறாகிய அச் செறிந்த இருளில் மேற்செல்லும் அந்த அன்பரை; அணைந்து...அஞ்சின - தீய விலங்குகள் நெருங்கிக் கொடுந் தொழிலைச் செய்ய அஞ்சின; நஞ்சு...எடுத்தன - விடத்தை உமிழும் வாயினையுடைய நாகங்கள் தமது படங்களில் உள்ள மணிகளை ஏந்தி விளக்கெடுத்தன; வந்து...முன்னினார் - தேவர்களே யாயினும் இங்குவந்து காலடி வைத்துப் பெயர்க்கும்படி தனியே சேர்வதற்கரிய சுரங்களை முன் அடைந்தனராகவே; 355 1621. (இ-ள்.) அக்கடத்திடை - அந்தக் காட்டினிடத்தே; வெம்கதிர்ப் பகல் - வெவ்விய நண்பகலில்; வெய்யவன் கதிர் - சூரியனது கதிர்கள்; கை பரந்து - மிக எப்பக்கமும் பரவுதலினால்; எங்கும் மிக்க பிளப்பின் - எங்கும் மிகுதியாக உளவாகிய பிளவுகளினூடு; நாகர் தம் எல்லை புக்கு எரிகின்றன - கீழே நாகவுலக எல்லைவரை புகுந்து எரிகின்றன; பொங்கு அழல் தெறு பாலை வெந்நிழல் புக்க சூழல் - பொங்கும் தீயின் வெப்பத்தினால் அழிவு செய்யும் பாலையினது வெவ்விய நிழல் புகுந்த இடத்தில்; புகும் பகல் செங்கதிர்க்கனல் போலும் - புகுகின்ற பகலோனது செவ்விய கதிர்களின் வெப்பத்தை ஒத்திருக்கின்றன; அத்திசை - அந்தத் திசையில்; திண்மை மெய்த்தவர் நண்ணினார் - திண்மையுடைய மெய்த்தவராகிய நாயனார் சென்றடைந்தனர். 356 இந்த மூன்று பாட்டுக்களும் பொருட்டொடர்பு பெற்று ஒரு முடிபு கொண்டு உரைக்க நின்றன. 1619. (வி-ரை.) மாகமீது வளர்ந்த - ஆகாயத்தின்மேல் வளர்ந்த என்றது கானகத்தின் உயர்ச்சி குறித்தது. மனித்தரால் போகலா நெறி - மனிதர்கள் செல்லமுடியாத வழிகள். மனிதர் என்பது மனித்தர் என வந்தது மக்களுள் வல்லவராலும் கூட்டமாயும் என்பது குறிப்பு. "மனித்தப் பிறவியும் வேண்டுவதே" (தேவா). போகல்....அன்றியும் - போகுதல் ஆகும் - கூடும் - வழி அல்லாமலிருந்த போதிலும். கூட்டமாயும் மனிதர் எவரும் போக்கூடாத வழியாயிருந்தும் ஆசை மிகுதியினால் உந்தப்பட்டு நாயனார் தனித்து ஏகினார் என அவரது அன்பின் திண்மை குறிப்பிடப்பட்டது. "வானவ ராயினும் தனி துன்னரும்" (1620) என மேல்வரும் பாட்டில் இதனை மேலும் வற்புறுத்தியதும், அதற்குக் காரணமாவது திண்மை மெய்த்தவமேயாம் (1621) என எடுத்துக் காட்டியதும் காண்க. புரிகின்ற - அன்பு புரிகின்ற எனச் செயப்படுபொருள் வருவிக்க. சாகம் - மூலம் - பலங்கள் துய்ப்பனவும் தவிர்ந்து - சிவயோகிகள் - சிவஞானிகளின் உணவு வகைகள் இங்குக் குறிக்கப்பட்டன. சாகம் - இலை; உதிர்சருகு; மூலம் - வேர் - கிழங்கு; பலங்கள் - கனிகள். ஒரறிவுயிர்களாகிய தாவரங்களுக்கும் துன்பம் செய்யலாகாதென்ற அருளுடைய அறவோர், இவ்வாறு தாவரங்களுக்கும் இனிப் பயன்படாத அவற்றின் பண்டங்களைக் கைக்கொள்வர் என்பது முன்னோர் வழக்கு. "கனியேனும், வறியசெங் காயேனு முதிர்சருகு கந்தமூ லங்களேனும், கனல் வாதை வந்தெய்தி னள்ளிப் புசித்துநான் கண்மூடி மௌனியாகித், தனியே யிருப்பதற் கெண்ணினேன்" என்ற தாயுமானவர் பாடலின் கருத்து, ஈண்டு வைத்துக் கருதத்தக்கது, யோக மோன ஞானிகளும் ஒரோவழிப் பசியால் வருந்துவர் எனவும், அப்போது அவர்கள் சாக மூல பலங்களைத் தேடி உட்கொள்வர் எனவும், மூலக் கனலைக் காலால் எழுப்பி விரித்து தானத் தமிழ்தத்தை உண்பர் எனவும், நாயனார் அவ்வாறு மன்றிப் பசியென்ப தனையே யறியாதவராய்க் கடுஞ்சுரத்தில் இரவும் பகலும் விரைந்து சென்றனர் எனவும், அது கயிலை காணப் பொங்கிய காதலின் வலிமையால் ஆயது எனவும் தெளிதற்பாலது. |