தனித்து - வேறு எவரும் துணையின்றி. நேர் - திருக்கயிலையின் திசையினை நோக்கி நேரே. எய்துவார் - ஏகினார் - எனக் கூட்டுக. செல்லுதலின் தீவிரத்தையும் விரைவையும் குறிக்கப் பயனிலையை முன் வைத்தார். ஏகினார் - ஏகினாராக; முற்றெச்சம். இரவும் - பகலிற் சென்றதுடன் இரவிலும் என உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. குலக்கிரி - பெருமையுடைய மலை. துய்ப்பனவுந் தவிர்ந்து - என்றதனால் பசி தோன்றாமல் என்பதும், இரவும் - என்றதனால் துயில் தோன்றாமல் என்பதும், எய்துவார் நேர் ஏகினார் - என்றதனால் உடல் வருத்தம் தோன்றாமல் என்பதும் கூறப்பட்டன. "மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண்டுஞ்சார்...கருமமே கண்ணாயினார்" என்ற நீதி, நாயனார் செயலில் தேற்றமாக விளங்குதல் காண்க. அழியுந் தன்மையான உலக கருமங்களில் இவ்வாறு உழல்வோர் பலர்; ஆனால் "கயிலைக்கிரி எய்துவதாகிய" உறுதிப் பயன்பெற இத்தன்மை செய்வது செயற்கருஞ் செய்கையாகிய நாயனாரது சிறந்த பெருமையை விளக்குவதாம். 354 1620. (வி-ரை) ஆய - அவ்வாறாகிய. இரவும் ஏகும்போது உளதாகிய. ஆர் இருள் - செறிந்த இருள்; நடுயாம இருள். இருளின்கண் - கண்ணும் எனச் சிறப்பும்மை தொக்கது. இமயமலைச் சாரலாகிய வட துருவப் பக்கத்துப் பகலும் இரவும் செறிவும் நீட்டிப்புமுடையன. அவற்றுள் இரவின் செறிவு இப்பாட்டினும், பகலின் செறிவு மேற்பாட்டினும் கூறப்படுதல் காண்க. அணைத்து....அஞ்சின - நஞ்சுகால் விளக் கெடுத்தன - இரவில், திரியும் புலிமுதலிய கொடு விலங்குச் சாதிகளும், நாகங்களும் நாயனாருக்குத் தீங்கு செய்தில்; கொடு விலங்குகள் தீமை செய்ய அஞ்சி ஒதுங்கி நின்றன; நாகங்கள் தீங்கு செய்யாதொழிந்தது மட்டுமன்றி, மணி விளக்கு எடுத்து நாயனாருக்கு வழி விளக்கிப் பணிவிடையும் செய்தன.Passive and active help என்பர் நவீனர். புலி செந்நாய் முதலியன பாலைக் கருப்பொருள்களாகிய மாக்கள். முன் தீய ஆய - முன் எல்லாம் தீய இயல்பேயுடைய. முன் என்றதனால் இப்போது மட்டில் தம் இயல்பு மாறி நின்றன என்று குறித்தார். வாய் - வாய்த்த என்றலுமாம். முன் அணைந்து - என்று கூட்டி அதற்குத்தக்கபடி யுரைத்தலுமாம். நஞ்சு - கால் - வாய - விடத்தைக் காலும் - உமிழும் - வாயினை உடைய. வாய - வாயினை உடைய. பணங்கொள் மணிவிளக்கு எடுத்தன - என்க. விளக்கு எடுத்தல் - விளக்கினை வழிகாட்டும்படி எந்துதல். அரவங்கள் தமது படத்தில் உள்ள மணிகளை உமிழ்ந்து அந்த ஒளியின் உதவியால் இரவில் இரைதேடும் வழக்கமுடையன என்ற உண்மை தென் கயிலாயமாகிய திருக்காளத்தித் தேவாரத்தினுள் "ஊருமர வம்மொளிகொள் மாமணி யுமிழ்ந்தவை யுலாவி வரலாற், காரிருள் கடிந்து கனகம்மென விளங்கு காளத்தி மலையே" (சாதாரி - 7) என்று ஆளுடைய பிள்ளையார் விளக்குதல் காண்க. கால் தோய - கால் நிலம்பட அடிபெயர்த்து நடக்க. தேவர்கள் கானிலர் தோயாது மேற் செல்லும் இயல்புடையவர்; அவர்கள் கயிலைச்சார்புபற்றி உலவுகின்றபோது தம்மியல்பால் இங்கும் அவ்வாறே கால் நிலந்தோயாது செல்வதற்கு ஒரு காரணங் கற்பித்தவாறு. |